Get it on Google Play
Download on the App Store

இயல் I தொன்மையும், தோற்றமும்.

 

 

←சேதுபதி மன்னர் வரலாறு

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்இயல் I தொன்மையும், தோற்றமும்.

i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்→

 

 

 

 

 


418940சேதுபதி மன்னர் வரலாறு — இயல் I தொன்மையும், தோற்றமும்.எஸ். எம். கமால்

 

இயல் - I
சேதுபதிமன்னர்களது
தொன்மையும் தோற்றமும்
பன்னெடுங்காலமாக வடக்கேயுள்ள வேங்கடமலைக்கும், தெற்கேயுள்ள குமரிமுனைக்கும் இடைப்பட்டதாகத் தமிழகம் அமைந்துள்ளது. இதனை 12ஆம் நூற்றாண்டு இலக்கண நன்னுல் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என வரையறுத்துள்ளது. இந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும்,


“நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு"

எனப் புகழ்ந்துள்ளார்.
இந்தப் பெரு நிலப்பரப்பைச் சங்ககாலந்தொட்டு முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. பாண்டிய மன்னர்களது கிழக்கு எல்லையான வங்கக் கடற்கரைப் பகுதி பிற்காலத்தில் மறவர் சீமை அல்லது சேதுநாடு என வழங்கப்பெற்றது. இதிகாசநாயகனான இராமபிரான் அமைத்த திருவணை எனப்படும் சேது. இந்தப் பகுதியின் கிழக்கே அமைந்து இருப்பதாலும், பல நூற்றாண்டு காலமாக மறவர் இன மக்கள் மிகுதியாக, இங்கு வாழ்ந்து வந்ததாலும், இந்தப் பகுதிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது.
மறவர் இன மக்களது ஏழு பிரிவினர்களில் இறுதிப்பிரிவினரான செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்டின் அதிபதிகளாக, சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயருடன் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த சேதுபதிகளைப் பற்றிய செய்திகள் குறிப்பாக இவர்கள் எந்த நூற்றாண்டிலிருந்து இந்தப் பகுதியின் ஆட்சியாளராக மாறினர் என்பதும், அவர்களது ஆட்சி, மாட்சி பற்றிய செய்திகளும் வரலாற்றில் தெளிவாக இடம் பெறவில்லை. சேதுபதி மன்னர்களது பூர்வீகம் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான கதைகள் பலவும் உள்ளன.
முதலாவதாக இலங்கை சென்று சீதாப்பிராட்டியை மீட்டுவந்த இராமபிரானைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்து வந்ததால், அதற்கு தோஷநிவர்த்தியாக இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாப்பிராட்டி மண்ணால் சமைத்த லிங்கத்தை இராமபிரானும் சீதாப்பிராட்டியும் வழிபாடு செய்தனர் என்றும், அதற்குப் பிறகு அவர்கள் அயோத்தி திரும்புவதற்கு முன்னர் அங்கு மிகுதியாக வாழ்ந்த மறவர் இனத் தலைவரைச் சேது அணையைக் காத்து வருமாறு நியமித்தார் என்றும் அந்த மறத் தலைவரது வழிவந்தவர்கள்தான் சேதுபதிகள் என்பதும் செவிவழிச் செய்தி.
மற்றொன்று, இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித் திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும் அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும், அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது பிறிதொரு செய்தி[1] 
சோழப் பேரரசை நிறுவிய இராஜராஜ சோழனும் அவர் மகன் இராஜேந்திர சோழனும் இலங்கை நாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டபோது, அவர்களது தானைத் தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பானவராக நியமனம் செய்தார் என்பதும், அவரது வழியினர்தான் சேதுபதி மன்னர்கள் என்பதும் பிறிதொரு செய்தி[2]
இந்தச் செய்திகள் வரலாற்றுக்கு முரண்பட்ட வகையில் அமைந்திருந்த போதிலும் சேதுபதி மன்னர்கள் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலைத்திருந்த தன்னரசு மன்னர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி இந்த மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் கி.பி. 15ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் இருந்ததாகத் தெரிகிறது[3]


 இதனை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியும் உள்ளது இராமேஸ்வரம் தீவிற்கு எதிர்க் கரையில் உள்ள இலங்கை நாட்டின் யாழ்ப்பான நல்லூரில் முதன்முறையாகக் குமரவேளுக்குக் கோயில் அமைத்தபோது அங்கு ஆறுகால பூஜை முதலியன முறையாக நடப்பதற்குத் தகுதியான பிராமண சிரேஷ்டர்களை அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மன்னர், ஆரியச் சக்கரவர்த்தி, சேதுபதி மன்னரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது இருந்த சேதுபதி மன்னரும் ஆகம சாஸ்திரங்களில் வல்ல 10 பிராமணர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்தச் செய்தியினை 15ஆவது நூற்றாண்டு இலக்கியமான முத்து ராஜக் கவிராயரது கைலாய மாலை தெரிவிக்கின்றது.
ஆனால், இவர்கள் கி.பி. 1607 - கி.பி. 1792 வரை வழங்கியுள்ள செப்பேடுகளின்படி இவர்களது பூர்வீக நகரமாக இன்றைய இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த விரையாத கண்டன் என்ற ஊர் குறிப்பிடப் படுவதிலிருந்து இவர்களது தொன்மை புலப்படுகிறது. மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் எழுதிய செந்தமிழ் இதழ்க் கட்டுரையின்படி இவர்கள் சோழ மண்டலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தானைத் தலைவர்களாக இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. இதனை மேலும் தெளிவு படுத்தக்கூடிய ஆவணங்கள் இல்லையென்றாலும், இந்தச் சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் தொடர்ந்து காணப்படும். "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழ நல்லூர்" என்ற ஊரை ஏற்படுத்தி அங்கேயே நிலைத்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்று மூன்றாம் குலோத்துங்க சோழனைப் பற்றிய இலக்கியமான ”சங்கர சோழன் உலா” வில் 'தஞ்சைக்கும் கோழிக்கும் தாமப்புகாருக்கும் சேதுக்கும்' என்ற தொடரிலிருந்து 3 ஆம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஒரு பகுதியாக சேதுநாடும் இருந்தது என்று தெரிகிறது.
சோழ நாட்டிலிருந்து வந்த இந்த தானைத் தளபதிகள் முதலில் கானாடு என்று வழங்கப்பெறும் திருமெய்யம் பகுதியில் முதலில் நிலைத்து இருந்தனர். அப்பொழுது 12ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி என்பவர் திருமெய்யம் கோட்டையைக் கட்டியதாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. அவர்கள் அந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள மறவர் இன மக்களிடையே இரண்டு ஊர்களிலிருந்து சேதுபதி மன்னருக்குத் தங்களது பெண்மக்களை மணம் புரிந்துகொள்வதற்கு சிறை கொடுத்ததாகவும் அதற்காக அந்த இரண்டு ஊர் மக்களும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் சலுகைகள் வழங்கியதை மேலப்பனையூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[4]
இந்த மன்னர்கள் கானாட்டில் திருமெய்யம் பகுதியில் முதலில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நிலைத்திருந்ததை உறுதிப்படுத்தும் சில சான்றுகள் அண்மையில் கிடைத்துள்ளன. முதலாவதாக, திருமெய்யம் குன்றின் அடிப்பகுதியில் அரண் ஒன்றினை கி.பி. 1120ல் விஜயரகுநாத முத்து வயிரிய முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் இந்தக் குன்றின் மேல் பகுதியில் கி.பி. 1195-ல் முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் அமைத்தனர் என தமக்குக் கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் ஆதாரத்தைக் கொண்டு கி.பி. 1882-ல் திருமெய்யம் தாசில்தார் புதுக்கோட்டை தர்பாருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.[5]
மேலும் கி.பி. 1909ல் தயாரிக்கப்பட்ட ஸ்டாட்டிஸ்டிகல் அக்கவுண்ட் ஆப் புதுக்கோட்டை என்ற அறிக்கையின்படி தற்பொழுதைய திருமெய்யம் கோட்டையின் கிழக்கு - வடக்குப் பகுதிகளை 20 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கட்சுவர்களால் இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1676 ல் அமைத்தார் என்ற செய்தி காணப்படுகிறது.
பாண்டிய நாட்டில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களது ஆட்சி தொடர்ந்து வந்ததும் அதனை அடுத்து கி.பி. 1311 முதல் 1378 வரை டில்லி சுல்த்தான்களது ஆட்சியும், அதனைத் தொடர்ந்து விசயநகர மன்னர்களது மகாமண்டலேசுரர்களது நிர்வாகமும் நடைபெற்று வந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சோழர்களது தானைத் தலைவர்களாக இருந்த செம்பி நாட்டு மறவர்கள் தம்மைத் தன்னாட்சி மன்னர்களாக அறிவித்து, ஆட்சியாளர்களாக மாறினர் என்பதுதான் பொருத்தமான வரலாற்று ஊகமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வானாதிராயர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வது இங்கு ஏற்புடையதாகும். வாணர்கள் என்றும் பின்னர் வாணாதிராயர்கள் என்றும் வழங்கப்பெற்ற பேராற்றல்மிக்க இனத்தவர்கள் பாண்டியர்கள், சோழர்கள். நாயக்கர்கள் ஆட்சிக் காலங்களில் அவர்களது நிர்வாகத் தலைவராகவும். படைத்தளபதிகளாகவும் இருந்து 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அழகர்கோவில், மானாமதுரை போன்ற இடங்களைத் தங்களது தலைமையிடங்களாகச் சொந்தத் தன்னரசுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்,[6] அவர்களைப் போல சோழர்களின் தானைத் தலைவர்களாக இருந்த செம்பிநாட்டு மறவர்கள், அப்பொழுது அவர்களது பொறுப்பில் இருந்த பகுதிக்குத் தங்களை அதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். அவர்களது நாடு பின்னர் சேதுநாடு என்று வழங்கப்பட்டது.
ஆனால் சேதுபதி மன்னர்களது தொன்மையைப் பற்றிக் கூறும்போது இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் அவர் அமைத்த திருவணையாகிய சேது அணையைக் காத்து வர அவரால் நியமிக்கப்பட்ட மக்கள் தலைவரது வழியினர் என்று சொல்லப்படுகிறது.
சேது + பதி --- சேதுபதி
சேனை + அதிபதி --- சேனாதிபதி
மடம் + அதிபதி --- மடாதிபதி
என்ற வழக்கிற்கேற்ப இம்மன்னர்களின் குலப்பெயரும் சேதுபதி என ஏற்பட்டிருத்தல் வேண்டும். "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்ற ஆழ்வார்களது ஐதீகத்தையொட்டி "சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனம் எனச் செப்பலாமே" என்ற வழக்கும் இருந்து வந்துள்ளது. -
இவர்களது தொன்மை எப்படி இருந்த போதிலும், இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளின்படி இந்த மன்னர்கள் சிறந்த ஆட்சியாளராகவும், ஆன்மீகத்தையும், தாய்மொழியாகிய தமிழையும், போற்றி வந்துள்ளனர் என்ற உண்மை புலப்படுகிறது.
கி.பி. 1414இல் இராமேஸ்வரம் திருக்கோயில் திருச்சுற்றையும் மேலக் கோபுரத்தையும் உடையான் சேதுபதி என்பவர் அமைத்தார் என்ற கல்வெட்டுச் செய்திதான் சேதுபதி மன்னரைப் பற்றிய மிகப் பழமையான கல்வெட்டுச் செய்தியாக கொள்ளப்படுகிறது. வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் பர்கூசன் குறிப்பிட்டுள்ள இராமேஸ்வரம் கல்வெட்டுக்களின் படி, சேதுபதி மன்னர்கள் கி.பி. 1487, 1500, 1524 ஆகிய ஆண்டுகளில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு அறக்கொடைகள் வழங்கியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.[7]
கி.பி. 1547இல் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள வேதாளை கிராமத்தில் போர்ச்சுகல் நாட்டு வீரர்களுக்கும், மதுரை நாயக்கர், சேதுபதி


 வீரர்களுக்கும் இடையில் நடந்த போர் நிகழ்ச்சியின்படி சேதுபதி மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் 16ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து வந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. துத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த போர்த்துக்கீசியரின் ஒரு அணியினர் வேதாளை கிராமத்தில் ஒரு சிறிய கோட்டையை அமைத்துக்கொண்டு இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த இடைஞ்சல் ஏற்படுத்தி வந்தனர்.
அப்பொழுது இருந்த சேதுபதி மன்னர் இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கான வலிமையற்றிருந்தால் மதுரை மன்னரை அணுகி படைபலம் பெற்றுப் போர்த்துக் கீசியப் பரங்கிகளைத் துரத்தியடித்தார் என்ற செய்தி சேதுபதிகளின் ஆட்சியினை உறுதிப்படுத்துகிறது.[8] மற்றுமோர் வரலாற்றுச் செய்தி, கி.பி. 1530 முதல் மதுரை நாயக்க மன்னராய் இருந்த விசுவநாத நாயக்கர் மதுரையில் தொன்றுதொட்டு ஆட்சியாளராக இருந்த பாண்டியர்களை அழித்து அவர்களை வலுவிழக்கச் செய்து, கயத்தாறு, தென்காசி ஆகிய இடங்களில் பெயரளவில் மன்னராய் இருக்கச் செய்தது போல, மறவர் சீமையின் ஆட்சியாளரான விரையாத கண்டனிலிருந்த ஜெயதுங்க தேவரையும் ஆட்சியிலிருந்து அகற்றியதுடன் அவரைக் கொன்றும் விட்டார். [9]
இதனால் நிலைகுலைந்த மறவர்களது அரசின் நிர்வாகிகளும் அரச குடும்பத்தினரும் கிழக்கே தற்பொழுது போகலூர் என்றழைக்கப்படும் புகலூரில் அடைக்கலம் பெற்றனர். புகலூர் என்ற பெயரே இந்த அரச குடும்பத்தினர் அடைக்கலம் பெற்றதைக் குறிப்பிடுவதாக அமைந்தது. இவர்களது. வாரிசான சடைக்கத் தேவன் என்ற இளைஞன் மட்டும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் தஞ்சம் அடைந்தான். மறவர் சீமையில் இயல்பு நிலை ஏற்பட்ட பொழுது கி.பி. 1600ல் இளைஞன் சடைக்கன் போகலூரில் சேது மன்னர்களது முதலாவது அரசினை நிறுவினான்.
இதனை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இளைஞன் சடைக்கன், சடைக்கன் சேதுபதி என்ற பட்டத்துடன் அரசு நிர்வாகத்தை ஏற்ற பிறகு தம்மை இலங்கையிலிருந்து தேடிப் பிடித்துப் போகலூர்க்கு அழைத்து வந்தவர் கீழ்க்கரை நகர மரீச்சி ஆசாரி என்பவரைப் பாராட்டிச் சிறப்புச் செய்தது தான் அந்தச் செய்தி[10]ஆகும்.


 

 


↑ கீழ்த்திசை சுவடி நிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS)

↑ Seshadri. Dr. - Sethupathis of Ramnad. (1974) thesis.

↑ James Fergusson - History India and the Eastern Architecture (1911).

↑  புலவர் சே.ராசு சேதுபதி செப்பேடுகள் (1995) - பக்கங்கள்

↑ Pudukkottai Durbar Records R.Dis. No: 9/1882 Quoted by Prof. K.V. Viswanathan in his M.phil., Thesis (1980)

↑ தனிப்பாடல் திரட்டு

↑  Jamesfargoosan - The history of India and the great eastern architecture. (1876)

சே. - 2

↑  Rev. fr. Heras – The aravedu dynasty.

↑   Satyanatha Ayyar. The history of Madura nayakas.

↑  Entries in the inam Register available in the Ramanathapuram collector's office

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு