லெப்பை
←மரக்காயர்
முஸ்லீம்களும் தமிழகமும் ஆசிரியர் எஸ். எம். கமால்லெப்பை
தக்கானிகள் பட்டாணிகள்→
437581முஸ்லீம்களும் தமிழகமும் — லெப்பைஎஸ். எம். கமால்
7
லெப்பை
இங்ஙனம், தமிழ்ச் சமுதாயத்தினரான இஸ்லாமியர் நாளடைவில் துருக்கர், சோனகர், ராவுத்தர், மரைக்காயர் என்று பிரிவினைப் பெயர்களால் பிற்காலங்களில், லெப்பை, நயினார், தரகளுர்முதலியார் அம்பலம், சேர்வை என்ற பெயர் விகுதிகளை இணைத்துக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த அந்தந்தப் பகுதியில் உள்ள இதர பிரிவினர்களின் பெயராலே இவர்களது அந்தப் பெயர் விகுதிகளும் அமைந்தன. லெப்பை குடிக்காடு (திருச்சி மாவட்டம்) நயினார் கோவில், நயினார் பேட்டை. (முகவை மாவட்டம்) நயினார்புரம் (பசும்பொன் மாவட்டம்) நயினார் அகரம் (நெல்லை மாவட்டம்) என்று அவர்களது ஊர்ப் பெயர்களும் அந்த மக்களது விகுதிப்பெயருடன் வழங்கப்படுகிறது ஈண்டு குறிப்பிடத்தக்கனவாகும். "லெப்பை" என்ற சொல் தமிழகமனைத்தும் பரந்து வாழும் எல்லாப் பகுதியிலும் உள்ள இஸ்லாமியரைக் குறிப்பிடும் பொதுச் சொல்லாக உள்ளது. அரபுத் தாயகத்தில் இருந்து வந்து நாளடைவில் தமிழ் முஸ்லிம்களாக மாறிய பொழுதும், அவர்களது தலையாய கடமை திருமறையை ஓதியும், பிறருக்கு ஓதுவித்து உணர்த்தும் பணியாக இருந்தது. என்றாலும், இவர்களது வாழ்க்கை நிலை, நெசவாளியாக, விவசாயியாக, கடல் தொழிலாளியாக இருந்து வந்தது. ஆனால், இவர்கள் பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுவரை லெப்பைகள் என்ற பொதுப் பெயரிலேயே வழங்கப்பட்டனர். யாக்கோபு சித்தரது பாடல் ஒன்றில் “சொல்லவே நால்வேத லெப்பைமார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கப்பணியில் முனைந்து இருப்பவர்கள் என்ற பொருளில் 1881ம் ஆண்டு ஆங்கிலேயரது மக்கள் கணக்கு அறிக்கை, லெப்பைகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர்கள் தஞ்சை, மதுரை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதானமாக வாழ்ந்து வருவதாகவும், மேற்குக்கரை முஸ்லீம், "மாப்பிள்ளைகளைப் போல இவர்களும் சோழ மண்டலக்கரை மாப்பிள்ளை" யென வருணித்துள்ளது. அராபிய இரத்தக் கலப்புடன் கூடிய மதம் மாறிய திராவிடர்களும் இந்துக்களுமான இவர்கள் சுறு சுறுப்பும், முன்னேற்ற மனப்பாங்கும் மிக்க வியாபாரிகள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வணிகத்திலும், கொடிக்கால் விவசாயத்திலும், சிலர், நெசவு, சங்கு, முத்துக்குளித்தல், சமயப்பணி ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கிறது[1]
இந்த அரசு அறிக்கையை அடுத்து வெளி வந்துள்ள மதுரை கெஜட்டீர், "லெப்பைகள் நேர்த்தியான, உறுதியான , செயல்திறம் மிக்க மக்கள் எனறும், எந்தச் சூழ்நிலையையும் சமாளித்து நடந்து கொள்ளக்கூடியவர்கள்’’ என்றும் புகழுரை வழங்கியுள்ளது.[2] இவர்களில் பெரும்பான்மையினர் வணிகத்திலும், சிறிதளவினர் கைவினைக் கலைகள், கடல் தொழில், போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள வெப்பைகள் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகளாகவும், தோல் வியாபாரிகளாகவும், சிறு தொழில் வணிகர்களாவும் அவர்களது பெண் பாலர், பாய் நெசவு தொழிலில் திறமை உள்ளவர்களாக இருப்பதாக தென் ஆற்காடு மாவட்டம் கெஜட்டீர்[3] குறிப்பிடுகிறது. வட ஆற்காடு மாவட்ட லெப்பைகள், வசதி உள்ளவர்களாகவும் திருமறைப்படி வாழ்வியலில் வாழ்வாங்கு வாழ்பவர்களாகவும் வட ஆற்காடு மனுவலில் ஆசிரியர் ஸ்டூவர்ட் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்ட கிழக்குப் பகுதியில் லெப்பைகள் நெசவிலும் விவசாயத்திலும் மிகுந்து இருப்பதாக இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளது.[4] சித்தார்கோட்டை, எக்ககுடி, பனைக்குளம், பேரையூர், கமுதி, அபிராமம் ஆகிய ஊர்களில் அவர்கள் முன்னர் நெசவில் ஈடுபட்டிருந்ததைக் குறிக்கும் "பாவோடி"கள் இன்றும் உள்ளன. மேலும் அருப்புக் கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி முஸ்லிம்கள் நெசவில் மிகுதியாக தொடர்ந்து ஈடுபட்டிருப்பது இந்த கூற்றினைத் வலியுறுத்துவதாக உள்ளது.
மற்றும் "நயினார்" "முதலியார்" விகுதிகளையுடைய இஸ்லாமியப் பெயர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் "தரகனார்" என்ற சொல் குமரி மாவட்டத்திலும் “அம்பலம்”, "சேர்வை" விகுதிகளையுடைய இஸ்லாமியப் பெயர்கள், இராமநாதபுரம், பசும்பொன், மதுரை மாவட்டங்களிலும் இன்றளவும் வழக்கில் உள்ளன. பசும்பொன் மாவட்டத்தில் திருப்பத்தூர், இளையாங்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ சிங்கமங்கலம், இராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், மண்டபம், தொண்டி ஆகிய ஊர்களிலும் மதுரை மாவட்டத்தில், திண்டுக்கல், பழநி, வெத்திலைக்குண்டு ஆகிய ஊர்களிலும் "அம்பலம்" என்ற சொல் இஸ்லாமியப் பெயர்களுடன் இணைந்து ஒலிக்கின்றன. மற்றும் மதுரை, மேலூர் பகுதிகளில் "நாட்டாண்மை" என்ற பெயர் வழக்கில் உள்ளது. இராமநாதபுரம் சேது மன்னரின் சேவையில் சிறந்து பணியாற்றிய அபிராமம் நூர்முகம்மது என்பவருக்கு சேதுபதி மன்னர் சிறப்புகள் செய்து கௌரவித்ததுடன் "விஜயன் அம்பலம்" என்ற விருதுப் பெயரையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருநூறு ஆண்டுகளாகின்றன. அவரது வழி வந்த வள்ளல் ஒருவரை பாட்டுடைத்தலைவராகக் கொண்டு மதுரை தமிழ்ச் சங்கப் புலவரான சோதுகுடி அப்துல்காதர் ராவுத்தர் என்பவர் "அகப்பொருள் கோவை" ஒன்றைப்பாடி உள்ளார்.[5] மற்றும். பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டாரங்களில் இஸ்லாமியர் சிலர் தங்கள் பெயருடன் “சேர்வை” என்ற சொல்லையும் இணைத்துப் பயன்படுத்துகின்றனர். மொத்தத்தில் “அம்பலம்” “சேர்வை” என்ற இரு சொற்களும் அந்தந்த ஊர்களில் சமூகத் தலைவர் என்ற பொருளில் தான் பிரயோகிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் ஏனைய இந்து சமூகத் தலைவரைப் போன்று இஸ்லாமியத் சமூகத் தலைவரும் "நாட்டாண்மை" என வழங்கப்படுகின்றனர். இந்தச் சொற்களின் வழக்கு பற்றி சற்று தீவிரமாகச் சிந்தித்தால், இந்தத் தமிழ் மண்ணில் இஸ்லாம் எவ்வளவு ஆழமாக வலுவாக, வேர் பரந்துள்ளது என்பது விளங்கும். தமிழ்நாட்டில், முதன்முதலில் இராமநாதபுரம், நெல்லை, மதுரை மாவட்டங்களில் அராபியரது பூர்வ குடியேற்றங்கள் ஏற்பட்டதால், அந்த இஸ்லாமியர்கள், அங்குள்ள மக்களுடன் நாளடைவில் நெருக்கமான தொடர்பும் தோழமையும், உறவும் கொண்டு, தமிழ்ச் சமூக அமைப்பில் உறுதியாக ஊடுருவி, இணைந்து இன்றளவும் நிற்பதுவே இத்தகைய அரபு தமிழ்ப் பெயர்கள் இணைப்பிற்கு காரணம் என்பதும் புரியும் கடந்த சில நூற்றாண்டுகளில், அரசியல், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக போர்ச்சுக்கீசியர், டக்சுக்காரர் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போன்ற பிற நாட்டவர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தமிழ்ச் சமுதாயத்தில் கலந்தும் இருக்கின்றனர். ஆனால், அரபுநாட்டு இஸ்லாமியர்களைப் போன்று, இந்த மண்ணின் மாட்சியை, பாரம்பரிய விழுதுகளை என்றென்றும் வலுவாகப் பற்றி நிற்கும் பெற்றி, பண்பாடு, உள்ளப்பாங்கு அவர்களுக்கு அமையவில்லை என்பது வரலாறு உணர்த்தும் உவமையாகும்.
↑ Census Repont – Govt. of India (1881–AD)
↑ Frana's W. - Madurai Gazetteer (1921)
↑ Rajaram Roa - S. Manuel of Ramnad Samasthanam (1898)p. 49
↑ Rajaram Rao - T. Manual of Ramnad Samasthanam(1898) p. 49.
↑ சோதுகுடி அப்துல் காதிர் ராவுத்தர்-விஜயன், அப்துல்
ரஹ்மான் அகப்பொருட் பல்துறைக்கோவை (ரங்கூன் 1911)