Get it on Google Play
Download on the App Store

அரசியல் முதன்மை

 

 

←வணிகம் வந்த வழியில்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்அரசியல் முதன்மை

இஸ்லாமிய அமைச்சர்கள்→

 

 

 

 

 


437584முஸ்லீம்களும் தமிழகமும் — அரசியல் முதன்மைஎஸ். எம். கமால்

 




10
அரசியல் முதன்மை

 

மூவேந்தர்களின் ஆட்சியில் தமிழகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகர்களுக்கு ஆதரவும் ஊக்குவிப்புகளும் இருந்து வந்தன. கொடுமனம், பந்தர், முசிறி, கொற்கை, புகார் போன்ற பட்டினங்களின் செல்வச் சிறப்பிற்கு ஆதாரமான வணிகத்தை பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, பத்துப்பாடல் ஆகிய சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. கல்வெட்டுக்களிலும் அந்த வணிகச் சாத்தினர், மணிக்கிராமம், அஞ்சுவண்ணம், நானா தேசிகள், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், வலஞ்சியர், எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களது வணிகம் தங்கு தடையின்றி நடைபெற அரசியலார் அவர்களுக்கு எல்லா வித வசதிகளையும் வழங்கியதுடன், அரச அவைகளில், எட்டி, ஏனாதி ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தினர். அதன் காரணமாக வெளிநாட்டு வணிகர்கள் அரசியலில் தீவிர பங்கு கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இத்தகைய வணிகரில் ஒருவரான துருக்கன் அகமது முதல் ராசராசனது அவைக்களத்தை அலங்கரித்த முக்கியமான இஸ்லாமிய அரசியல் தலைவர் என்பதை ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.[1] இவரைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்து ராஜராஜ வித்யாதரப் பெருந்தெருவைச் சேர்ந்த சோனகன் சாவூர் முதலாம் ராஜேந்திர சோழனின் திருமந்திர ஓலை நாயகனாக விளங்கியதை கோலார் கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், அதே மன்னனது இருபத்து நான்காவது ஆட்சியாண்டைக் குறிக்கும் மன்னார் கோவில் கல்வெட்டு, அந்தப்பெருமகனை "ராஜேந்திர சோழ கந்தர்வப் பேரரையன்" என பெருமிதத்துடன் சுட்டுகிறது.[2] இங்ஙனம் சோழப் பேரரசின் அரசியலில் முதன்மை பெறத் துவங்கிய இஸ்லாமியர் என்ன காரணத்தினாலோ குலோத்துங்கனது ஆட்சியில் வெறுப்பையும் வீழ்ச்சியையும் பெற்றதை சிதம்பரம் கோயில் கல்வெட்டுக்களில் இருந்து ஊகிக்கமுடிகிறது. அந்தக் கோயிலின் திருப்பணிகளைத் திறம்பட நிறைவேற்றிய சோழ சேனாபதி நரலோகவீரனைப் பற்றிய புகழ்ச்சிக் குறிப்புகளில் ஒன்று. அவனது கொல்லம் படையெடுப்பு பற்றியதாகும் இந்த நிகழ்ச்சி குலோத்துங்க சோழனது இருபத்து எட்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1996) நிகழ்ந்தது.[3] அன்று வேணாடு என வழங்கப்பட்ட கொல்லம், சோழப்பேரரசின் ஒரு பகுதியா விளங்கியது என்பதும், அங்கு இஸ்லாமியர்கள் அப்பொழுது பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்பதும் தெளிவு. இந்த படையெடுப்பின் காரணத்தை வரலாறு வழங்காவிட்டாலும் அதனால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதனை அதே கல்வெட்டு கூறுகிறது.[4] "... ... ... பஞ்ச பாண்டியர்களை அடக்கி ஒடுக்கிய புகழ் வாய்ந்த குலோத்துங்கனது பெரும்படை இந்தப்போரில் (கொல்லம்) எதிரிகளை சிதறியோடச் செய்த வெற்றிச் சிறப்பை எதிர்க்கரையில் உள்ள பாரசிகர் நாட்டு இளம் பெண்களும் பரவிப் பாடுவர்." ... ... ... இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கி. பி. 1323 இல் மதுரையில் நிறுவப்பட்ட இஸ்லாமியர் ஆட்சியைக் குறிப்பிடும் மதுரைத் தல வரலாறு "... ... ... கொல்லம் அழிந்து 226 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது சகம் 1246 (கி. பி. 1324) இல் ருத்ரோகரி ஆனி மாதம், பராக்கிரம பாண்டியன், என்பவர் ஆட்சி செலுத்தும் பொழுது நேமி என்று அழைக்கப்பட்ட டில்லி ஆதி சுல்தான் முல்க் நாட்டைக் கைப்பற்றினார் ... ... ..." எனத் தொடர்கிறது.[5] இந்த நிகழ்ச்சி சாலிவாகன சகாப்தம் இன்ன வருடம், இன்ன மாதம் இன்ன நாளில் என்று மட்டும் குறிப்பிடாமல் "கொல்லம் அழிந்த 227 ஆண்டுகளுக்குப் பிறகு" என்று விளக்கம் கொடுப்பதிலிருந்து இஸ்லாமியர்கள் மதுரையைக் கைப்பற்றிய இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இஸ்லாமியர்கள் கொல்லத்தைக் கைப்பற்றி இருந்தனர் என்பதை சூசகமாகக் குறிப்பிடும் நோக்கத்துடன் தான் "கொல்லம் அழிந்த 227 ஆண்டுகளுக்குப் பிறகு" என்ற தொடரும் இந்த வரலாற்றுக் குறிப்பிலே சேர்க்கப்பட்டுள்ளது.[6] பாண்டிய மன்னர்களது தலைநகரான மதுரையில் இஸ்லாமியர்களது செல்வாக்கு அரசியலில் மிகுந்து வந்தது. கி. பி. 1182 இல் மதினத்திலிருந்து பாண்டிய நாடு வந்த இஸ்லாமியப் பிாச்சாரகரான புனித ஸையது இபுராஹீம் (ஷஹீது) அவர்கட்கு கொற்கையில் ஆட்சி புரிந்த குலசேகா பாண்டியன் எல்லா வசதிகளையும் வழங்கியதுடன், தனது ஆட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த தனது தாயாதிகளை அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான். இதனை அறிந்த மன்னன் திருப்பாண்டியன், அஞ்சியவனாக மதுரையை விட்டே ஓடிவிட்டான். புனிதர் சையது இபுராகீம் அவர்களது தொண்டர்கள் மதுரையைக் கைப்பற்றினர். மதுரைக் கோட்டையும் அதன் சுற்றுவட்டாரத்து சீமையும் தளபதி அமீர் இஸ்கந்தர் என்பவரது நிர்வாகத்தில் பல ஆண்டுகள் இருந்து வந்தன.[7] திருப்பரங்குன்ற மலையின் உச்சியில் உள்ள பள்ளியின் பக்கத்தில் இவரது அடக்க இடம் அமைந்துள்ள காரணத்தினால் மக்கள் அந்த மலையை சிக்கந்தர் மலை யென்றும், அங்குள்ள பள்ளியை சிக்கந்தர் பள்ளி என்றும் வழங்கி வருகின்றனர். ஆனால் வரலாற்று நூலாசிரியர் டாக்டர் ஹீசைனி, மதுரை சுல்த்தான்களில் இறுதியாக கி.பி. 1372-73ல் அரியணை ஏறிய விஜய நகர இளவல் குமார கம்பனனால் கொல்லப்பட்டவருமான சுல்தான் சிக்கந்தர் ஷாவின் அடக்கவிடம் அது என குறித்துள்ளார்.[8] இந்த அடக்கவிடத்தை கி.பி. 1762 ல், மதுரை ஆளுநராக இருந்த கம்மந்தான் கான்சாகிபு அழகிய தர்காவாக அமைத்து உதவினர்.[9] அத்துடன் அதற்கு அண்மையில் உள்ள தணக்கன் குளம் கிராமமும் இந்த தர்காவின் பராமரிப்பிற்கு தானமாக வழங்கப்பட்டது.
அந்த கால கட்டத்தில், கிழக்கு இராமநாதபுரம் சீமையின் தென்கிழக்குப் பகுதியை ஷஹீது அவர்கள் விக்கிரம பாண்டியனிடமிருந்து கைப்பற்றி தமிழகத்தில் முதன்முறையாக, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கிணங்க மக்கள் ஆட்சியை நிறுவினார்கள். இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. வடக்கே ஓடிப்போன திருப்பாண்டியன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயாதிகளுடைய படைபலத்துடன் நாடு திரும்பினான். புனித ஷஹீது அவர்கள் முதுமைப் பருவமுற்றவர்களாக இருந்ததுடன், திருப்பாண்டியனைச் சமாளிக்கும் வகையில் அவர்களிடம் போதிய படைபலமும் இல்லை. என்றாலும், ஏறுபதி அருகே நடந்த வீரப்போரில் ஷஹீது அவர்கள் பாண்டியனை வெட்டி வீழ்த்தியதுடன் தாமும் வீரமரணம் எய்தினார்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் கி.பி. 1196 இல் நடைபெற்றது.[10] தமிழக வரலாற்று ஆசிரியர்களின் வரலாற்று நூல்களில் இந்தப்போர் பற்றிய சிறு குறிப்பைக்கூட காணமுடிய வில்லை. இத்தகைய இருட்டடிப்பிற்கு, காலம் தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் பெரியபட்டினம், வாணி, வைப்பாறு, வாலிநோக்கம், காட்டுப்பள்ளிவாசல், புல்லந்தை, ஏறுபதி ஆகிய ஊர்களில் தொடர்ச்சியாகக் காணப்படும் நூற்றுக்கணக்கான மீஸான்களுடன் கூடிய அடக்கவிடங்களும் ஷஹீது அவர்கள். அவர்களுடைய தொண்டர்கள் குறிப்பாக அப்பாஸ், ஷம்ஷீத்தீன் உமையா, இஸ்உறாக் (ஷறஉறீதுவின் புத்திரர்) இம்ரான் ஆகி யோர்களது அடக்கவிடங்களும், எழுச்சிமிக்க அந்த இறைநேசர்கள் தங்களது தியாகத்தால் வரைந்த தமிழக வரலாற்றை மக்களுக்கு என்றும் நினைவூட்டுவனவாக உள்ளன. இந்த தியாகிகளது புகழ் வாழ்க்கையை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் அவர்கள், காலத்தால் வாடாத கவி மலர்களாக,  பாடியுள்ளார்கள்.[11] தமிழகத்தில், ஷஹீது அவர்கள் மிகவும் குறுகிய கால வாழ்ந்த பொழுதிலும், அவர்களது தொண்டும் அரசியலும் தமிழ் மக்களையும் பிற்கால தமிழக ஆட்சியாளர்களையும், மிகவும் கவர்ந்து விட்டன. அதன் விளைவு தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு நல்ல வாய்ப்பும் சூழ்நிலையும் ஏற்பட்டன. மத மாற்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமியர் அல்லாதவரும் ஷஉறீது அவர்களை, ஆத்ம சுகம் வழங்கக்கூடிய ஞான குருவகக்கருதி காலமெல்லாம் போற்றி வருகின்றனர். இதனை அடுத்து இஸ்லாமியத் தலைவர்களை தங்களது ஆட்சிக்கு அரண் செய்யும் அமைச்சர்களாக, தளபதிகளாக, அரசியல் தூதுவர்களாக வரித்துக் கொள்ளும் வாய்ப்பும் தமிழகத்தில் வலுப்பெற்றன.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் சோழப் பேரசின் வீழச்சிக்கு கோடிட்டது. பராந்தக சோழன் முதல், மூன்றாம் குலோத்துங்கன் வரையான சோழ மன்னர்கள்-இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பாண்டியர்களுக்கிழைத்த பெரும் பழியை நீக்கினான் முதலாவது மாறவர்மன் சந்தரபாண்டியன் (கி.பி. 1216-38) இவனது ஆட்சிக்காலத்தில் பாண்டியப் பேரரசி வடக்கே வாரங்கல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் வரை பரவியது. இதனுடைய வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் குதிரைப்படை இன்றியமையாததாக இருந்ததால் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் குதிரைகள் ஆயிரக்கணக்கில் தரவழைக்கப்பட்டன. அதே மன்னனது ஆட்சிக்காலத்தில் சீனத்தில் இருந்து இலங்கை வழியாக, பாண்டிய நாடு போந்த உலகப் பயணி மார்கோ போலோவின் பயணக் குறிப்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.[12]
 

 

↑ நடன காசிநாதன் — கல்வெட்டு ஒரு அறிமுகம் (1976) பக்கம் 33

↑ AR, 12/1905 — (மன்னார் கோயில்)

↑ Nilakanta Sastri K.A - Studies in Chola History and administration

↑ Epigraphica India. vol. v. p. 103 

↑ 15. மதுரைத் திருப்பணி மாலை-மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு (1932)

↑ சுப்பிரமணியன் க.நா. - தென்னிந்திய கோயில் சாசனங்கள் பகுதி 2 பக். 77. தொகுதி III 

↑ முகமது இப்ராஹிம் லெப்பை-ஷஹீது சரிதை (1953)

↑  Hussaini.Dr.S.A.O – History of Pamdia country (1963) p.p.111

↑ துர்க்காதாஸ் ஸ்வாமி-கம்மந்தான் கான் சாகிபு (1960)பக்கம் - 83

↑ முகமது இபுறாகிம் லெப்பை ஷஹீது (1953) பக்கம் 142–4

↑ வண்ணக்களஞ்சியப் புலவர் – தீனெறி விளக்கம் (1898)

↑ Marcobolo — vol II. p. 324