Get it on Google Play
Download on the App Store

கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

 

 

←கட்டுமானங்கள்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

இலக்கிய அரங்கில்→

 

 

 

 

 


437597முஸ்லீம்களும் தமிழகமும் — கல்வெட்டுகளும் செப்பேடுகளும்எஸ். எம். கமால்

 

 


23
கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

 

தமிழக வரலாற்றைத் தெளிவாக வரைவதற்கு தக்கசாதனமாக தமிழகத்தின் முடியுடை மன்னராக விளங்கிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், நாயக்கர்களும் தங்களது ஆட்சிக் காலத்தில் பொறிக்கச் செய்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அமைந்துள்ளன. அவைகளில் இருந்து அன்றைய ஆட்சிமுறை, ஆட்சிக்குட்டட்ட நாடுகள், அரசியல் நிகழ்ச்சிகள், அரும்பெரும் செயல்கள், போன்ற பல செய்திகள் பெறப்படுகின்றன. கால வெள்ளத்தில் அழிந்து போன வரலாற்றின் கூர்மையான விளிம்புகளின் விளக்கமாகவும் அவை விளங்குகின்றன. ஆனால், இந்தச் செய்திகள், தமிழக இஸ்லாமியர்களைப் பற்றி அவர்களது தொன்மை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், தமிழ்ச்சமுதாயத்தில் அவர்களது பங்கு, என்பன போன்ற பலவற்றைப் புரிய வைக்கும் முழுமையான அளவில் உதவவில்லை. காரணம், தமிழகத்தில் இஸ்லாமியர்களது அரசு, ஆட்சி, ஒரு நூற்றாண்டு கால அளவில கூட தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. ஆதலால் இஸ்லாமிய மன்னர்களோ ஆளுநர்களோ வழங்கிய சாசனங்களை வரலாற்றில் காண்பது அரிது.
என்றாலும், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் அரபுக் குடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காகவும் சமயப் பணிக்காகவும், இஸ்லாமியர் குடிபுகுந்தது, தொழுகைப்பள்ளி, நிர்மானம், அரசியல் ஊக்குவிப்புகளுக்கு உரியவர்களாக விளங்கியமை, இறையிலிகள் பெற்றமை, தமிழ் மக்களுடன் இணைந்து செயல்பட்டமை, போன்ற செய்தித் தொடர்கள் சில கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்பெற்று இருப்பதால், அவைகளையே நமது ஆய்வுக்குரிய தமிழக இஸ்லாமியரைப் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.
முதல் கல்வெட்டு
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களது இறைமறையை, அன்னார்கள் காலத்திலேயே தாங்கி வந்த தவச் செல்வர்களான ஸஹாபி தமீம் உல் அன்சாரியினுடையதும் 
ஸஹாபி உக்காஸா வினதுமான அடக்க இடங்கள் முறையே கோவளத்திலும் முகம்மது பந்தரிலும் அமைந்துள்ள போதிலும் திருச்சிராப்பள்ளியில் முகம்மது அப்துல்லா-பின்-ஹாஜி முகம்மது அப்துல்லா நிர்மாணித்த தொழுகைப் பள்ளியில் வரையப்பெற்றுள்ள ஹிஜிரி 114 (கி.பி. 734)ம் வருட அரபிக் கல்வெட்டு தான்தமிழகத்தில் நமக்கு கிடைத்துள்ள தொன்மையான இஸ்லாமியக் கல்வெட்டாக கொள்ள வேண்டும். தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர் தங்கிவாழத் துவங்கினர் என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறது இந்த சாசனம். இஸ்லாமியர்களது புதிய குடியிருப்புகள் திருச்சிராப்பள்ளியில் மட்டும் அல்லாமல் பாண்டியனது தலைநகரான மதுரையிலும், அந்த நாட்டின் கீழைப் கடற்கரையெங்கும் அஞ்சுவண்ணங்களாக அமைந்து இருந்தன. அதனை இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானக் 
கல்வெட்டு சான்று பகர்கின்றது. அந்தக் கல்வெட்டில் "இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும், மணிக்கிராமத்தோரும் ஆரியர் சாமாந்த பண்டக சாலையும், பட்டாரியரும், தோயா வத்திரச் செட்டிகளும், தென்னிலங்கை வலஞ்சியரும், கைக்கோளரும் தூக வரும், வாணியரும், நீண்ட கரையாரும், கோயில் திருமுன்பிலே நிறைவறக்கூடி இருந்து” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
சோனகர்களது அஞ்சுவண்ணம் தமிழகத்தில் பல பகுதிகளில் அமைந்து இருந்ததை பல இலக்கியச் சான்றுகள் தெரிவித்தாலும் இந்தக் கல்வெட்டின் வாசகம் தான் வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ளது. சங்க இலக்கியங்கள் சுட்டுகின்ற யவனச்சேரிகள் போன்று. சோனகரது அஞ்சுவண்ணமொன்று மதுரைப் பெருநகரில்,ஒன்பது பத்தாவது நூற்றாண்டில் இருந்தது.சோனகர் பதினாயிரம் பொன்கொடுத்து, கூன்பாண்டியனிடமிருந்து கைக்கொண்ட காணி உரிமை பற்றிய வழ்க்கு ஒன்று பின்னர் கி.பி. 1573 ல் மதுரை மன்னரான முத்துவீரப்ப நாயக்கரால் தீர்வு பெற்றதை மதுரை கோரிப்பாளையம் கல்வெட்டு அறிவிக்கிறது.[2]
வணிகர்களாக வந்த சோனகர், நாளடைவில் இந்த மண்ணின் மாண்புக்குறிய மக்களாக நிலைத்துவிட்டனர், அவர்களுக்கு பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியிலும், பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது நூற்றாண்டில், பிற்காலப் பாண்டிய அரசுகளிலும், நல்ல சமூக சூழ்நிலைகளும் அரசியல் ஊக்குவிப்புகளும், உதவின. "தஞ்சைப் புறம்பாடி ராஜ்ய வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" (சாமுன் என்று இருத்தல் வேண்டும்) என்ற ராஜராஜ சோழனது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டிலும் "திருமந்திர ஓலை நாயகனான கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ வித்தியாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்" என ராஜேந்திர சோழனது கோலார் கல்வெட்டிலும் சோனகரது பெருந்தலைவர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கு, "இராஜேந்திர சோழபுரத்து இராச விச்சாதீரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர் பரஞ்சோதியான சோழ சுந்தர்வப் பேரரயன்" எனப்புகழுரை சூட்டப்பட்டுள்ளது.[3] சோழர்களது பேரவையை அலங்கரித்த இந்தச் சோனகரைப் போன்று, பாண்டியரது அரசியல் பணியிலும் சோனகர் ஒருவர் சாமந்தராக இருந்தார் என்பதை திருப்புல்லாணி கோயிலில் உள்ள கோனேரின்மை கொண்டானான பாண்டியன் சடையவர்மனது எட்டாம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. பாண்டிய படைப்பிரிவின் சாமந்தனரக விளங்கிய சோனகர் ஒருவர் பெயர் அறியத்தக்கதாக இல்லை பவுத்திரமாணிக்க பட்டினத்தில் அமைத்த பள்ளிக்கு நிவந்தமாக ஆம்புத்துார் மருதூர் முதலான ஊர்களை இறை இலியாக இருந்து வர பாண்டியன் கோனேரிண்மை கொண்டான் ஆணை இட்டான். இந்த ஆணை,
"... ... ... கீட் செம்பிநாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் கீழ்பால் சோனக சாமந்தப் பள்ளியான பிழார்ப்பள்ளி ஆழ்வாருக்கும், இவர் செய்ய திருவாய் மலர்ந்தருவிய படிக்கு .... .... ...." என நீண்டு தொடர்கிறது.[4]
பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருக்களர் கல்வெட்டு, பாண்டியரது, அரசு கட்டிலுக்கான போட்டியில் பாண்டிய நாட்டு முஸ்லீம்கள், சுந்தர பாண்டியனைச் சார்ந்து நின்று உதவிய உண்மையை வெளிப்படுத்துவதுடன் அந்த உள்நாட்டுப் பூசலினால் உருக்குலைந்த தமிழகத்தையும் அந்தக் கல்வெட்டுத் தொடர் கீழ்க்கண்டவாறு உணர்த்துகிறது.[5]
".... ... .... .... முன்னாள் இராஜராஜன் சுந்தர பாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளிலே, ஒக்கூருடையாரும், இவர் தம்பிமாரும், அனைவரும், அடியாரும் .... ... .... செத்தும் கெட்டுப் போய் அலைந்து, வரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாய் இருக்கிற அளவிலே .... ..." என்று இதே காலத்தில் தென்பாண்டி நாடு சேர மன்னன் உதயமார்த்தாண்டனது ஆட்சியில் அமைந்து இருந்தது. அங்கும் இஸ்லாமியர் அரசின் ஆதரவுக்கு உகந்தவர்களாக இருந்தனர் என்பதை காயல்பட்டின கல்வெட்டு ஒன்றிலிருந்து தெரிகிறது. அந்த கல்வெட்டின் வாசகம்,
"சோனாடு கொண்டான் பட்டினத்து ஜும்மா பள்ளிக்கு உதய மார்த்தாண்டப் பெரும்பள்ளி எனப் பெயருங் கொடுத்து அவ்வூரில், காதியாரான அவூவக்கருக்கு உதய மார்த்தாண்ட காதியார் எனப் பேரும் கொடுத்து இந்தப் பள்ளிக்குச் சுவந்திரமாக இந்த சோனாடு கொண்டான் பட்டினத்துறையில், ஏற்றுமதி இறக்குமதி கொள்ளும் பொருளிலும், விலைப்படி உள்ள முதலுக்கு நாலு பணத்துக்கு கால் பணமாக உள்ள விழுக்காடு கொள்ளும்படி ... ... ... ..."[6]ஆணையிடுகிறது.
கி.பி. 1330-78 வரை மதுரையில், தன்னாட்சி செய்த சுல்தான்களின் ஆட்சிக் காலத்து பொறிக்கப்பட்ட நான்கு  கல்வெட்டுக்கள் இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கிடைதுள்ளன. அதுவரை தமிழக கல்வெட்டுக்கள் வரையப்பட்டுள்ள வகையினின்றும் அவை, மாறுபட்டுள்ளன. அவைகளில் இருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
"இராசாக்கள் தம்பிரானுக்கு 761 () பங்குனி மாதம் 5ம் தேதி பொன்னமராவதி நாட்டு நாட்டாரோம் விரையாச் சிலை உள்ளிட்ட ஊரவருக்கும் கோட்டியூர் உள்ளிட்ட ஊரவரும் பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது
"இராசாக்கள் தம்பிரானார் சூரக்குடி அழியச் செய்வதாக மஞ்சிலிக எலிசுகானை , ஆசம் காத்தானை, முஸாக் கான்கானை, இராசாத்தி கானுடனே பரிகாரம் ஏவப்பட்டு, சூரக்குடியும் அழியச் செய்து, மாத்துார் குளத்திலே விடுதியா விரைச்சிலை, கோட்டியூர் ஊரவர்களைக் கானச் சொல்லி அருளிச் செய்தபடியாலே, இவ்வடிகள் கண் அளிவுக்கு இராசாக்கள் தம்பிரானார் தோசது கானுக்கும் எங்களுக்கும் பிரமாணம்   வரகாட்டி அருளினபடி ... ... ..." [7]
" ... ... .... ஆதி சுரத்தானுக்கு .... ... சித்திரை .... தியதி பூர்வபட்சத்து ஏகாதேசியும் திங்கட் கிழமையும் பெற்ற பூசத்து நாள் பொன்னமராவதி நாட்டு இராசிங்கமங்கலத்து ஊராக
"இசைந்த ஊரவர்க்கு கானநாடான விருதராச பயங்கர வளநாட்டு ஆதனுார் ஊராக இசைந்த ஊரோம் காவல் பிரமானம் பண்ணிக் கொடுத்த பரிசாவது துலுக்கர் கலகமாய் எங்குங்
"கட்டாளும் பிடியாமல் பரிகரித்து வேறு ஒருவர் இவ்விடங்களில் நிலை நரருங் கொள்ளாமல் பரிகரித்து "கள்வனுார் அடித்துக் கொண்டு போன கன்றுங்காலியும் விடுவித்து தந்து
"நாங்கள் இங்கு இருக்குமளவும் சோறு பாக்கும் ஆராய்ந்து எங்களைப் பரிகரித்துக் கொண்டு போக வேணு மென்கிற ... ... .... [8] “.... ... .... மகாமதி சுரத்தானுக்கு யாண்டு பங்குனி எ/ந்தியதி நாள் பொன்னமராபதி நாட்டு பனையூர் குள மங்கலத்து ஊரக இசைந்த ஊரவரோம் குளமங்கலத்தில் தரகு காரியமாக இரண்டு ஊரும் படை பொருது ஆளும்பட்டு ஊரும் அழிந்து வேண்டின நிக்கே போய் மீண்டும் ஊரிலே குடி புகுதுகையில் எங்களில் குடி இராதபடியாலே நகரத்தாரும் கம்மாளருக் கூடி எங்களைச் சேர இருக்கையில் ... ... ...[9]
இவைகளிலிருந்து நான்கு உண்மைகள் பெறப்படுகின்றன.
⁠அ) முதன்முறையாக இஸ்லாமியரின் ஹிஜிரி ஆண்டு கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.
⁠ஆ) தமிழகத்தின் ஏனைய கல்வெட்டுக்களில் காணப்படுவது போல் இவைகளில் மன்னரது விருதாவஸிகள் பயன்படுத்தப்படவில்லை.
⁠இ) சம்மந்தப்பட்ட இஸ்லாமியப் பெயர்கள் தமிழின் ஒலி வடிவத்திற்கு ஏற்ப தமிழுருப்பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
⁠ஈ) கல்வெட்டின் நடை கொடுந் தமிழாகவோ, கொச்சைத் தமிழாகவோ இல்லாமல் நல்ல பழகு தமிழாக அமைக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இஸ்லாமியக் கல்வெட்டிலும் மாற்றம் காணப்படுகின்றன. கி.பி. 1749ல் வரையப் பெற்றுள்ள ஆற்காட்டு நவாப்பினது கல்வெட்டு ஒன்றில்,
"... ... .... மகா மண்டலேசுவர மேதின மீசுர, அனேக சதுரங்காதிபதி, கெடிமண்ணியம் சுல்த்தானன், நாவலப் பெருந்தீவு நவமணி வேந்தன், பூர்வ, தட்சிண, பச்சிம, உத்திர, சது சமுத்திராதிபதி தில்லி ஆலங்கீர்ஷா மம்மதுஷா பிரிதிவி ராஜ்ஜியம் பண்ணி அருளா நின்ற சாலிவாகன சகாப்தம் 1645க்கு மேல் செல்லா நின்ற சோப கிருது பூரீசோமவாரத்தில் பூர்வ பக்ஷத்து ஸப்தமியும், அனுகார நாம யோகம் தை லாகரணமும் மகா நட்சத்திரமும் பெத்த நாளில் ஜெயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், தெண்ட கண்டு நாட்டில், ஊத்துக்காட்டுக் கோட்டத்தில் கருநாடக சுபா திவான்பாட்சா துல்லார்கான்- பகதூர் ராச்சியம் பண்ணுகையில் .... ... ....” என்ற மணிப்பிரவாள நடை அன்னியரான ஆற்காடு நவாப் ஆட்சியில், பயன்படுத்தப் பட்டுள்ளதால் அன்றைய நிலையில் செந்தமிழ் வழக்கு சோபையற்று விளங்கியது தெரியவருகிறது.
கல்வெட்டுகளைப் போன்று, காலத்தையும், கடந்து சென்றவர்களின் சாதனையையும் கட்டியம் கூறுபவை பட்டயங்கள் என்ற செப்பேடுகள். ராஜேந்திர சோழனது ஆனைமங்கலச் செப்பேடுதான் இஸ்லாமியர்களைப் பற்றிய பழமையான செப்பேடாக உள்ளது. இந்தச் செப்பேட்டில், சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டணம் கூற்றத்து சன்னமங்கலத்து மத்யஸ்தன் துருக்கனகுமது" கையெழுத்திட்டுள்ளார். பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியில் இஸ்லாமியர்கள் அஞ்சு வண்ணத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமல்லாமல் தமிழ்ச் சமுதாயத்தில் தக்க சிறப்புடன் வாழ்ந்தனர் என்பதை சூசகமாக சொல்லும் செய்தி தான் இது. தொடர்ந்து பாண்டியப் பேரரசிலும், தமிழக இஸ்லாமியர்களுக்கு தனி சலுகையும் சிறப்பும் இருந்தன. ஆனால் அவைகளை விளக்கக்கூடிய செப்பேடுகள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் மதுரையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள தொழுகைப் பள்ளியை நிர் மாணிப்பதற்கு உதவியதுடன் அதனைத் பராமரிக்கவும் மதுரையை அடுத்த விரகனூர் கிராமத்தை முற்றுாட்டாக வழங்கி உத்திர விட்ட சந்தரபாண்டியனது செப்பேடு இன்றும் அந்தப் பள்ளியின் நிருவாகியிடம் இருப்பதாகத் தெரிகிறது. நூற்றாண்டுகள் பல முடிந்த பொழுதும், ஏகத்துவ நெறியைப் போதித்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கி வந்த தமிழக இஸ்லாமியர் பால் ஆட்சியாளரது அன்பும் அனுதாபமும் தொடர்ந்தன என்பதை தஞ்சை மராட்டிய மன்னர்கள், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது செப்பேடுகள் பல தெரிவிக்கின்றன, அனுமந்தக்குடி, இராமேஸ்வரம், ஏறுபதி, இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் அடக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய தவச் செல்வர்களிடம் பெருமதிப்புக் கொண்டு அந்தப் புனித இடங்களைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவம், அங்கு வருபவர்களுக்கு உணவு படைக்கவும், பல நூறு ஏக்கர் விளை நிலங்களை நிலக்கொடையாக திருமலை சேதுபதி, கிழவன் என்ற முத்துக் குமார விஜயரகுநாத சேதுபதி, குமார முத்து குமார சேதுபதி ஆகியோர் வழங்கினர். இன்றும், அந்த தர்மங்கள் தொடருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில். பெரும்பாலும் சேது நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் நெசவாளர்களாக இருந்தனர் என்பதை சேதுபதிகளது பிற செப்பேடுகளில்” நமது காவல்குடியான துலுக்கர் போட்டால் தறியொன்றுக்கு ஒரு பணமும்" என்ற தொடர்கள்[10] விளங்குகின்றன. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள புனித சாகுல் ஹமீது ஆண்டகை அவர்கட்கு மராட்டிய மன்னர் துல்ஜாஜி 1753ல் கிராமங்களை வழங்கிய செப்பேடுகள் மோடி மொழியில் உள்ளன. அந்த கட்டத்தில் நெல்லை மதுரை மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் இதர பிரிவினர்களுடன் இணைந்து பொதுநலனில் அக்கரை கொண்டர்களாக இருந்தனர் என்பதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெத்திலைக் குண்டு, குற்றாலம் ஆகிய ஊர்களது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[11]
இந்தச் செப்பேடுகளில் இங்கு குறிப்பிடத்தக்கவை கி.பி. 1738ல் இராமேசுவரம் ஆபில் காபில் தர்காவிற்கும் இ.பி. 1745 ல் ஏறுபதி சுல்தான் சையிது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்களது தர்காவிற்குமாக வழங்கிய சர்வமானிய நிலக் கொடைகள் பற்றியவை. அவைகளை வரலாறு புகழ வழங்கியவர் அப்பொழுது இராமநாதபுரத்தில் அரசோச்சிய சைவத்துரை என வழங்கப்பட்ட முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி மன்னராவர். இராமேஸ்வரம் தர்காவிற்கு பக்கிரிபுதுக்குளம் என்ற பேரூரை நிவந்தமாக வழங்கும் அந்தப் பட்டயம். தமிழக இசுலாமியரது சுய உணர்வுகளை மன்னர் நன்கு அறிந்து இருந்ததும் மேலே கண்ட செப்பேடுகளில் வாசகங்களிலிருந்து புலப்படுகிறது தமிழகச் செப்பேடுகளின் சொற்றொடர் அமைப்பில் இங்ஙனம் ஒரு புதிய பாணியையும் இந்த மன்னர் உருவாக்கி உதவி இருப்பதையும் இந்த வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இதுவரை இங்கு குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத காலகட்டத்தில், அந்நியர்களாக இந்த தமிழ் மண்ணில் அடியெடுத்து வைத்த சிறு பிரிவினரான இஸ்லாமியர், ஒருசில நூற்றாண்டு காலத்தில் இந்த மண்ணின் மணத்துடன் மலர்ந்து, மக்களுடன் கலந்து, இந்த மண்ணின் மைந்தர்களாக, மகிபதிகளாக, மொழி, அரசியல் பண்பாடு, ஆகிய துறைகளில் உயர்ந்த நின்ற 
வித்தையை விளங்க வைக்கும் கருவூலங்களாகக் காட்சி அளிக்கின்றன. பொதுமக்களது கவனத்தினின்றும், வரலாற்று ஆசிரியர்களது ஆய்வுகளினின்றும் தொடர்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்தால் தமிழக இஸ்லாமியரது வரலாறு மட்டுமின்றி, தமிழகத்தின் உண்மையான வரலாற்றையும் வெளிக்கொணர முடியும் என்பதில் ஐயமில்லை.
 

 

↑ A. R. 598/1926 தீர்த்தாண்டதானம்

↑ A. R. 77/1905 கோரிப்பாளையம்.

↑ A. R. 402 / 1903 திருப்புல்லாணி

↑ A. R. 112 / 1905 மன்னர்கோவில்

↑ A R 642 / 1902 திருக்களர்.

↑ A. R. 311 / 1964 - வீரபாண்டியன் பட்டினம்

↑ திருக்கோலக்குடி கல்வெட்டு

↑ ராங்கியம் கல்வெட்டு

↑ பனையூர் (புதுக்கோட்டை) கல்வெட்டு

↑ சேதுபதி மன்னர் செப்பேடுகள் 

↑ Antiques – vol I