நடப்பது நடக்கும்
திருவண்ணாமலை குரு மூர்த்தத்திற்கு அருகே உள்ள நாயக்கருடைய மாந்தோப்பில் சென்றமர்ந்த ரமணரிஷிக்கு, நாயக்கர் இரண்டு உயரமான மேடைகளைக் கட்டிக் கொடுத்தார். அதே நேரத்தில் ரமணரைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளுக்குரிய பாதுகாப்புகளையும் வசதிகளையும் செய்து தந்தார்.
இந்த நிலை இவ்வாறிருக்க, வெங்கட்ராமன் என்ற மாணவன் திருச்சுழி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போமா?
‘கல்வியில் அக்கறை இல்லாதவர்களுக்கு வீட்டில் மட்டும் என்ன வேலை?’ என்று தனது தமையனார் கேட்ட கேள்வினால் அவமானம் தாளமுடியாமல் வெங்கட்ராமன் அண்ணனது வீட்டை விட்டுக் வெளியேறினான் அல்லவா? அந்தக் கோபத்தோடு வீட்டைத் துறந்தவன் மீண்டும் வீட்டுக்குள்ளேயே நுழையவில்லை.
எங்கே போகப் போகிறான் பயல்? ஊரைச் சுற்றிவிட்டு, நண்பர்களுடன் அலைந்து விட்டு மாலை வந்து விடுவான் என்று வெங்கட்ராமன் அன்னையாரும், அண்ணனாரும் அலட்சியமாய் இருந்து விட்டார்கள். ஆனால், மாலைப் பொழுது மளமளவென மாய்ந்து, அந்தி, அரும்பி அதுவும் அமாவாசை போல இருளைக் கவ்விக் கொண்டே இருந்தது. வெங்கட்ராமன் மட்டும் வரவில்லை. அண்ணன் திடுக்கிட்டார். எங்கெங்கோ ஓடி ஓடித் தேடினார்.
மதுரையிலே அவனுடன் படித்த பள்ளி மாணவர்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் வெங்கட்ராமன் திரும்பவில்லை. அவனது தமையனார் நாகசாமி எங்கெங்கோ தேடினார் தம்பி வெங்கட்ராமனை. நாகசாமி அப்போதுதான் அவனைக் கோபமாக ஏசிய நஞ்சின் கொடூரத்தை உணர்ந்தார்! இருந்தும் என் செய்ய உடனே மானா மதுரையிலே உள்ள தனது அன்னையாருக்கு ஆளனுப்பி தேடினார்.
யார் யார் வெங்கட்ராமன் நண்பர்களோ அவர்களிடமெல்லாம் சென்று விசாரித்தார் நாகசாமி. எங்கெங்கு அவனுக்கு நண்பர்கள் உண்டோ, அங்கங்கே எல்லாம் சென்று கேட்டார். ஒரு புறம் வெங்கட்ராமனுடைய சிற்றப்பா அவனைத் தேடியலைந்து வேதனையோடு ஓய்ந்தார்.
மகனைக் காணவில்லை என்பதை அறிந்த அவனது தாயார் தெருத் தெருவாக மானா மதுரை வீதிதோறும் வெங்கட்ராமா? வெங்கட்ராமா! என்ற வேதனைக் குரலோடு அலைந்தாள். எங்கும், எந்தவித ஆறுதல் பதிலும் அவளுக்கு கிடைக்கவில்லை.
மகனை இழந்த அன்னை அழகம்மை சும்மா இருப்பாளா? புருஷனை இழந்து ஐந்து ஆண்டுகூட ஆகவில்லையே, இதற்குள் இழந்து விட்டோமே மகனையும் என்று அழுதபடியே இருந்தாள்! அன்ன ஆகாரம் எதுவும் உண்ணாமல் சோகப் பள்ளத்திலே வீழ்ந்தார். எழ முடியாமல் தத்தளித்தாள் அழகம்மை!
அன்னை அழகம்மை ஓர் புறம். அண்ணன் நாகசாமி மறுபுறம். சிற்றப்பா சுப்பய்யர் இன்னொரு புறமாகத் தேடினார்கள். கடைசிவரை அவர்கள் தேடிக் கொண்டே இருந்தார்களேயன்றி, எந்தவித ஆறுதல் பதிலும், மனதிற்கு உற்சாகமூட்டும் வழிகளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை; தென்படவில்லை.
திடீரென ஒருநாள் ஒரு கூத்தாடி மானாமதுரையிலே உள்ள அழகம்மையின் கணவனது தம்பியிடம், ‘வெங்கட்ராமன் திருவனந்தபுரத்திலே தங்கிக் கூத்தாடி வரும் ஒரு நாடகக் குழுவிலே சேர்ந்து கூத்தாடுகிறான் என்பதைச் மூச்சு மேலும் கீழுமாக வாங்க ஓடி வந்து கூறினான்.
உடனே அழகம்மை தனது மைத்துனர் நெல்லையப்பரை அழைத்துக் கூத்தாடி கூறியது செய்தியா? வதந்தியா? என்றறியச் செய்தாள்! நெல்லையப்பர் போன சுவடுகள் தெரியாமல் திருவனந்தபுரத்தில் இருந்து ஏமாந்த முடிவோடு திரும்பினார். ஆனாலும் முன்னூறு நாட்கள் சுமந்து பெற்ற அன்னையாயிற்றே தானே! அதனால்தான் தாய் மிகவும் சோர்ந்தாள். தனது மகனைக் காணவில்லையே என்று!
வெங்கட்ராமனுடைய தமையனாரான நாகசாமி, தனது தம்பியைத் தேடி அலுத்துப் போய், பிறகு தனது கல்வியை முடித்துக் கொண்டு, மதுரையிலே உள்ள ஒரு ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணமாயிற்று அவருக்கு. ஓரளவுக்கு தாய் மன ஆறுதல் பெற்றிட நாகசாமி திருமணம் பெரிதும் உதவியாக இருந்தாலும், பெற்ற மகனை மறக்க முடியுமா அந்த தாயால்?
கொஞ்ச காலம் சென்றது. தந்தைக்குப் பிறகு அக்குடும்பத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்த சித்தப்பா சுப்பய்யர் காலமானார். மதுரையில் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது.
சுப்பய்யர் காரியச் சடங்குகளுக்காக எல்லா உறவினரும் மதுரை மாநகரிலே கூடியிருந்தார்கள். அப்போது திருச்சுழியைச் சேர்ந்த ஓராள் நாகசாமியிடமும் அழகம்மையிடமும் ஓவென்று கத்திக் கொண்டு ‘வெங்கட்டு அகப்பட்டு விட்டான், வெங்கட்டு அகப்பட்டு விட்டான்’ என்று ஓடி வந்தான்.
சடங்குக்காக வந்திருந்த எல்லாரும் பரபரப்புடன் திடுக்கிட்டு எழுந்து ‘எங்கே? எங்கே?’ என்று கேட்டு வியப்படைந்து நின்றார்கள்.
உடனே ஓடிவந்த அந்த ஆள், திருவண்ணாமலை நகரில்! சாமியாராக! இருக்கிறானாம் என்றான்.
அந்த ஆளுக்கும் வெங்கட்டு மீது கொள்ளையாசை! அதனால் செய்தியைக் கேட்டறிந்த உணர்ச்சியுடன் அவசரம் அவசரமாக ஓடிவந்து கத்தினான். தனக்கு எப்படிக் கிடைத்தது இந்தத் தகவல் என்பதையும் அந்த மனிதன் கூறிய போதுதான், அழகம்மையின் கொழுந்தனார் நெல்லையப்பருக்கும் முழு நம்பிக்கை வந்தது!
நெல்லையப்பர் அதே ஆளைக் கூட்டிக் கொண்டு, தகவல் கிடைத்த இடத்துக்குச் சென்று அங்கே மேலும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டு, அன்றிரவே திருவண்ணாமலை சென்றார்.
இரமணரிஷி அப்போது வெங்கட்ராம நாயக்கரின் மாந்தோப்பு மேடையிலே அமர்ந்திருந்தார். நெல்லையப்பர் ‘ரமணரைப் பார்க்கவேண்டுமென்று நாயக்கரிடம் அனுமதி கேட்டார்’. நாயக்கர் ‘முடியாது’ என்றார். மறுபடியும் நெல்லையப்பர் கெஞ்சினார். நாயக்கர் மீண்டும் மறுத்தார். இறுதியாக நெல்லையப்பர் தான் யாரென்பதையும், தனது பெயரையும் ஒரு தாளில் எழுதி இதை ரமணரிடம் கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கவே அவர் மனமிரங்கித் தனது கட்டுப்பாட்டைத் தளர்த்தினார். கடிதத்தை அவர் ரமணரிடம் காட்டினார். அதைக் கண்டதும் அவர்களை உள்ளே அனுப்புமாறு சைகை செய்தார் ரமணரிஷி!
நெல்லைப்பரைக் கண்டதும், ரமண சுவாமிகள் வாய்திறந்தே அவரிடம் பேசவில்லை. காரணம், அப்போதிருந்த சூழ்நிலையானது அவரை வாயைத் திறக்க விடவுமில்லை; அதற்கான நேரமுமில்லை; சந்தர்ப்பமும் அமையவில்லை. இந்தச் சூழ்நிலையின் நெருக்கடி நெல்லையப்பருக்குத் தெரிந்திட நியாயமில்லை அல்லவா?
ரமணரிடம் பேச முடியாத ஒரு நிலை உருவானதைக் கண்ட அவர், உடனே தனது தன் நிலையை உள்ளுணர்வை, விளக்கத்தை, உறவு முறையின் நெருக்கத்தைப் பழனிசாமி சாமியாரிடம் கூறினார்.
‘ஐயா சாமி’, நமது பரம்பரையில், இனத்தில் இப்படி ஒரு மகான் தோன்றியிருப்பதைக் குறித்து எங்களுக்கு மிகவும் பேரானந்தம் தான், ஆனால், ரமணர் இத்தகைய ஒரு நிலையிலே இருப்பதைத்தான் என்னால் பார்க்க சகிக்கவில்லை. அவர் துறவியாகவே இருக்கட்டும்; வாழட்டும் ஆன்ம சேவை செய்யட்டும்; அருளாசிகளை மக்களுக்கு வழங்கட்டும்! ஆனால் இதே பணியை, எந்த வித தொல்லைகளும் அவருக்குச் சூழாமல் எங்களோடு இருந்து கொண்டு செய்யட்டுமே! எங்களால் எந்தவித தடைகளும் அவரது தவத்துக்கோ, தியான வழிபாடுகளுக்கோ ஏற்படாதபடி நாங்கள் பாதுகாப்பாகவே இருப்போம் இல்லையா? என்று நெல்லையப்பர் மிகவும் தழ தழத்தக் குரலோடு பழனிசாமி சாமியாரிடம் பேசினார். இதே கருத்துக்களை ரமணரும் கேட்டுக் கொண்டேதான் இருந்தார்.
சாமி ரமணர் நெல்லையப்பரின் எந்தக் கருத்தையும் ஏற்காதது மட்டுமன்று; அவரை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நெல்லையப்பர் சில நாட்கள் திருவண்ணாமலையில் தங்கியிருந்து, அடிக்கடி ரமணரிடம் வேண்டுகோளை விடுத்தவண்ணம் தான் இருந்தார்.
எல்லாவற்றுக்கும் ரமணர் ஊமையாகவே இருந்தாரே யன்றி, நெல்லையப்பரின் பொய்மொழிகளைத் தன் காதுகளால் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எனவே, நெல்லையப்பர் மதுரைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
நெல்லையப்பர் சொல்லியதைக் கேட்ட ரமணரின் அண்ணன் நாகசாமி, டிசம்பர் மாதம் வரும் அரசு விடுமுறை நாட்களில் தனது அன்னையுடன் திருவண்ணாமலை வந்தார்.
அந்த நேரத்தில் ரமணரிஷி, குன்றக்குடி மடமான குருமூர்த்தத்தில் தங்கியிருக்கவில்லை. திருவண்ணாமலையிலுள்ள அருணாசல மலையின் ஒரு குன்றுக் குகையிலே தங்கியிருந்தார். பெற்றதாயும், உடன் பிறந்த சகோதரனும் அங்கே சென்று ரமணரைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்கள். பத்து மாதம் சுமந்தவள் அல்லவா? அவளுக்குத்தானே தெரியும் அவள் அனுபவித்த துன்பங்கள்? அதனால் அழகம்மை பதறி, கதறி சிந்தினார் கண்ணீர்.
தாய் துடித்தாள்! அது அவளின் முன்னூறு நாட்களின் பாசம்! ஆனால், ஒரே இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பு நாகசாமி ஊமையாகவே நின்றார்! ஆனால், சுவாமிகளைத் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு தாயார் அழைத்தாள்; பெற்ற பிள்ளையை பேசினாள்; இதற்கா உனை ஈன்றேன் என்று தன்னையே அவள் நொந்தாள்! இவற்றையெல்லாம் ரமணர் சிலை போல நின்று பார்த்துக் கொண்டே இருந்தார்.
இதைவிட வேறு என்ன செய்ய இயலும் அவளால்? அருணாசலத்தைவிட அதிக அருமையுடைய அன்பை வேண்டுமானால் அவளால் வழங்க முடியும்! அதனால்தான் ஊமைபோல நின்று தாயன்புக்கு உள்ளத்தை அடகு வைத்தார்.
அன்னையார் அழுதாள்! இதை அருகிருந்த ஒருவர் பார்த்து, இப்படி அழுகிறாரே உமது அன்னையார் ஏதாவது ஆறுதல் கூறி அனுப்புங்கள் என்றார். ஒரே ஓர் அன்பான வார்த்தையைச் சொல்லுங்கள். அந்தச் சொற்களே பெற்ற தாயின் குடியிருந்த கோயிலுக்கு ஆறுதலான தேவாரமாக இருக்கும் சுவாமி என்று ரமணரிடம் கெஞ்சினார்!
அருகிருந்தவரின் வார்த்தைகள் ரமணரின் நெஞ்சை உருக்கிற்று. பேச வேண்டாம் சுவாமி, எழுதிக் காட்டுங்கள். அதுவே அம்மாவுக்குரிய பாசப் புதையலாகவும் இருக்கும் என்றதைக் கேட்ட ரமணர், கீழ்க்கண்டவாறு எழுதித் தன் தாயின் கையிலே கொடுத்தார்.
“உயிரின் வினை வழியேதான் கடவுள் அவனை நடத்துகிறான். என்ன முயன்றாலும், நடக்க முடியாததை நடக்கும்படிச் செய்ய முடியாது. இது முற்றிலும் உண்மை. எனவே மௌனமாக இருப்பதே அறிவுடைமை” என்று பகவவான் ரமணர் தனது தாயாருக்கு எழுதிக் கொடுத்தார் ஒரு தாளில்!
அன்னை அதைப் படித்தாள்! அவளுடைய அன்பு வேதனை அல்லாடியது. குறை குடம் போல் ஆடித் தத்தளித்தது! மனம் தளும்பிக் கொண்டே அடைக்குந்தாழ்க்கு உண்டோ தாள்? என்று ஏங்கி எண்ணியபடியே மூத்த மகனோடு மதுரை திரும்பினார்!