Get it on Google Play
Download on the App Store

முன்னுரை

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது.

தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது ; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது.

இந்த நிலையில்தான் தஞ்சையில் கலைக்கூடம் உருவாக்கும் பணியை ஏற்றேன். கலை தேடி அலைந்த காதல் விரிக்கில் பெருகும். தமிழ் நாட்டின் சிற்ப வடிவங்களின் சிறப்பை உணர்ந்தபோது, அவைகளைப்பற்றி முதலில் தமிழர்களுக்கும், பின்னர் உலக மக்களுக்குமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆர்வம் பிறந்தது.

இந்த ஆர்வமே கலையைப் பற்றி, கலை வளர்க்கும் நிலையங்களான தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதத் தூண்டியது.

நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும், நண்பர் திரு. சதாசிவம், தொடர்ச்சியாகக் 'கல்கி'யில் இலக்கியக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று விரும்பினார். நானும், 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நூற்று எட்டுக் கோயில்களைப் பற்றி எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சென்ற ஒன்பது மாதங்களாகக் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் அன்பர்கள், அதிலும் முக்கியமாகப் பெண்கள் மிக்க ஆர்வத்தோடு படிக்கிறார்கள் என்று அறிகிறேன்.

முன்னர்க் கோயில்களுக்குச் சென்றால், மூர்த்திகளை அவைகள் இருக்கும் வண்ணத்திலே படம் எடுக்க அனுமதிக்காத தர்மகர்த்தர்களும் அர்ச்சகர்களும் இன்று நான் கோலுக்குச் செல்லும்போது மிக்க ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள்; வேண்டும் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஈட்டுரைகள் வெளி வரும்போது ஆர்வத்தோடு படிந்தவர்களில் நண்பர் திரு.ஏ. கே. வேலன் ஒருவர். அவர் எனக்கு முன்பு அறிமுகம் இல்லாதவர். அவர்தான் இக் கட்டுரைகள் புத்தக உருவில் வர வேண்டும் என்று விருமிபினார். நண்பர் திரு. வே. நாராயணன் அவ் விருப்பத்தை வெளியிட்டுப் புத்தகம் உருவாவதைத் துரிதப் படுத்தினார்.

இவர்களது அன்பும் ஆதரவுமே இக் கட்டுரைத் தொகுதின் முதல் பாகத்தைப் 'பாலாற்றின் மருங்கிலே' என்ற பெயரோடு இப்போது வெளியிடத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.. இலர்களுக்கு என் நன்றி. 'கல்கி'யில் வந்த கட்டுரைகளைப் புத்தக உருவில் வெளியிட அனுமதி அளித்த 'கல்கி' ஆசிரியருக்கும் என் நன்றி.

சுட்டுரைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அவற்றில் எத்தனையோ குறைபாடுகள். "இதைச் சொல்ல விட்டு விட்டீர்கள், இதைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்?" என்று எழுதும் அன்பர் பலர்.

'குறித்த அளவிலே சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல நான் தவறுவதில்லை. சொல்லிடில் எல்லை இல்லை!' என்பது தான் நண்பர்களுக்கு நான் தரும் பதில். இப் புத்தகம் அச்சுக்குப் போகுமுன், பிரதிகளைச் சரிபார்த்துத் தந்தவர் சகோதர் திரு. சா. கணேசன். அவர்களுக்கு என் நன்றி.

இப் புத்தகத்திற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கியிருக்கிறார்கள், வேலூர் ஜில்லா நீதிபதி நண்பர் திரு.S.மகராஜன் அவர்கள். கொஞ்சம் அளவிற்கு மேலேயே புகழ்ந்திருக்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். ஆனால் அணை கட்டித் தடுக்க முடியாத அன்பல்லவா அவர்களை இப்படி எல்லாம் எழுதத் துண்டியிருக்கிறது. அவர்கள் அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.

நான் நல்ல கலை வாழ்வில் திளைத்த குடும்பத்தில் பிறந்தவன். என் பாட்டனார் திருப்புகழ்ச் சாமி என்னும் முருகதாச சுவாமிகளின் சிஷ்யர். என் தந்தையார் நல்ல சித்ரீகர். பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த இக்கலை ஆர்வம் நாளும் வளர வகை செய்தவர்கள் அமரர் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள். அவர்களுக்கு இந்நூலை உரிமையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை விரைவில் அச்சடித்துக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும். இனிப் புத்தகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தமிழ் உலகம்.


‘சித்ரகூடம்’ தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

திருநெல்வேலி-5