முகவுரை
சென்ற சில மாதங்களாக நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் திருக்கோயில்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரைகள் தமிழ் நாட்டை ஒரு கலக்குக் கலக்கி இருக்கின்றன. ஏதோ சினிமா பத்திரிகைகளைப் படிக்க மக்கள் அடி பிடி போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘கல்கி’யில் கோயில்களைப்பற்றி வரும் கட்டுரைகளைப் படிப்பதில் நான் முந்தி நீ முந்தி!' என்று கணவர்களும் மனைவியரும், கிழவர்களும் குழந்தைகளும் போட்டி போடுவதைப் பார்க்கும்போது அதிசயப்பட வேண்டியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன், ஓர் ஆந்திர நண்பர், சர்க்கார் டாக்டராக இருப்பவர் என்னைப் பார்த்ததும், “ஐயா! உங்கள் நண்பர் தொண்டைமான் பெரிய வம்புக்கார ராயிருக்கிறார். அவர் எழுதும் கட்டுரை ஒவ்வொன்றையும் படித்துவிட்டு, என் மனைவி, உடனே புறப்படுங்கள், வள்ளி மலை வள்ளியைப் பார்க்க வேண்டும்; கச்சி ஏகம்பனைக் காண வேண்டும்; தணிகைக் குமரனைத் தரிசிக்க வேண்டும்!” என்றெல்லாம் உத்தரவு போடுகிறாள். சர்க்கார் உத்தியோகத்திலிருக்கும் எனக்கு ஸ்தல யாத்திரை எல்லாம் கட்டி வருமா? ‘போவோம் போவோம்!’ என்று சொல்லி, என் மனைவியைத் தாஜாப்பண்ணி வைத்திருக்கிறேன்,” என்று சொன்னார்.
இப்படி ஸ்தல புராணங்களும் சமயப் பிரசாரகர்களும் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்திருக்கின்றன. இக் கட்டுரைகள் பக்தியையும் ஆர்வத்தையும் அப்படியே ஊட்டி இருக்கின்றன.
இந்தச் சாதனைக்கெல்லாம் காரணம் கட்டுரை ஆசிரியர் நம்மிடத்தில் வைத்திருக்கும் பரிவுதான். நம்முடைய உள்ளப் பாங்கை உணர்ந்து, நம் இதயத்தோடு ஒட்டிச் சமய உண்மைகளைப் பக்குவமாக்கிக் கொடுக்கும் வல்லமை அவரிடத்தில் இருக்கிறது.
‘பதி, பசு, பாசம்’ என்று மடிசஞ்சி பாஷையில் பேசி, அவர் நம்மை மிரட்டுகிறதில்லை. நாமெல்லாம் சினிமா உலகத்தில் ஊடாடிக் கொண்டிருப்பவர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆகவே ‘கடன்வாங்கிக்கல்யாணம்’ என்ற சினிமா படத்தைப் பற்றிப் பேசி, நம்மைத் தன் வசம் ஆக்கிக்கொண்டு, நம் கையைப் பிடித்துக்கொண்டே, ஏழுமலையும் ஏறி, ‘வான் நின்ற சோலை வடமலை மேல் நின்ற மாதவன்’ சந்நிதியில் கொண்டே நிறுத்தி விடுகிறார்.
நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அவருக்குத் தெரியும். கலெக்டர் வேலை பார்த்தவருக்கு இது கூடத் தெரியாமலா இருக்கும்? ஆகவே ஜனநாயகத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுவார். காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்போம். உடனே பத்தாவது நூற்றாண்டிலே ‘குடவோலை’த் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று சொல்லுவார். இதைப்பற்றி உத்திரமேரூர்க் கோயிலிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று சொல்லி நம்மைக் கோயிலுக்கே இழுத்துச் செல்வார். அப்படியே உள்ளே யிருக்கும் வைகுண்டப் பெருமாள் முன்னிலையிலே கொண்டு போய் நிறுத்துவார். நம்மை அறியாமலேயே, பகுத்தறிவாளர்களாகிய நமக்கும் பக்தி வந்து விடுகிறது. இவ்வாறு விதம் விதமான உத்திகளைக் கையாண்டு நமக்குக் களிப்பூட்டுகிறார்.
அவருடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக் கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்திக்குப் பின் தமிழை இப்படிச் சுகமாகக் கையாளுபவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள்.
அவருடைய தமிழ் நடை, முதலிலிருந்து கடைசிவரை துள்ளி விளையாடிக்கொண்டே செல்கிறது. பம்முவதும், பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், பல்டி அடிப்பதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில் வாசகர்களை முக்கி முக்கி எடுப்பதுமாக இந்தப் 'பாஸ்கரத் தமிழ்' செய்கிற ஜால வித்தைகள் பலப்பல.
ஆசாமி பொல்லாதவர். விளையாட்டுப் போக்கிலேயே பல அரிய உணர்ச்சிகளைப் புகட்டுகிறார்; மேனி சிலிர்க்கச் செய்கிறார்; புராணக் கதைகளைப் பக்தியோடு சொல்கிறார்; அதே மூச்சிலேயே புராணங்களுக்குப் பகுத்தறிவு முலாமும் பூசுகிறார்.
கட்டுரைகள் ஸ்தலங்களுக்கு வழி காட்டிகளாக அமைந்திருக்கின்றன. அதோடு நின்று விடவில்லை. அவை வரலாற்று ஆராய்ச்சி செய்கின்றன; கல்வெட்டுகளின் நுணுக்கங்களைக் காட்டுகின்றன; பக்திப் பாடல்களுக்கு இலக்கிய விளக்கம் கொடுக்கின்றன; சிற்பக் கலையின் அழகுகளை எடை போடுகின்றன; மூர்த்திகளை அவனிருக்கும் வண்ணத்திலேயே எடுத்துக் காட்டுகின்றன.
நூலைத் தொட்ட தொட்ட இடமெல்லாம் கற்பூர வாசனை வீசுகிறது. சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், அபிஷேகம், அலங்காரம் எல்லாம் பக்திக்கும் ஞானத்திற்கும் இன்றியமையாத சாதனங்கள் என்பதைக் கட்டுரைகள் நிலை நாட்டுகின்றன.
மேலும் ஆசிரியருடைய சமரச நிலை பெரிதும் போற்றத் தக்கதாக இருக்கிறது. வைஷ்ணவ வேஷம் போட்டுக் கொண்டு, சைவத்தை ஒரே செந்துக்காகத் தூக்குவார். சைவ வேடம் பூண்டு, வைஷ்ணவ விளக்கம் செய்வார். இப்படி ஆயிரம் மூர்த்திகளைப் பற்றியும் பேசினாலும், இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையையும் உணர வைத்து விடுகிறார், எப்படியோ.
ரஸிகமணி டி.கே.சி. சொல்லுவார்கள்: 'பொதுவாக, ஸ்தல யாத்திரை என்றால், கோயில் குளம், மூர்த்தி, பக்தர் குழாம் இவைகளை அனுபவிக்கப் போவதுதான். அதில் நல்ல ஆனந்த அனுபவம் உண்டு!' என்று.
அத்தகைய ஆனந்த அனுபவத்தை ஸ்தல யாத்திரை போகக் கொடுத்து வைக்காவிட்டாலும் - இந்த நூலைப் படிப்பதன் மூலம் நான் அடைகிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் நான் பெற்ற இன்பத்தை அடைவார்கள் என்றும் நம்புகின்றேன்.
ஜட்ஜ் பங்களா
வேலூர் 16-3-60
எஸ். மகராஜன்