விந்தை மனிதர்
←மீண்டும் வாணிபத்தில்
முஸ்லீம்களும் தமிழகமும் ஆசிரியர் எஸ். எம். கமால்விந்தை மனிதர்
தமிழகம் வந்த அரபி பயணிகள்→
437591முஸ்லீம்களும் தமிழகமும் — விந்தை மனிதர்எஸ். எம். கமால்
17
விந்தை மனிதர்
தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்வு இல்லாத குடிமக்களாக தமிழக இசுலாமியர் வணிகத்தை வளர்த்தனர். அந்த வளர்ச்சியில் விளைந்த வாழ்வின் சிறந்த பண்புகளைப் பற்றி ஒழுகிய இசுலாமிய சமய நெறிச் சான்றோர்கள் உயர்ந்து வாழ்ந்தனர். அதன் காரணமாக அரசியல் முதன்மையும் பெற்றனர். பாண்டிய நாட்டின் அமைச்சராகவும் அரசியல் தூதுவர்களாகவும் பணியாற்றி தமிழகத்திற்கு பேரும் புகழும் குவித்தனர். ஆனால் குடி தழிஇஉ கோல் ஒச்சும் கொற்றவர்களாகும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் தமிழக இசுலாமியரது நீண்ட வரலாற்றில் ஒரே ஒருவருக்கு மட்டும், மிகச் சொற்ப இடைவெளியில், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த பேறு கிடைத்தது.
மதுரை நாயக்கப் பேரரசின் இரு நூற்றுப்பத்து ஆண்டு வரலாறு ராணி மீனாட்சியின் இறப்புடன் கி. பி. 1736ல் முடிவுற்றது.[1] அதுவரை தொடர்ந்து வந்த பாரம்பரிய ஆட்சிமுறை முற்றுப்புள்ளி பெற்றது. நாயக்க மன்னர்களுக்கும் குடி மக்களுக்கும் இடையில் தரகராக இருந்து வந்த எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள், தடியெடுத்த தண்டல்காரர்களாகினர். இந்த நிலையில், ஆற்காட்டு நவாப் பதவிக்கு போட்டியிட்ட வாலாஜா முகம்மது அலி, சந்தா சாகிபுவை, கும்பெனியாரது ஆயுதப்படை உதவியுடன் போரிட்டு ஒழித்து, திருவாங்கூர் உள்ளிட்ட தென்னகத்தில் அரசுரிமையை நிலைநாட்டினார். ஆனால் தெற்குச் சீமை பாளையக்காரர்களில் பெரும்பான்மையோர் ஆற்காட்டு நவாப்பின் அரசியல் ஆதிக்கத்தை ஏற்று அவருக்கு ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய பேஷ்குஷ் (தோப்பா) பணத்தைச் செலுத்த மறுத்தனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் கப்பத்தை செலுத்தாது தன்னாட்சி மன்னர்களைப் போல இருந்து வந்தவர்கள் ஆயிற்றே. தெல்லைச்சிமையில் நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரர் பூலித்தேவர் தலைமையில் சில பாளையக்காரர்கள் நவாப்பின்
படைகளோடு மோதுவதற்கும் ஆயத்தமாகினர். நவாப்பின், சகோதரர் மாபூஸ்கான் தலைமையிலும் கும்பெனித் தளபதி ஹெரான் தலைமையிலும் திருநெல்வேலி சென்ற நவாப். கும்பெனி படைகள் பாளையக்காரர்களை எளிதாக வழிக்கு கொண்டு வர
இயலவில்லை[2]
இந்நிலையில் நவாப்பின் படைகளுக்கு உதவியாககும் கும்பெனியாரது சுதேசி சிப்பாய்கள் அணி சென்னையில் இருந்து சென்றது. அதனை தலைமை தாங்கி நடத்தியவர் மாவீரன் முகம்மது யூசுப் கான் என்பவர். அவரை கம்மந்தான் கான் சாயபு என மக்கள் பிற்காலத்தில் மரியாதையுடன் அழைத்தனர். கமான்டன்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபுதான் கம்மந்தான் என்பது. அத்துடன் சாமந்தர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரடியான பொருள் தரக்கூடியதாகும். அவர் இராமநாதபுரம் சீமையில் உள்ள பனையூரில் பிறந்தார். இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி தஞ்சாவூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் இருந்த பரங்கியரது பராமரிப்பிலும் வளர்ந்து பயிற்சிபெற்று சிறந்த போர் வீரரானார். உடல் வலிவும் உள்ள உரமும் கொண்ட அவர் வெகு விரைவில் பரங்கிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தளபதியாக விளங்கினார். நமது போர் முறைகளுடன் துப்பாக்கி சுடுதல், பீரங்கி வெடித்தல் ஆகிய மேனாட்டு போரில் ஒப்பாரும் மிக்காருமின்றி திகழ்ந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய பரங்கிகளுக்கு செஞ்சோற்றுக் கடனாக பல போர்களில் வெற்றியை ஈட்டித் தந்தார். கி.பி. 1752ல் திருச்சி முற்றுகைப் போரில் வாலாஜா நவாப் முகம்மதலிக்காகப் போராடிய ராபர்ட் கிளைவின் வலது கரமாக விளங்கி சந்தாசாவியும் பிரஞ்சுப்படைகளையும் படுதோல்விக்கு ஆளாக்கினார். அதே போன்று பிரஞ்சுக்காரர்கள் கி பி. 1758ல் சென்னைக் கோட்டையைத் தாக்கிய பொழுதும் கம்மந்தான் கான்சாயபு காட்டிய வீர சாகசங்களினால் வெள்ளையர் தப்பிபிழைத்தார்கள். ஆதலால் இத்தகைய, சிறந்த தளபதியிடம் நெல்லைப் பாளையக்காரர்களை
அடங்கியொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
நவாப்பிற்கு எதிரான நெல்லைச் சீமை பாளையக்காரர்கள் அணியைப்பிளந்து தூள்தூளாக்கினர். அந்த அணிக்கு தலைமை தாங்கிய பூலித்தேவர் வாசுதேவர் நல்லூர் கோட்டைப் போரில் நடுநடுங்கும்படியாக அவரது பீரங்கிகள் முழங்கின. சரமாரியாக பாய்ந்து வந்து சர்வநாசம் செய்த பீரங்கிகள் குண்டுகளிளுள் பூலித் தேவரது மறப்படை புறமுதுவிட்டு ஓடியது. அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் மிகச்சிறந்த வீரராக மதிக்கப்பட்ட பூலித்தேவர் கம்மந்தான் கான்சாயபுவிடம் 16. 5. 1861ம் ஆண்டு, தோல்வியுற்று இராமநாதபுரம் சீமையில் உள்ள கடலாடிக்கு தப்பி ஓடினார்.[3] பூலித்தேவருக்கு ஆயுதமும் ஆதரவும் அளித்து வந்த மைசூர் மன்னர் ஹைதர்அலியை திண்டுக்கல் போரிலும்,[4] டச்சுக்காரர்களை ஆழ்வார் திருநகரி, மனப்பாடிலும் தோற்கடித்தார்.[5] எஞ்சிய கிளர்ச்சிக்கார பாளையக்காரர்களை ஒட்டப்பிடார போரில் அழித்து ஒழித்தார்.[6] ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியுடன், மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் நவாப்பிற்காக கிளர்ச்சியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு தமிழகத்தில் அரசியல் உறுதி தன்மைக்கும் அமைதி வாழ்விற்கும் ஊறு செய்து வந்த எதிர்ப்பு சக்திகள் அனைத்துடனும் பேராடி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகள் மதுரையில் ஆளுனராக இருந்த தமது சகோதரர் மாபூஸ்கானால் கூட அடக்க முடியாத பாளையக்காரர்களைப் பல போர் முனைகளில் வென்று நாட்டில் நிரந்தரமான அமைதியை நாட்டியதற்காக நவாப் வாலாஜா முமம்மது அலி, கம்மந்தான் கான்சாகிபிற்கு பொன்னால் ஆன தட்டு ஒன்றையும் அற்புதமாக வடிவு அமைக்கப்பட்ட வாள் ஒன்றையும் பரிசாக அளித்து அவரது சேவையைப் பாராட்டினார்.
மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக்குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரைகரையும் அதனையடுத்த வடக்கு, வடக்கு கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான, திருடு, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து அவலத்துக்குள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார். மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தினின்றும் காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில், பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது
கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும் கால்களையும் செம்மைப்படுத்தினார். உள்நாட்டு வணிகம், சிறப்பாக நடைபெறுவதற்கு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் ஆங்காங்கு வணிகர்கள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துக் கொடுத்தார். நெசவாளர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களது தொழிலை விரிவுபடுத்த ஊக்குவித்தார். சாதாரண குடிமகனும் மேநாட்டு ஆயுதங்களான துப்பாக்கி, பீரங்கிகளை வடிக்கும் முறைகளையும் அவைகளுக்கான வெடிமருந்து பாரிப்புகளையும் தெரிந்து கொள்ளுமாறு செய்தார். மாதம் தவறாது திருவிழாக்கள் நடந்த மதுரை மாநகர் கோயில்களுக்கு வழங்கப்பட்ட "மான்யங்களை" கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் சொந்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டதால் புறக்கணிக்கப்பட்ட கோயில் நடைமுறைகளை, திருவிழாக்களை,மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி ஆலயம் போன்ற திருக்கோயில்களுக்கு அரசு மான்யம் வழங்கி, அவை பொலிவும் அழகும் பெறுமாறு செய்தார்.[7]
சுருங்கச்சொன்னால் கம்மந்தான் ஆட்சியில் நீதியும் நியாயமும் நிலைத்து தழைத்தது. கொடுமைகள் குற்றங்களும் மறைந்து அமைதி நிலவியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அரசுக்கு சேரவேண்டிய நிலத்தீர்வையினால் அரசுக் கருவூலங்கள் நிறைந்தன. ஆற்காட்டு நவாப்பிற்கு, மதுரை திருநெல்வேலி சீமையில் இருந்து சேரவேண்டிய ஆண்டுக் குத்தகைப் பணம் ஐந்து லட்சமும் தவறாது போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது. நவாப்பிற்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் ... . ஆனால் ஒரு சந்தேகம்கூட. குடிமக்களது ஒத்துழைப்புடன் மிகவும் செல்வாக்காக விளங்கும் கான்சாயபு, தன்னாட்சி மன்னனாக மாறிவிட்டால்? கும்பெனியாரும் கான்சாகிபை சந்தேகக்
கண்களுடன் கவனித்து வந்தனர். அதை உறுதிப்படுத்தும் சூழ்நிலை ஒன்றும் எழுந்தது.[8]
கி.பி. 1762ம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாங்கூர் மன்னன் தர்மராஜா பாஞ்சாலங்குறிச்சி, எட்டையாபுரம் பாளையக்காரருடன், திருநெல்வேலிச் சீமையின் தெற்குப் பகுதியில் ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார். மேலும் அவரது ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் வகையில் வடகரை சிவகிரி பாளையக்காரர்கள் செங்கோட்டையை கைப்பற்றினார். கொதித்து எழுந்த கம்மந்தான் சான் சாகிபு, திருநெல்வேலிக்கு விரைந்து சென்றார். அங்குள்ள மறவர்களைத் திரட்டி திருவாங்கூர் மன்னனது ஆக்கிரமிப்பு படைகளுடன் மோதினார். அவரே முன்னின்று நடத்திய போரில் செங்கோட்டையைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பாளர்கள் புறமுதுகிட்டு ஓடினர். இன்னொரு பகுதியில், திருவாங்கூர் படை வலிமையுடன் போராடியது. தொடர்ந்து பத்துப் போர்களில் திருவாங்கூர் படைகளுடன் பொருதி பயங்கரமான இரத்தக்களரியை ஏற்படுத்தியும் கம்மந்தானுக்கு முழு வெற்றி கிட்டவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எஞ்சிய அனைத்து ஆதரவுகளையும் எதிர்ப்பு சக்திகளையும் திரட்டி இறுதிப்போரைத் துவக்கினார். கம்மந்தானது கடுமையான தாக்குதலைத் தாங்க இயலாத ஆக்கிரமிப்பாளர்களும் கைக்கூலிகளும் நாஞ்சில் நாட்டுத் தென்கோடியில் உள்ள ஆரல்வாய்மொழி வழியாக திருவாங்கூர் நோக்கி ஓடினர். அவர்களைத் துரத்திச்சென்ற கான் சாயபு திருவாங்கூர் எல்லைக்குள் நுழைந்து நெய்யாத்திங் கரையைப் பிடித்ததுடன் தென்திருவாங்கூர் கிராமங்களைச் சூறையாடி தீயிட்டார். திருவாங்கூர் மன்னன் திகைத்துப் போய் கம்மந்தானிடம் சமாதானம் கோரி ஓடிவந்தான். அதே நேரத்தில் தம்மையும் தமது நாட்டையும் கம்மந்தான் ஆக்கிரமித்து அட்டுழியங் செய்வதாக ஆற்காட்டு நவாப்பிற்கு புகாரும் செய்தான்.[9] அத்துடன் கான்சாயபுவை ஒழித்துக்கட்ட அனைத்து உதவிகளையும் ஆற்காட்டு நவாப்பிற்கு நல்குவதாகவும் உறுதியளித்தான்.[10] ஏற்கனவே கும்பெனி கவர்னர் உத்திரவிற்கு முரணாக, பேஷ்குஷ் தொகையை ஆற்காட்டு நவாப்பிற்கு அனுப்பி வைக்காத கான்சாயபு இப்பொழுது கும்பெனியாரையோ நவாப்பையோ கலந்து கொள்ளாமல் திருவாங்கூர் மன்னர் மீது உடனடியாகப் போர்தொடுத்தது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை அளித்தது. நவாப்பின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அவரது கற்பனையில் கம்மந்தான் கான்சாயபு, ஆற்காட்டு நவாப்பிற்கும் கும்பெனியாருக்கும் கட்டுப்படாத தன்னாட்சி மன்னராக காட்சியளித்தார். நவாப்பினது அரசியல் சலுகைகளை முழுமையாக நம்பி இருந்த கும்பெனித்தலைமை, நவாப்பிற்காக பரிந்து செயல்பட்டது. அவரை உடனே சென்னைக்கு அழைத்தது. அதுவரை கும்பெனியாரால் ஆதரிக்கப்பட்டு கும்பெனியரது அலுவலராக இருந்து வந்த நிலையில், புதிய எஜமானரான நவாப்பிற்கு கட்டுப்பட்டு அடிமைச்சேவகம் செய்ய அவர் தயாராக இல்லை. தம்மைப்புரிந்து கொள்ளாத கும்பெனி கவர்னரது ஆணையை ஏற்று சென்னை செல்லவும் அவர் விரும்பவில்லை. இந்த நிலையில் கும்பெனியார் மதுரை மீது படையெடுக்க துணிந்தனர் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சுவதில்லை அல்லவா?
களம் பல கண்ட கான்சாயபு கும்பெனியாரது முடிவிற்கு பயப்படவில்லை, கும்பெனியாருடன் பொருதுவதற்கான அனைத்து ஆயத்தங்களிலும் முனைந்தார். மைசூர் மன்னர் ஹைதர் அலியுடனும் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சுக்காரர்களுடனும் தொடர்பு கொண்டார். மதுரைக் கோட்டைக்கு நுழைவாயிலாக உள்ள நத்தம் கணவாய் வழியைப் பலப்படுத்தினார். ஆனால், கும்பெனி படைகள் தொண்டமான் சீமை வழியாக மதுரைச்சீமைக்குள் நுழைந்து திருவாதவூர் திருமோகூர் ஆகிய ஊர்களைப்பிடித்து மதுரைக் கோட்டையை நெருங்கினர். திருநெல்வேலி, தொண்டி, திருச்சி ஆகிய வழிகளில் மதுரைக்கு உதவி செய்யாமல் தடுத்தனர். மதுரைக் கோட்டையையும் முற்றுகையிட்டனர். தாக்கினர். கும்பெனியாருக்கு உதவிப்படைகள் விரைந்து வந்தன. தளபதிகள் மான்சன், பிரஸ்டன் ஆகியோர் எட்டு மாதங்கள் இடைவிடாது கான் சாயபுவின் மதுரை கோட்டையைத் தாக்கினர். மதுரைக் கோட்டைக்குள் நுழைவதற்கு படாத பாடுபட்டனர். முடியவில்லை.
கும்பெனித் தலைமை தளபதிகளை மாற்றியது. போருக்கான புதிய உத்திகளை வரைந்தது. மதுரை மீதான தாக்குதலை கடுமையாக்கியது. கான்சாகிபும் சிறிதும் களைப்படையாமல் பரங்கிகளை உக்கிரமாகத் தாக்கினார். பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. பரங்கிகளுக்கு ஆனால் கான் சாகிபின் சீற்றம் தணியவில்லை. ஆற்காட்டு நவாப் வாலாஜாமுகம்மது அலியும் பெரிய தளபதி வாரன்ஸ் களத்தில் இருந்து போர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். என்றாலும் மதுரைக் கோட்டையில் ஒருபிடி மண்ணைக்கூட அவர்களால் அள்ளிக்கொள்ள இயலவில்லை. தமிழக வரலாற்றில் பதினைந்து மாத முற்றுகைக்கு ஆளான கோட்டையும் கிடையாது. ஒரு கோட்டையைப் பிடிக்க இவ்வளவு நீண்ட நாட்கள் போராடி தோல்விகண்டதும் கும்பெனியாரின் வரலாற்றிலும் இல்லை. ஆனால் அவர்களது துரோகச் செயல்கள் என்றும் தோல்வி கண்டது கிடையாது. போர் நீடித்துக் கொண்டு இருந்ததால் பொறுமை இழந்த கான்சாயபுவின் சில தளபதிகளை மறைமுகமாகச் சந்தித்து ஆசை வார்த்தை கூறி அன்பளிப்புகள் கொடுத்தனர்.
1764ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதின்மூன்றாம் தேதி மாலை நேரத் தொழுகையில் ஈடுபட்டு இருந்தார் கான்சாகிபு. அவருடைய திவான் சீனிவாசராவும், தளபதி மார்சன்ட் என்ற பிரஞ்சுக்காரனும் சில கைக்கூலிகள் உதவியுடன் திடீரென கம்மந்தான் மீது விழுந்து அமுக்கிப் பிடித்து கயிற்றினால் பிணைத்தனர்,[11] அரண்மனைப் பெண்கள் பயன்படுத்தும் மூடுபல்லக்கில் அவரை கடத்தி கோட்டைக்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பொழுது கம்மந்தானுடைய மெய்க்காவலராக இருந்த "முதலி" ஒருவர் இந்தச் சதிகாரர்களை தனது வாளால் சாடினார் அவரை துப்பாக்கியினால் ஒருவன் சுட்டுத் தள்ளினான். இன்னொருவன் அவரைவாளால் வெட்டிப்பிளந்தான். தமிழகத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாயகனைக் காப்பதற்கு முயன்ற அந்த வீரன், தியாகியானான்.[12] துரோகிகளது திட்டத்திற்கு வேறு எதிர்ப்பு இல்லை. கயிற்றால் பிணைக்கப்பட்டு கிடந்த கான்சாயபுவை வைகை ஆற்றின் வடகரையில் பாசறை அமைத்து இருந்த கும்பெனியாரிடம் ஒப்படைத்தனர், அந்தக் கழிசடைகள். மகத்தான வீரத்தை மனிதாபிமானமற்ற துரோகம் வென்றது. பதினைந்து மாத போரினால் பிடிக்க முடியாத "அந்த எதிரி"யைக் கண்ட பரங்கிகளுக்கு ஒருபுறம் ஆச்சரியம். இன்னொருபுறம் ஆனந்தம். அந்த துரோக கும்பலிடம் அவர் எதுவும் பேசவில்லை. அவர்கள் வழங்கிய உணவையும் தொடவில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட வரிப்புலிபோல வெஞ்சினத்தால் அவர் துடித்துக் கொண்டு இருந்தார்.
போர்க் கைதியாகிவிட்டதற்காக அவரது உள்ளம் பொருமியது. வாழ்க்கையின் பெரும் பகுதியை விசுவாசமில்லாத பரங்கிகளது பணியில் கழித்துவிட்டதற்காக அவரது உள்ளம் நைந்தது. அவர்களைப் பழிவாங்க வாய்ப்பு இத்தகைய வேதனை விரவிய இரண்டு நாட்கள் கழித்த பிறகு, நவாப்பும் கும்பெனியாரும் ஒரு முடிவிற்கு வந்தனர். கான் சாகிபு உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கு நிம்மதி இருக்காது என்பதுதான். ஆதலால் அவரை மதுரைக்கோட்டையின் மேற்கு வாசலுக்கு அண்மையில் தூக்கிலிட்டுக் கொன்றனர். தமிழக வரலாற்றின் சிறப்புமிக்க வரலாற்றுப் பகுதி இவ்விதம் விரைவான முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக இசுலாமியரது தன்னேரில்லாத நாட்டுப்பற்று, மான உணர்வு, போர் ஆற்றல், மனித நேய நடவடிக்கைகள் இவைகள் அனைத்தும் பொதிந்து வீரவடிவாக விளங்குகிறது. கம்மந்தானின் தியாக வரலாறு, அவரது போர்ப் பண்புகளை அவரது நாட்டுப்பணி ஆட்சியின் மாட்சியை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் பாராட்டி உள்ளனர். ஜேம்ஸ்மில் கர்னல் புல்லாட்டன், கலெக்டர் லூஷிங்க்டன், டாக்டர் கால்டு வெல், டாக்டர் ராஜையன் ஆகியோர் கான்சாயபுவிற்கு சூட்டியுள்ள புகழாரங்கள் வரலாற்றில் பொன்னேடாக பொலிவுடன் விளங்கி கொண்டு இருக்கின்றன. அனாதையாக வளர்ந்து, மாவீரனாக உயர்ந்து, மனிதனாக வாழ்ந்து, தியாகியாக மடிந்த அவரது அற்புத வாழ்க்கை நயவஞ்சகர்களை எதிர்க்க வேண்டும், நாட்டிற்கு உழைக்கவேண்டும், நல்ல இசுலாமியராக வாழ வேண்டும், என்ற நியதிகளை நமக்கு என்றென்றும் நினைவுறுத்திக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் மான உணர்வும், மறப்பண்புகளும் விடுதலை வேட்கையும், அலைகடல் போல என்றென்றும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் வரை, முகம்மது யூசுப்கானின் புனித நினைவும் பூவைப்பிணைத்த மணம் போல நமது சிந்தனையில் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்.[13]
↑ Sathyanathaier – History of Madura Nayaks (1924) p. 224.
↑ Rajayyan Dr. K.-History of Madurai. (1972)
↑ M. C. C. VOL. 9. 25. 5. 1761 p : 58
↑ M. C. C. VOL. 8. 11. 2. 1760 p.p. 293 : 296
↑ Ibid 5. 7. 1760 р. 218.
↑ Ibid 4, 7. 1760 р. 213 M. C. C. VOL. 9. 26. 6. 1761. p : 78
↑ Rajawan Dr K . History of Madurai (19724) P.P. 210: 211
↑ M.C.C. Vol. 10 14-11-1762 p. 31.4
↑ M. C. C. VOL 12 – 4. 2. 1763. p.p. 356:397
↑ Military Despatches — VOL 3 p.p. 84.85
↑ Caldwell Dr. — Political and General History of Trinelveli Dist. (1881) P.130.
↑ Hill. S. C. - Yousceffkhan. Rebell Commendent p. 2.20 (1940)
↑ lbid p. 225