குகப் படலம்
குகனின் அறிமுகம்[தொகு]
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான். 1
துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்-
அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். 2
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன், பல்லவத்து
அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். 3
காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான். 4
பல் தொடுத்தன்ன பல் சூழ் கவடியன்,
கல் தொடுத்தன்ன போலும் கழலினான்,
அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்
நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். 5
பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 6
கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,
நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,
பிச்சாரம் அன்ன பேச்சினன், இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான். 7
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 8
சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், -
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 9
இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்[தொகு]
சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை
வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 10
குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்[தொகு]
கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான். 11
குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்[தொகு]
'நிற்றி ஈண்டு' என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,
'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்' என்றான். 12
இராமனைக் கண்டு வணங்கி குகன் தன் கையுறைப் பொருளை ஏற்க வேண்டுதல்[தொகு]
அண்ணலும் விரும்பி, 'என்பால் அழைத்தி நீ அவனை' என்ன,
பண்ணவன், 'வருக' என்ன, பரிவினன் விரைவில் புக்கான்;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி
மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து நின்றான். 13
இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்[தொகு]
'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14
குகனது அன்பை இராமன் பாராட்டுதல்[தொகு]
'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான். 15
விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்[தொகு]
சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், 'யாம்
இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில்
தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்' என்றான். 16
குகனது வேண்டுகோள்[தொகு]
கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான், 'இப்
பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை' என்றான். 17
குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்[தொகு]
கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்;
சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, 'தீராக்
காதலன் ஆகும்' என்று, கருணையின் மலர்ந்த கண்ணன்,
'யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு' என்றான். 18
அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன
துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி,
வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி,
இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். 19
இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்[தொகு]
'திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி' என்ன,
பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி,
இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், 'என்னே!
பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்' என்னா. 20
கதிரவன் மறைதல்[தொகு]
விரி இருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல் நின்று,
ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து, அருள்புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்னச் செங் கதிர்ச் செல்வன் சென்றான். 21
இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்[தொகு]
மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல்,
வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக்
காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். 22
இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுது கண்ணீர் வழிய நிற்றல்[தொகு]
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். 23
கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்[தொகு]
துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினையல் அம்மா!- வரம்பு இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள்,
பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன்-பிறவா வெய்யோன். 24
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 25
குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்[தொகு]
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, 'ஐய!
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்' என்றான். 26
இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்[தொகு]
ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான்,
ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான்,
காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத்
தேவியடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: 27
'பொய்ம் முறை இலரால்; எம் புகல் இடம் வனமேயால்;
கொய்ம் முறை உறு தாராய்! குறைவிலெம்; வலியேமால்;
செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை
இம் முறை உறவு என்னா இனிது இரு நெடிது, எம் ஊர்; 28
'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; 29
'தோல் உள, துகில்போலும்; சுவை உள; தொடர் மஞ்சம்
போல் உள பரண்; வைகும் புரை உள; கடிது ஓடும்
கால் உள; சிலை பூணும் கை உள; கலி வானின்-
மேல் உள பொருளேனும், விரைவொடு கொணர்வேமால்; 30
'ஐ-இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை
செய்குநர், சிலை வேடர்-தேவரின் வலியாரால்;
உய்குதும் அடியேம்-எம் குடிலிடை, ஒரு நாள், நீ
வைகுதி எனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது' என்றான். 31
மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்[தொகு]
அண்ணலும் அது கேளா, அகம் நிறை அருள் மிக்கான்,
வெண் நிற நகைசெய்தான்; 'வீர! நின்னுழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது' என்றான். 32
குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்[தொகு]
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்;
தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான்
அந்தணர்தமை எல்லாம், 'அருளுதிர் விடை' என்னா,
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33
'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34
பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை,
காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின்
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்,
ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36
இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்[தொகு]
அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி,
'சித்திர கூடத்தின் செல் நெறி பகர்' என்ன,
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா,
'உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது' என்றான். 37
'நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல்,
நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;
உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்; 38
'தீயன வகை யாவும் திசை திசை செல நூறி,
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்;
மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும்
ஏயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; 39
'கல்லுவென் மலை; மேலும் கவலையின் முதல் யாவும்;
செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்;
வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்மல்ல
¢னும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்; 40
திரு உளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு,
ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார்
மருவலர் எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்;
பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்' என்றான். 41
குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்[தொகு]
அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
'என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.' 42
'துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43
'படர் உற உளன், உம்பி, கான் உறை பகல் எல்லாம்;
இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ;
சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்;
வட திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். 44
'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி;
இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரைசெய்யாய்;
உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ?
என் கிளை இது கா, என் ஏவலின் இனிது' என்றான். 45
குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்[தொகு]
பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான்,
பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்;
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். 46
மிகைப் பாடல்கள்[தொகு]
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால்,
'இன்றே நின் பணி செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்; நாய் அடியேன் யான்'
என்றே கூவினன்-எயிரினரின் இறையோன். 10-1
வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண் கடுந் திறல் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை, 'நாமே
எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக!' என்றான். 22-1
மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி,
'துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம் எய்துவல்' என்னப் போனாள். 22-2
மற்றவள் இறைஞ்சி ஏக, மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம் அது என்ன, ஒரு சிலை அதனின் நின்றான். 22-3