Get it on Google Play
Download on the App Store

vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி

 

 

←iv. ராணி முத்து வீராயி நாச்சியார்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி

vii. பாஸ்கர சேதுபதி→

 

 

 

 

 


418967சேதுபதி மன்னர் வரலாறு — vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதிஎஸ். எம். கமால்

 

 

VI துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி
ஐந்து வயது பாலகரான இந்த முத்துராமலிங்கத்தை இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும். இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இராணியாரது உறவினர்களும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. தங்களது ஒப்புதல் இல்லாமல் இந்தச் சிறுவனது சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் அதனை அவர்கள் ஆட்சேபணை செய்து பல வழக்குகளை மதுரை, சென்னை வழக்கு மன்றங்களில் தாக்கல் செய்தனர். இறுதியாக மன்னரது சார்பாக இங்கிலாந்து நாட்டு லண்டன்மாநகரப் பிரிவி கவுன்சில் அளித்த சாதகமான தீர்ப்பினைக் கொண்டு இளைஞர் முத்துராமலிங்கம் சேது நாட்டின் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார்.
இந்த மன்னர் இளமைக்காலத்தில் மிகவும் மந்தமாகவும், அரசியல் அலுவல்களில் சிறிதும் அக்கரை இல்லாமலும் இருந்து வந்தார். ஆனால் அதே சமயத்தில் இந்த இளைஞர் இயல் தமிழின் இலக்கண, இலக்கியங்களிலும், இசைத் தமிழின் இராகம், மேளம் ஆகியவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அன்றைய தமிழ்ப்புலவர்கள் இவரை ‘நிமிசகவி’ என அழைத்தனர். நிமிட நேரத்தில் சிறந்த தமிழ்க் கவிதை ஒன்றை இலக்கண முறைப்படி இயற்றி முடிக்கும் தன்மை வாய்ந்த காரணத்தால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கப் பெற்றது.
முந்தைய சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமியிடம், பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். மாறாக, இவர் குமரக்கடவுள் மீது குறையாத அன்பு கொண்டு முருகனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாதிட்டு வந்தார். இவர் இயற்றிய 7 சிற்றிலக்கியங்களில் மூன்று முருகனைப் பற்றியது ஆகும். 'வள்ளி மணமாலை’, ‘சரசசல்லாப மாலை’, ‘சடாக்கரப் பதிகம்’ என்பன அவை. இவரது பிற படைப்புக்கள் பாலபோதம், நீதிபோதம் என்பனவாகும். ஏறத்தாழ 1000 பாடல்கள் இவர் இயற்றியுள்ளார்.
அதுவரை வாழ்ந்த சேதுமன்னர்கள் புலவர்களது புதிய படைப்புக் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துச் சிறந்த தமிழ்ப்புரவலராக விளங்கி வந்தனர். இந்த மன்னரோ புரவலராக மட்டுமல்லாமல், தமிழ்ப் புலவராகவே அமைந்து விளங்கியது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. மேலும் ஏராளமான தமிழ் இசைப்பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். அவை, காயகப்பிரியா, ரசிகரஞ்சனம் என்ற இரு தொகுப்புக்களாக 1860-ல் அச்சில் வெளிவந்துள்ளன.
இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி இந்தச் சிறந்த பெரும் புலவர், இசைமேதை, மறவர் சீமையின் பாரம்பரிய கலைகளான விற்போர், ஈட்டி எறிதல், வாள் சண்டை ஆகியவைகளிலும் மிகச்சிறப்பாக விளங்கினார் என்பது ஆகும். தமிழ்ப்புலவரும் வள்ளலுமான இவரது தமையனார் பொன்னுசாமித் தேவர் என்பவர் இம்மன்னரது அரசியல் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது முத்துராமலிங்க சேதுபதிக்கு வாய்த்த பிரதானி உச்சிநத்தம் முத்து இருளப்ப பிள்ளையைப் போன்று சேதுநாட்டின் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்கு இவர் மிகவும் உதவினார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவரை ஒத்த அரசியல் அறிஞர் அப்பொழுது வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். இராமநாதபுரம் சமஸ்தானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வு கண்டதுடன் தனது தம்பியும், மன்னருமான முத்துராமலிங்க சேதுபதியின் அரசியல் முடிவு பற்றிய வழக்குகளை மதுரை, சென்னை நீதிமன்றங்களிலும் இறுதியாக இங்கிலாந்து நாட்டு இலண்டன் நகரப் பிரிவி கவுன்சில் மன்றத்திலும் சிறப்பாகப் பாடுபட்டு வெற்றி பெற்றார்.
இவர் ஒரு தமிழ் வள்ளல், சாகித்திய இசைப்புலவர், தமிழ்ப் புரவலர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு சைவ சாத்திரங்களை வெளியிட்டு உதவினார். அவரது சொந்த ஆக்கமான இசைப்பாடல்களைத் தொகுப்பாக அச்சிட்டு கி.பி. 1861-ல் வெளியிட்டார். பழனி மாம்பழக் கவிராயர் போன்ற சிறந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததுடன், சேது புராணம் போன்ற இலக்கியங்களை சொந்தச் செலவில் அச்சிட்டு, தமிழ்ப் புலவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார். இதற்கெல்லாம் மேலாக தில்லையம்பூர் புலவர் சந்திர சேகர புலவரைக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாடப்பட்டு வந்த தனிப் பாடல்களைத் தொகுக்கச் செய்து தமிழில் முதன் முறையாகத் தனிப்பாடல் திரட்டு என்ற நூல் வெளியீட்டை அச்சில் கொணர்ந்தார். இவர், பாஸ்கர, தினகர் என்ற இரண்டு ஆண் மக்களையும். இராணி பானுமதி என்ற பெண் மகளையும் தமது வாரிசாக விட்டுத் தமது 32-வது வயதில் கி.பி. 1873-ல் காலமானார். 

 

 


 

சேதுபதி மன்னர் வரலாறு

Anahita
Chapters
இயல் I தொன்மையும், தோற்றமும். i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் ii. கூத்தன் சேதுபதி iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி i. முத்து வயிரவநாத சேதுபதி ii. முத்து விஜயரகுநாத சேதுபதி iii. பவானி சங்கர சேதுபதி iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ii. இராமன் இல்லாத அயோத்தி iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு iv. சேது மன்னர்களது நிர்வாகம் i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் ii. அரண்மனையும் ஆவணங்களும் iii. அரண்மனை நடைமுறைகள் iv. இராமலிங்க விலாசம் அரண்மனை v. மூலக் கொத்தளம் இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் ii. அண்ணாசாமி சேதுபதி iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி iv. ராணி முத்து வீராயி நாச்சியார் vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி vii. பாஸ்கர சேதுபதி viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள் ii. சில முக்கிய நிகழ்வுகள் இயல் XI என்றும் நிலைத்து நிற்க... i. திருக்கோயில்கள் ii. திருமடங்கள் iii. அன்ன சத்திரங்கள் iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் v. தமிழ்ப் புலவர்கள் vi. தனியார்கள் இணைப்பு - அ இணைப்பு - ஆ இணைப்பு - இ i. போகலூர் சேதுபதிகள் ii. இராமநாதபுரம் சேதுபதிகள் iii. ஜமீன்தார் கொடி வழி i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு