Get it on Google Play
Download on the App Store

i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

 

 

←vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

ii. இராமன் இல்லாத அயோத்தி→

 

 

 

 

 


418953சேதுபதி மன்னர் வரலாறு — i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதிஎஸ். எம். கமால்

 

இயல் - VIII. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
இந்த மன்னர் பாலகனாய் இருக்கும்போது கி.பி. 1762-ல் பட்டம் சூட்டப்பட்டதால் இவரது அரசப் பிரதிநிதியாக இவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.
இந்தக் கால கட்டத்தில் தென்னகத்தில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆயுத வலிமை கொண்டு சென்னையில் நிறுவப்பட்டிருந்தது. ஆற்காடு நவாபிற்குக் கட்டுப்படாமல் அவருடைய ஆதிக்கத்தை எதிர்த்த மதுரை, நெல்லைசீமைப் பாளையக்காரர்களை கி.பி. 1751 முதல் மேற்கொண்ட பல போர்களின் மூலம் அவர்களை எல்லாம் அடக்கி ஒடுக்கிக் கப்பத் தொகையை நவாப் பெற்று வந்தார். அப்பொழுது தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற நான்கு தன்னரசுகள் மட்டும் இருந்தன. ஏற்கனவே தஞ்சையை நவாபும், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரும் பங்கிட்டுக் கொண்டு பெயரளவில் தஞ்சை மன்னரைத் தஞ்சைச் சீமை அரசராக அங்கீகரித்திருந்தனர். எஞ்சிய மூன்று தன்னரசுகளில் கள்ளர் சீமை மன்னரான புதுக்கோட்டை மன்னரை விட்டுவிட்டு, மறவர் சீமையின் மன்னர்களான இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் மீது படையெடுப்பதற்கு ஆற்காடு நவாபு திட்டமிட்டு வந்தார்.
இதற்கிடையில் தஞ்சை மன்னராக இருந்த துல்ஜாஜி கி.பி. 1771-ல் மறவர் சீமை மீது படையெடுத்தார். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதிகளை வேகமாகக் கடந்து வந்து அனுமந்தக்குடி கோட்டையைத், தஞ்சைப் படைகள் கைப்பற்றி விட்டன. இதையறிந்த ராணி முத்துத் திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைப் பிள்ளையும் ஆக்கிரமிப்பாளர்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இராமநாதபுரம் சீமைக்கு உரிமை கோரிய ஆறுமுகம் கோட்டை, மாப்பிள்ளைத் தேவர் தஞ்சைப்படைகளை முன் நடத்தி வர இராமநாதபுரம் கோட்டையை முற்றுகையிட்டனர். மன்னர் துல்ஜாஜியும் இந்தப் போரில் நேரிடையாகக் கலந்து கொண்டார். இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி ஏற்படா நிலையில், இந்தப் போர் 30 நாட்கள் நீடித்தன. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு திட்டத்தை இராமநாதபுரம் தரப்பில் வரைந்தனர். திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது இராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த்தேக்கத்தில் நிறைவாக இருந்த நீரைக் கண்மாய்க்கரையைச் சிறிது அகழ்வதின் மூலமாக ஒரு பெரிய உடைப்பை ஏற்படுத்தவும் அதன் வழி மிகுந்த வேகத்துடன் பாய்ந்து சென்ற கண்மாய் நீரை கிழக்கே ஓடிவந்து இராமநாதபுரம் கோட்டையை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருந்த தஞ்சைப் படைகளை முழுமையாக அழித்தது. வேறு வழியில்லாமல் தஞ்சை அரசர் சேதுபதி ராணியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ஓரளவு நஷ்டஈட்டையும் பெற்றுக்கொண்டு தஞ்சை திரும்பினார். இது நடந்தது ஜூன் 1771.
ஆற்காடு நவாப்பின் படையெடுப்பு
இந்த நிகழ்ச்சிக்கு ஒராண்டு கழித்து ஆற்காடு நவாபின் படைகளும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கூலிப்படைகளும், நவாபின் மைந்தர் உம் தத்துல் உம்ராவும், தளபதி ஜோசப் ஸ்மித்தும் இந்தப் படையெடுப் பிற்கு கூட்டுத்தலைமை ஏற்றனர். திருச்சியிலிருந்து திரட்டி வந்த பெரும்படை 29.05.1772-ஆம் நாள் இராமநாதபுரம் கோட்டையைச் சூழ்ந்தது.[1] தொடர்ந்து மூன்று நாள்கள் ராணி சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் ஆற்காடு நவாபிற்குக் கப்பம் கட்ட ராணி மறுத்துவிட்டார். இதனால் சீற்றம் கொண்ட நவாபின் மைந்தர் உம்தத்துல் உம்ரா ஏற்கனவே கோட்டையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கி வண்டி வீரர்களுக்கு சமிங்ஞை செய்ததும் இராமநாதபுரம் கோட்டை மீது பீரங்கிகள் அக்கினி மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இரண்டு நாள்கள் போர் நடைபெற்றும் வெற்றி ஈட்டாத எதிர்ப்படைகள் கோட்டையின் கிழக்கு மதிலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பின் வழியாகத் தளபதி ஸ்டிவன்சன் தலைமையில் ஒரு அணி பாய்ந்து சென்றது. இராமநாதபுரம் கோட்டை வாயிலுக்கும் அரண்மனைக்கும் இடைப்பட்ட பரந்த மைதானத்தில் பரங்கியரும், மறவர்களும் கடுமையாகப் போரிட்டனர். முடிவில் 3000 மறவர்களை இழந்த இராமநாதபுரம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணிந்தது. இது நிகழ்ந்தது 03.06.1772. கைது செய்யப்பட்ட ராணி சேதுபதியும் இரண்டு பெண்மக்களும் இளவரசர் முத்துராமலிங்க சேதுபதியும் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறை வாழ்க்கையின்போது ராணியும் அவரது இளைய மகளும் காலமானார்கள்.
நவாபின் ஆட்சி
சேது நாட்டில் ஆற்காடு நவாபின் நிர்வாகம் 8 ஆண்டுகள் தொடர்ந்தன. இந்தக் கால கட்டத்தில் ஏற்கனவே தஞ்சை மன்னரது உதவியும் இராமநாதபுரம் சீமையைத் தாக்கிய ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச்சாமித் தேவர் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவி பெற்றுச் சேதுபதிச் சீமையில் ஆற்காடு நவாபு நிர்வாகத்தை எதிர்த்துப் போரிட்டார். நவாபின் ஆட்சியில் புகுத்தப்பட்ட அரசாங்க ஆண்டு முறை ஹிஜிரி கணக்கு சேதுநாட்டுப் பணத்திற்குப் பதில் ஆற்காடு வெள்ளி ரூபாய் போன்ற புதிய மாற்றங்களினால் அதிருப்தியுற்ற மக்கள், மாப்பிள்ளைச்சாமித் தேவருடன் இணைந்து எதிர்ப்பு அணியைப் பலப்படுத்தி வந்தனர். இதே காலக்கட்டத்தில் சிவகங்கைச் சீமையையும் ஆக்கிரமித்து அங்கிருந்த மன்னர் முத்துவடுகநாத தேவரை 25.05.1772-ல் காளையார் கோவில் போரில் கொன்று, சீமையின் நிர்வாகத்தை, ஆற்காடு நவாபு ஏற்றிருந்ததால் அங்கும் அதிருப்தி நிலவியது. அடுத்து கி.பி. 1780 ஜூன் மாதம் மைசூர் மன்னர் ஹைதர் அலி வழங்கிய குதிரைப்படைகளின் உதவி கொண்டு மன்னரது விதவை மனைவி இராணி வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையில் மறவராட்சியை ஏற்படுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் இராமநாதபுரம் சீமையும் தன்னுடைய கையைவிட்டு நீங்காமலிருப்பதற்காக ஆற்காடு நவாபு ஒரு திட்டத்தினை உருவாக்கி சேதுபதி மன்னரது ஒப்புதலையும் பெற்றார். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் அன்பளிப்புத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்தவும் சம்மதித்தார். காலமெல்லாம் திருச்சிக் கோட்டையில் சிறைக்கைதியாக இருந்து சாவதை விட நவாபினது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் சிறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் சேதுபதி மன்னரான பிறகு நவாபையும், பரங்கியரையும் உறுதியாகவும் இறுதியாகவும் அழித்து ஒழித்து விடலாம் என அந்த இளம் மன்னர் திட்டமிட்டிருந்தார். 
மீண்டும் சேதுபதி மன்னர் ஆட்சி:
பின்னர் சேதுபதி மன்னர் பல விறுவிறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சேது நாட்டில் வறட்சி ஏற்படும்போது தஞ்சைச் சீமையிலிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்து வந்து மக்களுக்கு வழங்குவதற்கும், சேதுநாட்டில் நல்ல அறுவடை ஏற்படும் போது உபரி தானியத்தைப் பக்கத்திலுள்ள இலங்கை நாட்டிற்கும் கேரளத்திற்கும் அனுப்புவதற்கும். ஏற்ற வகையில் கிழக்குக் கடற்கரையில் கிட்டங்கிகளை அமைத்தார். மேலும் கருப்பட்டி, தேங்காய், எண்ணெய் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாப் பண்டங்களைக் கொள்முதல் செய்வதற்கு வியாபாரத் துறை என்ற ஒரு தனி அமைப்பையே உருவாக்கினார். மற்றும் சேதுநாட்டுக் கடலில் கிடைக்கும் சங்குகளைப் படகிலேற்றி வங்காளத்திற்கு எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்ய கல்கத்தாவில் ஒரு சேமிப்புக் கிடங்கையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்து வந்த நெசவுத் தொழிலில் சுமார் 650 கைத்தறிகள் சேதுநாட்டின் கிழக்கு, வடக்கு மேற்குப் பகுதிகளில் இயங்கி வந்தன. இவைகளில் பரமக்குடியில் மட்டும் சேது மன்னரது குத்தகைக்கு உட்பட்ட சுமார் 100 கைத்தறிகள் சேதுநாட்டுக்கு வெளியே விரும்பி, வாங்கப்பட்ட (Sea Breeze) போன்ற வகைக் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து வந்தன. இவைகளைப் பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும் போட்டியிட்டு வாங்கி காரைக்கால், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை போன்ற இடங்களுக்கு அனுப்பி வந்தனர். இதனால் சேதுநாட்டில் சேதுபதி நாணயங்களுடன் டச்சுக் காரர்களது நாணயமான போர்டோநோவா, பக்கோடா, பணம் பெருமளவில் சேதுநாட்டின் செலாவணியிலிருந்து நாட்டின் வளமைக்கு வலுவூட்டியது. இந்த நாணயங்களுக்கு ஈடாகச் சேதுநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்வதற்குச் சேது மன்னர் ஒரு நாணய மாற்றுச் சாலையையும் ஏற்படுத்தினார். இந்தக் கால கட்டத்தில் இந்த மன்னரிடம், பேஷ்குஷ் தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஆற்காடு நவாபு கர்னல் மார்ட்டின்ஸ் என்ற பரங்கியை இராமநாதபுரம் கோட்டையில் அவரது தனி அலுவலராக நியமித்திருந்தார். மன்னர் இளம் வயதினராக இருந்ததால் நிர்வாக அனுபவங்களைப் பெறுவதற்குத் தளபதி மார்ட்டின்ஸை நாடினார். அப்பொழுது ஆங்கிலக் கல்விப் புலமை பெற்றிருந்த முத்திருளப்ப பிள்ளை என்பவரை மன்னரது பிரதானியாக பணியாற்ற மார்டின்ஸ் பரிந்துரைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மிக எளிய குடும்பத்தில் வறுமையில் வாடிய முத்திருளப்ப பிள்ளையின் தாயார் நெல்லை மாவட்டத்தை அடுத்திருந்த சேதுபதிச் சீமையில் உச்சி நத்தம் கிராமத்தில் உள்ள ரெட்டியார் வீட்டுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அந்த ரெட்டியார் முயற்சியில் இளைஞர் முத்திருளப்ப பிள்ளை ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றதுடன் பின்னர் சேது நாட்டுப் பிரதானியாக நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த ராஜ தந்திரியாக விளங்கினார். சீர்திருத்தங்கள்:
இவரது நிர்வாகத்தின்போது இராமநாதபுரம் சீமையின் பெரும் பகுதிக்கும் பிரதானி ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மண்வளம். நீர் வளம் ஆகியவைகளை ஆய்வு செய்து, அந்த நிலங்களுக்குரிய தீர்வையைப் பணமாக பெறும் முறையை ஏற்படுத்தினார் மற்றும் பராமரிப்பில்லாமல் பழுதுபட்டுப் போயுள்ள ஆலயங்களையும், மடங்களையும் செப்பனிடுவதற்காக அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்ற தீர்வையில் ஒரு சிறு பகுதியை ஜாரி மகமை என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகார முற்றுப்பெறும் தருவாயில் மிகச் சிறப்பாக அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் நாம் காணலாம். இதேபோல் இராமநாதபுரத்திற்கு அடுத்து சேதுமன்னர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருமருதூர் (எ) நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார். அவரும் நாற்பது நாள்கள் நீடித்த அந்தத் திருப்பணியைச் சிறப்பாக முற்றுப்பெறச் செய்ததை அங்குள்ள கல்வெட்டு இன்னும் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கிறது.[2]
இந்தப் பிரதானியாரது நிர்வாகத்தில் உருப்பெற்றதுதான் இன்று மதுரை மாவட்டத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியார் அனைத்திட்டம் ஆகும். சேது நாட்டில் 12 மாதங்களில் பெரும்பாலான பகுதி வறட்சி மிக்கதாக இருப்பதால் இந்தச் சீமையைத் தஞ்சைச் சீமைபோல் நீர்வளம் மிக்கதாகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்ட சேது மன்னருக்குப் பிரதானி இந்தத் திட்டத்தை வரைந்து கொடுத்தார். இதன்படி மதுரை மாவட்டத்தின் வருச நாட்டின் மலைப்பகுதியில் தோற்றம் பெறும் வைகை ஆறு சில பாறைகளின் இடர்ப்பாடுகளின் காரணமாக வைகையின் வெள்ளம் முழுவதும் கிழக்கு நோக்கி மதுரை வழியாக இராமநாதபுரம் சீமைக்கு வந்தடைவதற்குப் பதிலாக, மேற்கே திசைமாறிச் சென்று அரபிக் கடலில் வீணாகக் கலந்து வந்தது. அதைத் தடுத்து நிறுத்தி வைகை வெள்ளத்தை முழுமையாகச் சேதுநாட்டில் பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் காலச் சூழலில் சேதுபதி மன்னரும் சேது நாட்டு அரசராக நீடிக்கவில்லை. கி.பி. 1792-ல் முத்திருளப்ப பிள்ளையும் அவரின் பிரதானியாகப் பணியாற்ற முடியாத துரதிருஷ்ட நிலை. காலம் மாறியது. அதனையடுத்த 100 ஆண்டுகள் கழித்து அந்தப் பெரியார் அணைத்திட்டம் ஆங்கில ஆட்சியில் உருப்பெற்றது.
இந்த மன்னரது ஆட்சி விறுவிறுப்புடன் நடைபெறத் துவங்கியது. இராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் ஒரு சிறிய கோட்டை அமைத்து கிழக்குக் கடற்கரையோரப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அப்பொழுது சேது நாட்டில் வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததால் அவர்கள் மூலம் இராமநாதபுரத்திற்கு கிழக்கே பீரங்கி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். இவ்விதம் ஆற்காடு நவாபுடனும் அவரது உதவியாட்களாகிய ஆங்கிலக் கும்பெனியாரையும் அடியோடு சேது மண்ணிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தார். தளபதி மார்ட்டின்ஸ் ஆற்காட்டு நவாபிற்கும் கும்பெனி கவர்னருக்கும் இரகசிய அறிக்கைகளை அனுப்பி வந்தார்.
இதற்கிடையில் அப்பொழுது சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தை இராணி வேலுநாச்சியாருக்குப் பிரதிநிதியாக நேரடியாகக் கவனித்து வந்த மருது சகோதரர்கள் சிவகங்கைக்கும் இராமநாதபுரம் சீமைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த எல்லைப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி இராமநாதபுரம் சீமைக் குடிமக்களுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வந்தனர். மேலும் அப்பொழுது சிவகங்கைச் சீமைக்குச் சொந்தமாயிருந்த தொண்டித் துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இராமநாதபுரம் சீமைக்குச் சொந்தமான திருவாடானைச் சுங்கச் சாவடி வழியாகச் சிவகங்கைச் சீமைக்குக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இராமநாதபுரம் மன்னருக்கு இந்த வகையில் செலுத்தப்பட வேண்டிய ரூ. 15,000/-ஐயும் மருது சேர்வைக்காரர்கள் செலுத்தாமல் அலைக்கழிவு செய்து வந்தனர். இதனால் கோபமுற்ற சேது மன்னர் திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் சீமை, அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக பார்த்திபனூர் சுங்கச் சாவடியைக் கடந்து சிவகங்கை செல்லும் வரத்து வண்டிகள் அந்தச் சுங்கச் சாவடிக்கு வரி செலுத்தாமல் கிழக்கே, இராமநாதபுரம் வந்து வடக்கே சோழச் சீமைக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தார். இதனால் சிவகங்கைச் சீமைக்கு ஏற்பட்ட வருமான இழப்பை உணர்ந்த சிவகங்கைப் பிரதானிகள் வைகையாற்றிலிருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக தெற்கே அபிராமம் முதலிய கண்மாய்களுக்குச் செல்லும் நீர்வரத்தைத் தடை செய்தனர். இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் அபிராமம் சென்று அந்தக் கண்மாய்க்கு வரும் கால்களின் தடைகளை நீக்கி, நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். இதனை அடுத்து இரு சீமைகளுக்கும் இடையில் பகையுணர்வும் விரோதப்போக்கும் நீடித்து வந்தன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின.[3] இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் அறிவுரைகள் வழங்கிப் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். நியாய உணர்வினால் உந்தப்பட்ட சேதுபதி மன்னர் போர் நிறுத்தத்திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார்.
இருவருக்கும் சமரசம் செய்வதற்காக கலெக்டர் பவுனி இருதரப்பினரையும் தொண்டிக்கு அருகில் உள்ள முத்துராமலிங்க பட்டினத்துச் சத்திரத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். சிவகங்கைப் பிரதானிகள் ஏற்றுக் கொண்டனர். சேதுபதி மன்னர் சம்மனைப் புறக்கணித்து விசாரணைக்குச் செல்லவில்லை. இதனால் கும்பெனியாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.
இதற்கிடையில் கி.பி. 1792-ல் சேதுநாடு எங்கும் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்தக் கோரிக்கையையும் சேது மன்னர் புறக்கணித்து விட்டார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, அடிக்கடி மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார். அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். அப்போது செயல்பட்ட 650 தறிகளில் 150 தறிகளுக்கு மேலாக மன்னரது நேரடிப்பொறுப்பில் இயங்கி வந்ததாலும், இதனால் சேதுநாட்டிற்கு வருமான இழப்பு ஏற்படும் நிலை இருந்ததாலும் மன்னர் இந்தக் கோரிக்கையையும் மறுத்தளித்து விட்டார். கடைசியாக கும்பெனியார் மதுரை நெல்லைச் சீமைகளில் கொள்முதல் செய்த கைத்தறித் துணிச் சிப்பங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் பாம்பன் கால்வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பாம்பன் துறைமுகத்தில் கும்பெனியார் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும் சுங்கச் சலுகையும் பெற முயன்றனர். இந்த முயற்சியையும், மன்னர் நிராகரித்து, வரிசை முறையை அமுல்படுத்தியதால் முன்னுரிமை வழங்க மறுத்தார்.
இவ்விதம் அப்பொழுது தமிழகத்தின் அரசியலில் வாய்ப்பும் வலிமையும் பெற்று வந்த கும்பெனியாரை அவமதிப்புக்குள்ளாக்கிய இந்த மன்னரைத் தீர்த்துக் கட்டுவது என கி.பி. 1794-ல் கும்பெனித் தலைமை முடிவு செய்தது. ஆனால் இந்த ஆண்டிலும் வறட்சி தொடர்ந்ததால் அவர்களது திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குத் தள்ளி வைத்தனர். கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்தது. கோட்டையின் பொறுப்பு தளபதி மார்ட்டின்சிடம் இருந்ததால், இந்தப் படை எவ்வித இடையூறும் இல்லாமல் அரண்மனையைச் சுற்றி வளைத்து இரண்டாவது முறையாக மன்னரைக் கைது செய்தது. சிறிதும் எதிர்பாராது நடந்த இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் ஏமாற்றமடைந்த மன்னர் வெள்ளையரது கட்டளைக்குப் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்தநாள் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பிலிருந்த மார்ட்டின்சும் கலெக்டர் பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர்.
ஆங்கிலேய ஆட்சி
கும்பெனியாருக்கும் முத்துராமலிங்க சேதுபதிக்கும் இடையில் பகையுணர்வு வளர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரது தமக்கையான மங்களேஸ்வரி நாச்சியார் கும்பெனியாரிடம் சேதுநாட்டு வாரிசு தான் எனக் கூறி தனக்கு சேது நாட்டின் ஆட்சியுரிமையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை வலியுறுத்துவதற்காகத் தனது கணவர் இராமசாமித் தேவருடன் சென்னை சென்று ஆற்காடு நவாபு, கும்பெனி கவர்னர் மற்றும் அவரது அலுவலர்கள் அனைவரையும் சந்தித்து தனது வேண்டுகோளை வலியுறுத்தியும் அதற்காகப் பெருந்தொகையைக் கையூட்டாக வழங்கி அரச பதவியைப் பெறப் பெரிதும் முயன்றார். கும்பெனித் தலைமை மங்களேஸ்வரி நாச்சியாரை சேதுபதியின் அடுத்த வாரிசாக ஏற்றுக் கொண்டபோதிலும் அவருக்கு அதிகார மாற்றம் செய்யாமல் சேதுநாட்டின் நிர்வாகத்தைக்கும்பெனியாரே எட்டு ஆண்டுகள் நடத்தி வந்தனர்.
 

 

↑ (மில்டரி கண்சல்ஸ்டேசன்) military Consulstation

↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் - 2002

↑ Military Consultation Vol. No:

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு