தமிழகம் வந்த அரபி பயணிகள்
←விந்தை மனிதர்
முஸ்லீம்களும் தமிழகமும் ஆசிரியர் எஸ். எம். கமால்தமிழகம் வந்த அரபி பயணிகள்
சமுதாயப் பிரதிபலிப்புகள்→
437592முஸ்லீம்களும் தமிழகமும் — தமிழகம் வந்த அரபி பயணிகள்எஸ். எம். கமால்
18
தமிழகம் வந்த அரபி பயணிகள்
தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. ஆதலால் வணிகர்களைத் தொடர்ந்து, இஸ்லாம் தோன்றிய ஏழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய சமயச் சான்றோர்களும் தொண்டர்களும் தமிழகம் வந்தனர். அத்துடன் உலகியலை உணரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட பயணிகளும் வந்தனர். ஆங்காங்கு அவர்கள் சென்று, கண்டு கேட்டு வரைந்து, வைத்த பயணிக்குறிப்புகள், வரலாற்றின் சிறப்பு மிக்க ஏடுகளாக விளங்குகின்றன. தமிழகத்து அரசுகள், ஊர்கள், வாணிபப் பொருட்கள், மக்களது மரபுகள், பண்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன.
இந்த ஆவணங்களை வரைந்துள்ளவர்களில் நால்வர் பாரசீகர்கள். நால்வர், பாக்தாதைச் சேர்ந்தவர்கள். இன்னும் நால்வர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இபுனு குர்த்தாபே (கி.பி.844-48) இபுனு குஸ்தா (கி.பி.903) இபுனு பக்சி (கி.பி.902) அபூசெய்து (கி.பி.950) மசூதி (கி.பி.943-55) யாக்கத் (கி.பி. 1179) வஸ்ஸாப், ரஷிமுத்தீன், திமிஸ்கி (கி.பி.1325) இபுனு பத்தூதா (கி.பி. 1355) ஆகியோரது குறிப்புகளில் நமிழ்நாட்டைப் பற்றிய செய்திகள் ஓரளவு காணப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பயணிகளது குறிப்புகள் தமிழகத்தைப் பற்றிக் கூடுதலான செய்திகளை வழங்குகின்றன.[1]
இபுனுருஸ்தா, பாண்டிய மன்னனை அபிதி, அல்-காய்தி என்றும் சேர மன்னனை அரிதி, பரிதி என்றும், இபுனு குர்த்தாபே சோழனை செயில்மான் என்றும் குறித்துள்ளனர். அவரது குறிப்புகளில் இருந்து மதுரைப்பாண்டியன் அப்பொழுது மிகுந்த வலிமையுடன் விளங்கியதாகத் தெரிகிறது. அவனிடம் எழுபதினாயிரம் போர்மறவர்கள் இருந்தனர். ஆனால் பொதுவாக பாண்டியனை விட சோழன் போர்த்திறன் படைத்தவனா மதிக்கப்பட்டான்.[2] மேலும், பாண்டியனிடத்தில் யானைகள் இல்லாததால் ஐந்து குயூபிக் அடி உயரத்திற்கு அதிகமான யானைகளை ஆயிரம் தினாரா வீதம் விலை கொடுத்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[3] அப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் மந்திரசாலங்களில் நம்பிக்கை வைத்து இருந்தனர் என்றும் மனோவசிய சக்தியினால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன், மழை, குளிர் ஆகிய இயற்கை நிகழ்வுகளையும் தடைபடுத்த இயலும் என அவர்கள் எண்ணியதாக குர்த்தாடே வரைந்துள்ளார்.[4]
மற்றொரு பயணியான மசூதிபாண்டிய மன்னனை அல்காய்தி எனக் குறிப்பிட்டு இருப்பதுடன், அவனது கோநரான மதுரையை மந்தர்பின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.[5] மதுரைக்கும் கொல்லத்திற்கும் இடையில் சூடன் மரங்கள் மிகுந்து காணப்படுவதாகவும் வரைந்துள்ளார்.[6] இவர் கன்னியாகுமரியைப் பற்றித் தெளிவாள குறிப்புக்களைக் கொடுத்துள்ளார். அந்தப்பகுதி, இலங்கைக்கு (செரந்தீவு) எதிர்க்கரையில் அமைந்து இருப்பதாகவும், ஆதி பிதாவான ஆதம் (அலைஹிவசல்லம்) அவர்களுடைய மகன் காய்ன் வழிவந்த மக்கள் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் என்றும், பற்களைத் துலக்க அவர்கள் மரக்குச்சிகளைப் பயன்படுத்தியதாகவும் வரைந்துள்ளார். பெரும்பாலும் மலைகள் நிறைந்து இருப்பதால் மக்கள் கால்நடையாகவே செல்கின்றனர் என்ற குறிப்பும் காணப்படுகிறது.[7] பாண்டியனது பட்டத்து யானையைப் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது அந்த யானை மிகப் பெரியதாகவும் வெள்ளை நிறமாகவும் இடை இடையே கறுப்பு புள்ளிகளுடனும் காணப்பட்டதாகவும் அதன் பெயர் "நம்ரான்” எனவும் வரைந்துள்ளார்.[8]நம்பிரான் என்ற பெயர் அந்த யானைக்கு சூட்டப்பட்டு இருக்கலாம்.
இன்னொரு பயணியான இபுனுல் பக்கி, கன்னியாகுமரி ஆலயத்தில் விக்கிரக வழிபாடு நடைபெற்று வந்ததையும் வரைந்து இருக்கிறார்.[9] அவரை அடுத்து, கன்னியாகுமரி பகுதிக்கு வருகை தந்த இபுனுருஸ்தா என்பவர் , அங்கிருந்த அரசன், மிகவும் நேர்மையானவன் என்றும், குடி விபச்சாரம் போன்ற பழிச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கி வந்தான் என்றும், குற்றங்களை ஆய்வு செய்து தண்டனை வழங்க எண்பது நீதிவான்கள் அவனது பணியில் இருந்தனர். என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னரது மகனாக இருந்தாலும் நீதி (வான்கள் முன்னர் குற்றவாளிக் கூண்டில் நின்று பதில் சொல்ல வேண்டிய முறை இருந்தது என்றும் அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.[10] மேலும், பாண்டிய மன்னனுக்கு யானைகளை வாங்கும் பொழுது, காடுகளில் பெருந்தீயினூடே அச்சமின்றி ஓடும் யானைகள் தான் போர்களுக்குப் பொருத்தமானது என தேர்வு செய்யப்பட்டனவென்றும் வரைந்துள்ளார்.[11]
இவரையடுத்து, தமிழகம் வந்த அல்பரூனி இந்தியாவின் பல பகுதிகளையும் குறிப்பிட்டு வரையும்பொழுது இராமேசுவரம் சேது அணை, சிரந்தீவுக்கு (இலங்கை) எதிர்க்கரையில் இருப்பதாக வரைந்துள்ளார்.[12] இவர்கள் அனைவரையும் விட திமிஸ்கி என்ற பயணிதான் அப்பொழுது அரபி பயணிகள் பயன்படுத்தி வந்த மேற்குக்கரையின் கொல்லத்தில் இருந்து, கிழக்குக்கரையில் உள்ள முத்துப்பள்ளி(ஆந்திர நாட்டுக் கரையில் உள்ளது) வரையான கடற்கரை பட்டினங்கள் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் வரைந்துள்ளார். அவரது குறிப்புகளில் அதிரை (அதிராம்பட்டினம்) அபத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1502-97) என்ற பிற்கால பாண்டியன் நினைவாக எழுந்த ஊர் இது என தஞ்சாவூர் கெஜட்டியர் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த பாண்டியனுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடல்துறை இருந்து வந்தது திமிஸ்கியின் குறிப்புகளில் இருந்து தெரிகிறது. மேலும், அவர், திண்டா (தொண்டி) தக்தான் (தேவிபட்டினம்) பத்தன் (பெரியபட்டினம்) காயின் (கானப்பேர்) என்ற காளையார் கோவில் ஆகிய ஊர்கள் மாபாரின் சிறந்த பட்டணங்கள் என குறித்துள்ளார். இன்னும் அவர் குறிப்பிட்டுள்ள பல ஊர்களை, இன்று இனங்கண்டு கொள்ள முடியவில்லை.
அடுத்து, உலகப் பயணியான இபுன் பதுாதா, இலங்கையில் இருந்து மாலத்தீவுகளுக்கு பயணம் செல்லும் வழியில் கடல் கொந்தளிப்பினால் அவரது கப்பல் கிழக்கு கரையில் ஒதுக்கப்பட்டு கி பி. 1355ல் கரையேறினார். பாண்டியநாட்டை நேரில் காணும் வாய்ப்பு அவருக்கு இவ்விதம் தற்செயலாக ஏற்பட்டது. அப்பொழுது, மதுரையில் ஆட்சி செய்த சுல்தான் கியாஸீதீன் தமகானி, தகவல் அறிந்து இபுனு பதூதாவை அரசு மரியாதையுடன் மதுரைக்கு அழைத்துக் கொண்டார். கப்பல் வசதி பெற்று அவர் பயணத்தை தொடர்வதற்கு பருவக்காற்று சாதகமாக இல்லாததால் இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அவர் மதுரையிலும், பத்தனிலும்(பெரியபட்டினத்தில்)தங்கினார். அப்பொழுது அவர் வரைந்துள்ள விவரமான குறிப்புகள் தமிழக வரலாற்றிற்கு பயனூட்டுவதாக உள்ளன. அவைகளில் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[13]
பத்தனுக்குச் சென்றதைப் பற்றி அவர் வரைந்திருப்பது...... "அந்த முகாமை விட்டு பத்தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன்" அது கடற்கரையில் உள்ள பெரிய அழகிய நகரம். சிறப்பாக குறிப்பிடத்தக்க கப்பல் துறையும் அங்கு இருந்தது. உறுதியான தூண்களைக் கொண்டு மரத்தாலான பெரிய தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதனை அடைவதற்கான வழியும், மூடுபாதையும் முழுவதும் மரத்தினால் அமைக்கப்பட்டு இருந்தது. எதிரிகளது தாக்குதல் ஏற்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் அனைத்தும் இந்தத் தளத்துடன் பிணைக்கப்பட்டுவிடும். வீரர்களும் வில்லாளிகளும் இந்தத் தளத்திற்கு சென்று விடுவார்கள். இதனால் எதிரிகள் இவர்களைத் தாக்கி காயங்கள் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும் ... ... ... இந்த நகரில் ஒரு அழகிய தொழுகைப் பள்ளி இருக்கிறது. கல்லினால் அமைக்கப்பட்டது. கொடிமுந்திரியும் மாதுளையும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இறைநேசர் ஷேக் முகம்மது அல் கிபுறியை அங்கே சந்தித்தேன். தோளில் சரிந்து படியும் அளவு நீண்ட தலைமுடியினையுடைய பக்கீர் ஒருவரும் அவருடன் இருந்தார். அவர் வெளியுணர்வு இல்லாத தியான நிலையில் இருந்தார் சிங்கம் ஒன்றை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்து இருந்தார். அதுவும் பக்கீருடன் அமர்ந்து உண்டது. முப்பதுக்கும் அதிகமான பக்கீர்கள் அந்த இறைநேசருடன் இருந்தனர். அவர்களில் ஒருவர் புள்ளிமான் ஒன்றை வைத்து இருந்தார். அதுவும் அங்கேயே இருந்தது. அந்தச் சிங்கத்தின் குருளையினால் புள்ளிமானுக்கு எந்த தொந்தரவும் இல்லை. நானும் அந்தப் பட்டணத்தில் தங்கினேன்.
"இதற்கிடையில் யோகி ஒருவர், சுல்தானது வீரியத்தை அதிகரிக்க மாத்திரைகள் தயாரித்தார். அதில் இரும்பு தாதுக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. சுல்தான் கூடுதல் அளவில் அவைகளை உட்கொண்டதால் அவருக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் பட்டினத்தை அடைந்தார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கு எனது அன்பளிப்பையும் கொடுத்தேன். அங்கு தங்கி இருந்த பொழுது, அவர் கடற்படை தளபதி குவாஜா கருணை வரவழைத்து “மாலத்தீவு பயணத்திற்கான கப்பல்களை ஆயத்தப்படுத்துங்கள், கூடுதலாக ஒன்றும் வேண்டாம்” என உத்திரவிட்டார். நான் வழங்கிய அன்பளிப்பிற்கான பெறுமானத்தை வேறு அன்பளிப்பாகக் கொடுக்க முனைந்தார், நான் மறுத்துவிட்டேன் ... ... சுல்தான் பட்டினத்தில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தார். பிறகு தலைநகருக்குப் புறப்பட்டார். "அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு பதினைந்து நாட்கள் நான் பட்டினத்தில் தங்கி விட்டு விசாலமான விதிகளையுடைய பெரிய நகரமான மதுரைக்குப் புறப்பட்டேன்". அந்த நகரை தனது கோநகராகச் செய்தவர் எனது மாமனார்-சுல்தான் ஷரிபு ஜலாலுத்தீன் அஸன்ஷா, தில்லியைப் போன்று தோற்றம் தரும்படி அதனை அக்கறையுடன் அவர் நிர்மாணித்தார். "தான் மதுரையை அடைந்தபொழுது, அங்கு ஒரு கொள்ளை நோய் பரவி இருந்ததைப் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக மடிந்தனர். அந்த நோயினால் தாக்கப்பட்டவர் இரண்டு அல்லது மூன்றாவது நாளில் இறப்பு எய்தினர். எங்கும் நோயாளிகளையும் இறந்தவர்களையும் கண்டேன். இளைய அடிமைப் பெண்ணொருத்தியை விலைக்கு வாங்கினேன். உடல் நலிவு இல்லாதவள் என எனக்கு உறுதி கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாளில் அவள் இறந்து விட்டாள். சுல்தான்
அஸன்ஷாவிடம் அமைச்சராகப் பணியாற்றிய நடுவரின் மனைவி என்னைச் சந்திக்க ஒரு நாள் வந்தாள். அவளுடன் எட்டு வயது நிரம் பிய சிறுவன் ஒருவனும் வந்திருந்தான், அறிவும் ஆற்றலும் மிக்கவனாக இருந்தான். தனது வறுமை நிலையைப் பற்றிச் அவள் சொன்னாள். அவருக்கும் அந்தச் சிறுவனுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன் அவர்கள் இருவரும் உடல் நலம் மிக்கவர்களாக
காணப்பட்டனர். ஆனால் அடுத்த நாள், அந்த தாய் என்னிடம் வந்தாள். தனது மகள் திடீரென இறந்து விட்டதாகவும், அவனது அடக்கத்திற்குரிய துணிவேண்டும் (கபன்) எனக்கோரினாள். .... சுல்தான் மரணமடையும் பொழுது அவரது அத்தானி மண்டபத்திற்குச் சென்று இருந்தேன். நாற்றுக்கணக்கான பெண் பணியாளர்கள் நெல் குத்துவதற்காகவும் சமையல் பணிக் கெனவும் அழைத்து வரப்பட்டனர். அவர்களும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கு தரையில் வீழ்ந்து மடிந்தனர்.
“சுல்தான் கியாஸுத்தீன் மதுரைக்கு திரும்பிய பொழுது, அவரது தாய், மனைவி, மகள் ஆகியோர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் ஒரு மைல் தொலைவில் உள்ள ஆற்றுக்குச் சென்றார். ஆற்றங்கரையில் கோயில் ஒன்று இருந்தது. அவரை வியாழக்கிழமையன்று சந்தித்தேன். அரசாங்க காஜியாருடன் என்னை அங்கு தங்கி இருக்குமாறு செய்தார். கூடாரங்கள் அமைக்கப்பட்ட பொழுது மக்கள் விழுந்தடித்து நெருக்கி ஓடி வந்ததைப் பார்த்தேன். அவர்களில் ஒருவன் சுல்தான் இறந்துவிட்டார் என்று சொன்னான். இன்னொருவன் அவரது மகன் இறந்துவிட்டார் என உறுதி கூறினான். விசாரணையின் பொழுது சுல்தானிள் இளவல் இறந்தது தெரியவந்தது. சுல்தானுக்கு வேறு மகன் இல்லை. அவருடைய நோயை இந்த இழப்பு மிகுதிப்படுத்தியது. அடுத்த வியாழக்கிழமை அவரது தாயார் இறந்தார். மூன்றாவது வியாழக்கிழமை சுல்தானும் இறந்துவிட்டார். ... [14]
அடுத்து, பட்டமேறிய சுல்தான் நசிருத்தீன் பற்றி, இபுன் பதூதா,[15]
".... ... .... நாஸிருத்தீன் , இறந்து போன சுல்தானின் ஒன்று விட்ட சகோதரர். தில்லியில் அலுவலராக இருந்தவர். கியாசுதின், சுல்தான் ஆனவுடன் நாஸிருத்தீன் பயந்து பிச்சைக்கார வேடத்தில் ஒடிப்போனார். ஆனால் அவரது ஒன்று விட்ட சகோதரருக்கு பின்னர், அவர் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியின் விளையாட்டு. நாஸிருத்தீன் அரியணையேறியவுடன் அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்தனர். கவிகள் புகழ் மாலைகளைச் சூட்டினர். அவர்களுக்கு சிறந்த பரிசில்களை அவர் வழங்கினார். முதலில் எழுந்து அவருக்கு வாழ்த்துக் கூறியவர் காஜிஸ்த்ரூஸ்ஜமான். அவருக்கு வாழ்த்துக்கு ஐநூறு பொற்காசுகளையும், சீருடைகளையும் சுல்தான் வழங்கினார். அடுத்து வந்தவர், நீதவான் வஜீர்-அல்-காஜி, அவருக்கு சுல்தான் இரண்டாயிரம் வெள்ளிக்காசுகளை வழங்கினார். எனக்கு முன்னுாறு பொற்காசுகளையும், சீருடையையும் கொடுத்தார். பக்கிரிகளுக்கும் ஏழைகளுக்கும் தானம் வழங்கினார். முதன்முறையாக, போதகர் ஒருவர் புதிய ஆட்சியாளரின் பெயரை இணைத்து முதல் பிரசங்கம் செய்தவுடன், பொன், வெள்ளி தட்டில்களிலிருந்து தினாரையும், திரம்மாவையும் அவர்மீது சொரிந்தனர். சுல்தான் கியாஸ்தீனது நல்லடக்கம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. அவரது புதை குழியருகே நாள்தோறும் திருமறை ஒதப்பட்டது. திருமறையின் பத்தாவது பகுதியை ஒதி முடித்த பின்னர், குழுவில் இருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் வயிறார உண்டனர். வந்து இருந்தவர்கள் தகுதிக்கு தக்கவாறு வெண் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நாற்பது நாட்கள் இவ்விதம் தொடர்ந்து நடைபெற்றன. இனி ஒவ்வோர் ஆண்டும் இதே மாதிரியான தருமம் மேற்கொள்ளப்படும்.... ... ...” *
மற்றுமொரு பயணியான வஸ்ஸாப், தமிழ்நாட்டு வணிகம் பற்றிய குறிப்புகளில்.[16]" ............... ஹிஜிரி ஆண்டு 692ல் மாபாரின் மன்னர் தேவர் இறந்து போனார். ஏராளமான செல்வங்களையும் அவர் விட்டுச் சென்று இருந்தார். ஏழாயிரம் பொதி மாடுகளில் ஏற்றபட்ட நவமணிகள், பொன், வெள்ளி ஆகியவை அவரையடுத்து பட்டமேறிய அவரது சகோதரர் பங்கிற்கு ஒதுக்கப்பட்டது. மாலிக் ஆஜம் தக்கியுத்தீன் முதன் மந்திரியாக தொடர்ந்து பணியாற்றினார். இன்னும் சொல்லப் போனால் ஆட்சியாளரான அவரது பெயரும் புகழும் ஆயிரம் மடங்கு உயர்ந்தன.
"வணிகம் மூலமாக ஏற்கனவே பெற்றிருந்த செல்வ வளதுடன், சீனத்தில்இருந்தும் இந்தியாவில் இதரப்பகுதிகளில் இருந்தும் மாபாருக்குள் எத்தகைய சாமான்கள், பொருட்கள், இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர் கட்டளையிட்டார். அவரது முகவர்களும் பணியாளர்களும் முதன் முதலில் தேர்வு செய்யும் வரை ஏனையவர்கள் அந்தப் பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.அவருக்குத்தேவையான பொருட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அவைகளை அவருடைய கப்பல்களில் அல்லது மற்ற வியாபாரிகள் கப்பல்களில் அவரது சொந்தத்தீவிற்கு அனுப்பப்பட்டன. மாலிக் குல் இஸ்லாமின் தேவைப்பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் வரை. ஏனைய வணிகர்கள் பேரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எஞ்சியவை கீழை, மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இத்தகைய விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் உள்நாட்டு சந்தைக்குரிய பொருட்கள் வாங்கப்பட்டன. கீழைக்கோடியில் உள்ள சீன நாட்டில் உற்பத்தியான பொருள், மேலைநாட்டில் பரவத்தக்க வகையில் வியாபாரம் நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த உலகம் இத்தகைய வியாபாரத்தைக் கண்டதில்லை. . . . . . மாலிக் இ-ஆஜம் தக்கியுத்தின் மாலிக்குல் இசுலாம் ஜமாலுத்தீன் ஆகிய இரு நிபுணர்களது உயர்வும், சிறுப்பும் மாபாரை விட இந்தியாவின் இதர பகுதிகளில், பெரும்அளவில் மதிக்கப்பட்டது. தொலைதுாரத்து மன்னர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு தோழமையுடன் பழகி வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வெளியிட்டு, அடிக்கடி மடல்கள் அனுப்பி வந்தனர்.’’
இவ்விதம் அரபுப் பயணிகள், கண்டதையும் கேட்டதையும் அவர்களது பயணக் குறிப்புகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும் கிராமங்களில், உண்மையை பெறுவதற்கு காய்ச்சிய எண்ணையில் கையை நனைக்கச் செய்தல், காய்ச்சிய இரும் புக்கம்பியை கையில் துரக்கிக் கொண்டு நடத்தல் ஆகிய மூட நம்பிக்கைகள் முந்தைச் சமுதாயத்திலும் இருந்ததை சுலைமான், இபுனுபதுரதா ஆகியோரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[17] தாடி, மீசை வைத்துக் கொள்ளுதல், காதுகளைத் துளையிட்டு கடுக்கன் அணிந்து கொள்ளுதல், பொன்னாலான கம்பிகளை, வளையல்களை அணிதல், போன்ற பழக்க வழக்கங்களை இபுனு பதூதா குறிப்பிட்டுள்ளார். அன்றைய தமிழகத்தில் பேணப்பட்டு வந்த இந்தப் பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகிய வைகளைத் தெரிந்து கொள்வதற்கும், இஸ்லாம் என்ற புத்தொளி தமிழ்ச் சமுதாயத்தில் புகுந்து ஊடுருவிய நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரபு நாட்டு பயணக் குறிப்புகள் பயன்படுகின்றன.
↑ Mohamed Hussain Nainar. Dr -Arab Geogrephers Knowledge of S. India (1942) P. 19, 20
↑ |bid р. 168
↑ Md. Hussain Nainar–Arab Geogrep hers Knowledge of S. India (1942
↑ |bid - p. 121, 134
↑ Ibid – p. 173
↑ Ibid - p. 173
↑ Ibid - p. 176
↑ Ibid p. 159
↑ Ibid p. 17S
↑ Ibid p. 109
↑ Ibid р. 169
↑ Nilakanta Sastri - Foreign Notices of s. India (1972)р, 132.
↑ Neelakanta Sastri Foreign Notices of S, India (1972) р. 278
↑ Ibid p. 252
↑ Ibid p. 282, 283
↑ Ibid p. 165
↑ Ibid