பரம்பரை சாபம்
இரமணருடைய அதாவது வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய தந்தையாரான சுந்தரமய்யர் பரம்பரையினர் முன்பொரு சமயம் ஒரு துறவிக்குப் பிச்சை இல்லை என்று கூறி அமைதியாக அனுப்பாமல் அவரை வாயில் வந்தவாறு ஏசிப்பேசி அவமானப் படுத்திவிட்டனராம்.
கோபத்தோடு காணப்பட்ட அந்தத் துறவி, சுந்தரமய்யர் பரம்பரையாளரைப் பார்த்து, “என்னைப் பார்த்தா பிச்சைக்காரன் என்று கேலி புரிந்தாய்? உனது பரம்பரையில் யாராவது ஒருவன் பிச்சைக்காரனாகி, தெருத் தெருவாக சோற்றுக்கும், துணிக்கும் அலைந்தே தீருவான் பார்!” என்று சாபமிட்டு விட்டு விர்ரென்று வீதி வழியே விரைந்தார்.
அந்தச் சாமியாரது கோப சாபத்துக்கு ஏற்றவாறு சுந்தரமய்யர் வம்சத்தில் யாராவது ஒருவர் அடுத்தடுத்து துறவு பூண்டு பிச்சைக்காரனாகவே அலைந்தார்கள். இந்தச் சாபம் சொல்லி வைத்தாற்போல சுந்தரமய்யர் பரம்பரையில் பலித்து வந்தது.
சுந்தரமய்யரின் சிறிய தகப்பனார் ஒருவர் சந்நியாசி ஆனார்! போனவர் மீண்டும் வீடு திரும்பாமல் பிச்சைக்காரனாகவே சென்று விட்டார். அவருக்குப் பிறகு அய்யரின் சகோதரர் வெங்கடேசய்யர் என்பவர், வடநாடு நோக்கி தீர்த்த யாத்திரை சென்றார். அவரும் வீடே திரும்பவில்லை. வேறொருவர் மூலமாக அவரைப் பற்றி வந்த தகவலில், சிதம்பரம் கோவிலில் அவர் பிச்சைக்காரனாக பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதோடு, கோயிலுக்கு வரும் புனித சேவார்த்திகளுடைய கால்கள் புண்ணாகி விடக் கூடாதே என்ற இரக்க உணர்வோடு வழியிலே முளைத்துக் கிடந்த முட்களையும், கற்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதாக, வந்த அந்தத் தகவல் கூறிற்று.
அந்த முட்களையும் கற்களையும் அகற்றிய பக்தாபிமானியின் பெயர் சிவானந்த யோகி. அவருக்குப் பின்னாளில் பல பத்தியாளர்கள் மாணவர்களாக மாறினார்கள். யோகியின் புகழ் பிறகு வளர்ந்தோங்கிப் பெருமை பெற்றது.
இந்தச் சந்நியாசியின் சாப நிலைக் கேற்ப சுந்தரமய்யர் கண்முன்னாலேயே அவருடைய உறவினர்கள் இருவர் பிச்சைக்காரனாக மாறினார்கள். இப்போது சுந்தரமய்யர் பிள்ளைகளிலே யார் துறவி ஆவார்களோ என்ற பேச்சு ஊர் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் அவ்வளவு மன வருத்தப் பரிதாபத்துடன் அய்யர் குடும்பத்தைக் கவனிக்கலானார்கள்.
சுந்தரமய்யர் துறவு கொள்ளமாட்டார். அந்த அவசியமும் அவருக்கு இல்லை, ஆனால், அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று விளையாட்டாகப் பேசிக் கொள்வார்கள் ஊராருள் சிலர். அந்த மூன்று பேர்களிடம் அந்த அறிகுறிகளே இல்லையென்று அடித்துப் பேசினார்கள் மற்றும் சிலர்.
சுந்தரமய்யருடைய மூத்த மகன் நாகசாமி கல்வியில் கெட்டிக்காரனாக இருந்தான். இரண்டாம் மகன் வெங்கட்ராமனும் எல்லாவகையிலும் ஒழுங்கானவனாக இருந்தான். அதுவும், வம்படி, வழக்கும் குறும்புத் தனமும் கொண்டவனாக இருந்தானே ஒழிய, சந்நியாசியாக ஆகுமளவுக்கு அவனுக்கு அறிவுமில்லை; குடும்ப நிலையுமில்லை. சிறிய பையனும், வெங்கட்ராமனும் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வந்தார்கள்.
இந்தக் குடும்பச் சூழ்நிலையில் வழக்கறிஞராகப் புகழ் பெற்றிருந்த சுந்தரமய்யர் 1895-ஆம் ஆண்டில் எதிர்பாராமல் திடீரெனக் காலமானார். அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் செலவுகளையும், காரியங்களையும், ஊரார் பக்க பலத்துடன் அந்தக் குடும்பம் செய்து முடித்தது.
வெங்கட்ராமனும், அவன் தமையனாரும், மதுரை மாநகரிலே உள்ள சுந்தரமய்யரது தம்பி சுப்பய்யர் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கி தங்களது கல்வியைத் தொடர்ந்தார்கள்.
மதுரையில் உள்ள ஸ்காட் நடுநிலைப் பள்ளி என்ற வெள்ளையர் நடத்தும் பள்ளியில் வெங்கட்ராமன் சேர்ந்து ஒழுங்காகப் படித்து வந்தார். மூத்தவன் நாகசாமி மேல் படிப்புக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
அதற்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் பள்ளியில் அண்ணனும், தம்பியும் சேர்ந்து கல்வி கற்றார்கள். இதற்கிடையே வெங்கட்ராமன் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்தான். இந்நிலையில் சுந்தரமய்யர் குடும்பத்திலுள்ள எவருக்கும் சந்நியாசி ஆகும் சாபம் நிறைவேறுமளவுக்குத் தெய்வ பக்தியோ, துறவு மனப்பான்மையோ, காணப்படும் அறிகுறிச் செயல்கள் ஏதும் ஏற்படவில்லை.
வெங்கட்ராமன் எல்லாரையும் போலவே கோயிலுக்குப் போவான். இறை வழிபாடு செய்வான்; திரும்பி வீடு வருவான். பள்ளிப் பாடங்களைப் படிப்பான்; தானுண்டு மற்ற பள்ளி வகுப்பு நண்பர்களுண்டு என்று விளையாடுவான். அவனது பள்ளி கிறித்துவர்கள் நடத்தும் பள்ளி. அங்கும் கூட பைபிள் பாடம் நடக்கும். அதைக்கூட கவனமாகப் படிக்க மாட்டான் அவன்.
எனவே, சாமியார் அவர்களது பரம்பரைக்கு இட்ட சாபம் பலிக்காது; சுந்தரமய்யர் குடும்பத்துக்கு நல்ல காலம்தான் என்று கிராம மக்கள் பேசினார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அன்றுவரை அக்குடும்பத்தில் அதற்கான அறிகுறிகள் இல்லாதது தான்.