Get it on Google Play
Download on the App Store

தமிழ்நாட்டு வரலாற்றுக் கண்ணாடி

 

 

←தமிழ்நாடும் மொழியும்

தமிழ்நாடும் மொழியும்  ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிதமிழ்நாட்டு வரலாற்றுக் கண்ணாடி

தமிழகம்→

 

 

 

 

 


437164தமிழ்நாடும் மொழியும் — தமிழ்நாட்டு வரலாற்றுக் கண்ணாடிபேரா. அ. திருமலைமுத்துசாமி

 


 
(Upload an image to replace this placeholder.)

 
 
 
(Upload an image to replace this placeholder.)

 
 1. தமிழ் நாடு 
1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி 

தமிழகத்தின் சிறப்பு 
உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ஏனைய முப்புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தன. 
இந்திய வரலாற்றிலேயே தமிழகத்திற்குரிய சிறப்பினைக் குறைக்க எவராலும் முடியாது. தமிழகம் பக்தி வெள்ளத்தில் மூழ்கும் ஒரு நாடு. இந்தியச் சமயத்தின் வளர்ச்சிக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எப்பகுதியும் அவ்வளவாக உதவி செய்ததில்லை. ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாடு  பல்லாயிரக் கணக்கான மைல்கட்கு அப்பாலிருக்கும் கிரேக்கத்தோடும் சீன நாட்டோடும் கடல் வாணிகம் செய்தது. தமிழர்கள் பெருவாரியாக மலேயா, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத் தீவகங்களிற் குடியேறியுள்ளமைக்குக் காரணம், பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் கிழக்கிந்தியத் தீவுகளோடு செய்துவந்த வாணிபமே ஆம். உலகிலே உள்ள பல்வேறு நாடுகளிற் பரவியுள்ளதாகக் கூறப்படும் இந்திய நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே. வாணிகத் துறையில் மட்டுமின்றி ஆட்சித் துறையிலும் தமிழ் நாடு அடைந்திருந்த முன்னேற்றம் சீரியதாகும்.


 அடிக்கடி ஏற்பட்ட அயலவர் படையெடுப்புக்களினாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் வட நாடு அல்லலுற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமைதியாக இருந்து மொழியையும் இலக்கியத்தையும், வாணிகத்தையும், ஆட்சியையும் திறம்பட நடத்திய பெருமை தமிழர்க்கே உரித்து. 
சங்க இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், சைவத் திருமுறைகள், வைணவர் பாடல்கள், கம்பராமாயணம் முதலியவை தமிழகம் பெற்ற அரும் பெரும் களஞ்சியங்களாகும். தமிழரின் கலையாற்றலைக் காஞ்சி, மதுரை, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், மாமல்லபுரம் முதலிய பெரு நகரங்களில் நின்று மகிழ்விக்கும் கோயில்களும் கோபுரங்களும் தெற்றெனக் காட்டும். சுருங்கக் கூறின் இந்தியாவின் வரலாற்றைத் தொடங்க வேண்டிய இடம் காவிரிக் கரையே தவிர கங்கைக் கரையல்ல. ஆனால் இந்திய வரலாற்றை எழுதியவரில் பெரும்பாலோர் டில்லியையும், வட இந்தியாவையும் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளனரே தவிர தமிழ் நாட்டைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை.
தமிழக வரலாற்று மூலங்கள்
தென்னக வரலாற்றுக்குதவும் கல்வெட்டும் செப்பேடும் இக்காலத்திலே குறைவே. கார்த்தியாயனர் தமிழ் நாட்டு ஊர்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். மெகச்தனீசர் பாண்டிய அரசி, அவள் வைத்திருந்த படையின் அளவு ஆகியவை பற்றிக் கூறியுள்ளார். அசோகனது கல்வெட்டுக்கள் தமிழகத்தைக் குறிக்கின்றன. காரவேலன் என்ற கலிங்க மன்னனின் அதிகும்பாக் கல்வெட்டுத் தமிழ் மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. பெரிப்புளுசின் ஆசிரியர், தாலமி, பிளினி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புக்கள் தமிழகத்தைப் போற்றிப் புகழ்கின்றன, பிளினி என்பவர் தென்னாட்டுக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே நடந்த வாணிபத்தைப் பற்றித் தெளிவாகக் குறித்துள்ளார். அதுமட்டுமல்ல; தமிழ்நாட்டு முத்தின் மீது ரோம் நாட்டு மகளிர் கொண்ட மோகம், அதனால் ரோம் நாட்டுப் பணம் பெருவாரியாகத் தமிழ்நாட்டுக்கு வந்த விதம் ஆகியன கண்டு பிளினி வெகுண்டுரைத்தும் உள்ளார். இக் கூற்றைத் தமிழ் நாட்டு மண்ணில் கண்டெடுக்கப்பட்ட ரோம நாணயங்களே நன்கு வலியுறுத்தும். இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் இலங்கை - தமிழகம் உறவைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. 
பண்டைத் தமிழகத்தைச் செம்மையாக அறியப் பெரிதும் உதவுவன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தைத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்ட வல்லன சங்க இலக்கியங்களே. பண்டைத் தமிழகத்தின் நில வளம், நீர் வளம், நிலப் பகுப்பு, அங்கே வாழ்ந்த மக்கள், அந்த மக்களின் மனவளம், கல்வி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் கொண்ட தொடர்பு, அவர்கள் நடத்திய காதல் வாழ்வு, செய்த போர், அவர்களின் வணிகம், பிற நாட்டார் தமிழரோடு கொண்டிருந்த தொடர்பு, சமயம் ஆகிய அத்தனை குறிப்புக்களையும் சங்க இலக்கியங்களிற் காணலாம். சங்க இலக்கியங்களின் காலத்தைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலவுகின்றன. ஆனால் தமிழ் நூல்களைக் கற்றுத் துறைபோய நற்றமிழ்க் குரிசில்களினால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு கி. பி. 200-க்கு முந்தியதாகும். மேல் எல்லை கி. மு. 1000 வரை செல்லும். சில ஆசிரியர்கள் சங்க காலம் கி.பி. 700-800 என்று கூறினர். இது முற்றிலும் பொருந்தாது. ஏனெனின் கி. பி. 700-800 வரை பல்லவர் ஆட்சி தமிழகத்தில் செழிப்பாக நடைபெற்ற காலம். ஆனால் சங்க இலக்கியங்களிலே பல்லவரைப் பற்றி ஒரு சொல்கூட இல்லை. அதுமட்டுமல்ல; கி. பி. 700-800-ல் சைவம் செழித்திருந்தது. சங்கச் சார்புள்ள இலக்கியங்களிலே சமண பௌத்த சமயங்களின் செல்வாக்கே தெரிகிறது. மோரியர் படையெடுப்பு, புத்த - சமண மதக் கருத்துக்கள் முதலியன தென்படுகின்றன. அதுமட்டுமா? சிலப்பதிகாரத்திலே செங்குட்டுவன் நடத்திய பத்தினி விழாவில் இலங்கைக் கயவாகு மன்னன் கலந்துள்ளான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கயவாகுவின் காலம் கி. பி. 173-195. எனவே சங்க காலத்தின் கீழ் எல்லை கி. பி. 200 ஆகும். 
 வரலாற்றுப் பகுதிகள்  
ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாம். இதனை மனதிலே கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆராயப் புகுந்தால், வரலாற்றிற்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், பிற நாட்டார் ஆட்சிக் காலம், மக்களாட்சிக் காலம் எனத் தமிழ்நாட்டு வரலாற்றை ஏழு பிரிவின் கீழ் அடக்கலாம். 
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பதப்படுத்தப்பெறாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தித் தமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட மக்கள் வாழ்ந்த காலமே கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்தில் மக்கள் கற்களை நன்முறையில் பதப்படுத்திப் பயன்படுத்தினர். மேலும் இக் காலத்தில் மக்கள் பல துறைகளிலும் முன்னேறலாயினர். உழவுத் தொழில்புரியத் தொடங்கினர். எனவே இவர்கள் நிலையான வாழ்க்கை வாழத்தொடங்கினர். 
சங்க காலத்தில் மக்கள் கலையும் பண்பாடும் வளரப் பெற்று உலக நாகரிகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். காடு கெடுத்து நாடாக்கினர்; வளமான வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ந்தனர்; தமது கலையுணர்வைப் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தினர். காதலும் போரும் மக்களின் இரு கண்களாய் விளங்கின. மக்களின் வாழ்க்கையினை அகம், புறம் என இரு பிரிவாக்கிப் புலவர்கள் வியந்து பாராட்டினர். 
கி. மு. 300 முதல் கி. பி. 200 வரைச் சங்க காலம் எனப் படும். இக்காலத்தைப் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தனர். இலக்கியங்கள் பல எழுந்தன. ஆனால் பிந்திய மூன்று நூற்றாண்டுகளில் ஆரியர்கலை, நாகரிகம், சமயம் முதலியவை தமிழ் நாட்டில் மெல்ல மெல்லப் பரவலாயின. தமிழ் நூல்களில் வடசொற் கலப்பும், வடவர்தம் கலை, சமயக் கருத்துக்களின் கலப்பும் ஏற்பட்டன. 
சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழக வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கில்லை. எனவே இக்காலத்தினை சில அறிஞர்கள் இருண்ட காலம் என அழைக்கின்றனர். 
கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர் காலமாகும். ஆனால் கி. பி. 600 லிருந்து தான் பல்லவர் வரலாற்றினைக் கோவையாகவும் தெளிவாகவும் நம்மால் அறிய முடிகின்றது. இவர்களது ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்ட காரணத் தால் தமிழர் வாழ்வு மேலும் மாறத் தொடங்கிற்று. வடவர் மொழியும் கலையும், தமிழர் மொழி, கலைகளோடு விரவத் தொடங்கின. வட சொற் கலப்பு தமிழில் பெரிதும் ஏற்பட் டது. தமிழர் சமயக் கருத்துக்களும் மாறலாயின. இதற்குக் காரணம் பல்லவ அரசரில் பலர் வட மொழியை நன்கு ஆதரித்தமையே. எனினும் தமிழர் கலைகள் இக்காலத்தில் விரிவு பெற்றுப் பல துறைகளிலும் வளர்ச்சியடையத் தவறவில்லை. சிறப்பாக சிற்பக்கலை சீரிய முறையில் வளர்க்கப்பெற்றது. பல்லவர் ஆட்சியின் முற்பகுதியில் சமண பௌத்த மதங்கள் தமிழகத்தில் உச்ச நிலையில் விளங்கின. ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் ஓங்கலாயின. 
கி. பி. 900 - கி. பி. 1300 வரை சோழர்கள் தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கினர். எனவே தமிழ் மீண்டும் செழித்து வளரலாயிற்று. சைவமும் வைணவமும் மிகச் சிறந்து விளங்கின. இதன் காரணமாய் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய - கோயில்கள் தமிழ் நாடெங்கணும் எழுப்பப்பட்டன. இப்பணியில் சோழப் பேரரசர்கள் பெரி தும் ஈடுபட்டனர். இக்காலத்தில் பாண்டியர்களும் பழைய படி தலையெடுத்துத் தரணி ஆண்டனர். தமிழ் வளர்ந்தது. 
கி. பி. 1300க்குப் பின்னர் முகமதியரும் வேறு இனத்தவரும் தமிழ் நாட்டின் மீது படையெடுத்தனர். ஒய்சலர் என்னும் இனத்தாரும் நம் தாயக ஆட்சியில் தொடர்பு கொண்டிருந்தனரெனத் தெரிகிறது. முகமதியர் படையெடுப்பால், சலாம், கஜானா, சால்ஜாப்பு முதலிய சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன. முகமதியர் ஆட்சியை எதிர்த்த விசய நகர மன்னர்களின் ஆட்சி, அடுத்து தமிழகத்தில் ஏற்பட்டது. இக்காலத்தில் மீண்டும் வட மொழியாதிக்கம் பரவியது. நாயக்கராட்சி நடந்த காலத்திலும் இதே நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்தது. 
இவ்வாறாகத் தமிழும் தமிழ்நாடும் பற்பல மாறுதல்களுக்கு உட்பட்டு இறுதியில் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. இவர்கள் ஆட்சியில் ஆங்கிலமொழி அரசுமொழியாக விளங்கியதால் தமிழ் தழைக்க முடியாது போயிற்று. 

இன்று நாம் குடியாட்சியில் வாழ்கின்றோம். அடிமைத்தளை அகற்றப்பட்டு உரிமை பெற்றவரானோம். எனவே எங்கும் மறுமலர்ச்சியைக் காணுகின்றோம். தமிழ் மொழி அரியணை ஏறி அரசோச்சத் தொடங்கியுள்ளது. தமிழர் நாகரிகமும் பண்பாடும் தழைத்தோங்கத் தொடங்கியுள்ளன. எனவே தமிழர்கள் இனியாவது விழிப்புடனிருந்து மொழியையும், கலையையும், பண்பாட்டையும் பார் முழுதும் பரவச் செய்வதற்கு வழி வகைகளை வகுத்துத் தளராது அயராது உழைத்தல்.