Get it on Google Play
Download on the App Store

இஸ்லாமிய அமைச்சர்கள்

 

 

←அரசியல் முதன்மை

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்இஸ்லாமிய அமைச்சர்கள்

தில்லியும் தமிழ்நாடும்→

 

 

 

 

 


437585முஸ்லீம்களும் தமிழகமும் — இஸ்லாமிய அமைச்சர்கள்எஸ். எம். கமால்

 

 


11
இஸ்லாமிய அமைச்சர்கள்

 

அரபு நாட்டுக் குதிரைகள் பத்திரமாகக் கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் அன்றைய துறைமுகங்களான கபில் (காயல்) பத்தன் (பெரியபட்டினம்) மாலிபத்தன் (தேவிபட்டினம்) ஆகிய கடற்துறைகளில் கரை இறக்கப்பட்டன. இதனைக் கண்காணிப்பதற்கான அமைச்சு ஒன்று இயங்கி வந்தது.[1] இந்த வணிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த கிஸ்நாட்டு அதிபதியான ஜமால்தீன் என்பவர் மாறவர்மன் குலசேகரன் பாண்டியரது பெருமதிப்பிற்குரியவராக விளங்கினார். இவர் தமது ஒன்று விட்ட தமையனாரன ஜக்கியுதீனை வணிகத்துறை அமைச்சராக பணி புரியும்படி ஏற்பாடு செய்தார். இவர்களது குடும்பத்தினரும், கிளையினரும், பாண்டிய நாட்டு அரசியலில் தொடர்ந்து பல்லாண்டு காலமாகப் பெரும் பங்கு பெற்று இருந்தனர். மூவாயிரம் மைல் தொலைவில் உள்ள வளைகுடா நாட்டில் இருந்து தமிழகம் வந்த இஸ்லாமியர், தமிழ்ச் சமுதாயத்தில்-அரசியல், நிர்வாகத்தில், எத்தகைய சிறந்த, உயர்ந்த, நம்பிக்கைக்குரிய பொறுப்புக்களுக்கு உரியவர்களாக உயர்த்தப் பட்டிருந்தனர் என்பதை வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப், ரஷீத்தின் ஆகியோர்களது குறிப்புக்களைப் படிக்கும் பொழுது வியப்புத்தான் விஞ்சி நிற்கிறது.
சுல்தான் ஐக்கியத்தின் அப்துல் ரகுமான் என்ற மதினத்து பிரமுகர் பாண்டியனது பிரதான அமைச்சராக விளங்கினார். அவரது நல்ல பண்புகளும், செயல்முறைகளும், தீர்க்கமான தீர்ப்புக்களும், பாண்டிய நாட்டுப் பெருந் தலைவர்களது புகழ்ச்சிக்கு பாராட்டுதலுக்கும் உரியவையாக பல காலம் நிலைத்து நின்றன.[2] காயலில், அவரது பெயரைக் குறிப்பிட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையின் பொழுது, குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. கி.பி. 1293இல் பாண்டிய மன்னன் இறந்தபிறகு, அவர் தொடர்ந்து பிரதம அமைச்சராக விளங்கினார். இதனால் அவர் ஒரு சில காலம் அந்தப் பகுதியின் மன்னராக இருந்தார் என வரலாற்று ஆசிரியர் லஸ்ஸாப் மிகைப்பட வரைந்துள்ளார் அதன் காரணமாக அவரது சிறப்பும் செல்வாக்கும் ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டதாகவும் அவர் குறித்துள்ளார். இதற்கான வேறு ஆதாரம் எதுவும் இல்லை. அப்பொழுது பாண்டியனது சிறப்பான துறைமுகங்களாக காயல்பட்டினம், பெரிய பட்டினம், தேவிபட்டினம் ஆகிய மூன்று துறைகளது செயல் பாடுகள் இந்த அமைச்சரது பொறுப்பில் இருந்தன. சீனம் ஸயாம் நாட்டு புதினப்பொருட்களும், இந்துஸ்தானத்தின் கைவண்ணமிக்க பொருட்களும், நிறைக்கப் பட்ட பெரிய கலங்கள், இறைக்கைகள் பொருத்தப்பட்ட சிறிய குன்றுகளைப் போன்று நீரில் மிதந்தவாறு இந்த துறைகளுக்கு வந்து போய் கொண்டிருந்தன.
சுல்தான் ஐக்கியுதீனின் ஒன்றுவிட்ட தமையனாரான மாலிக்குல் இஸ்லாம் சுல்தான் ஜமாலுத்தீன், துவக்கத்தில் ஆண்டு தோறும் தம்மிடமுள்ள புகழ்வாழ்ந்த இனக் குதிரைகளுடன் கிஸ் நாட்டில் இருந்து கப்பலேறி பாண்டிய நாடு வந்து போய் கொண்டிருந்தார். வருடந்தோறும் இறக்குமதியாகும் பதினாயிரம் குதிரைகளில் அவரது சொந்தக் குதிரைகள் மட்டும் ஆறில் ஒரு பகுதியாகும். நாளடைவில் இவரும் பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கிவிட்ட பொழுதும், அவரைச் சார்ந்த வர்த்தகர்கள், பாரசீக நாட்டைச் சேர்ந்த காத்தீப், லஹ்ஷா, பாஹ்ரைன் ஹீர்முஸ், குல்கத்து ஆகிய ஊர்களில் இருந்து குதிரைகளையும் அவைகளை பத்திரமாக பாதுகாத்து கரை இறக்க பழக்கப்பட்ட அரபிகளையும், தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.[3] அவ்விதம் தரவழைக்கப்பட்ட குதிரை ஒன்றில் கிரயத்தொகை 220தினர் பொன்னாகும். பயணத்தின் பொழுது இந்தக் குதிரைகளுக்கு காயம் ஏற்பட்டாலும், சாவு சம்பவித்தாலும், அதற்கான கிரையத்தை பாண்டியனது கருவூலத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஒப்பந்த நிபந்தனை, பொதுவாக இந்தக் குதிரைகள், இந்து அற நிலயங்கள், ஆலயங்களுக்கு நிறுவப்பட்ட அறக்கொடைச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் மேலதிக வருமானம் தொகையினின்றும், அந்தச் சொத்துக்களை சார்ந்தோர் செலுத்தும் இறைகளில் இருந்தும் வாங்கப்பட்டன. அரசாங்கத்தின் செலவில் இந்த இனம் சேர்க்கப்படவில்லை.[4]
இந்தக் குதிரை ஒன்று ஐநூறு தினார் பொன் வீதம் வாங்கப்பட்டதாக உலகப் பயணி மார்க்கோ போல வரைந்துள்ளார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டிற்கு வந்த அந்தப் பயணி காயலுக்கு வருகை தந்தார். அங்குள்ள பாண்டிய மன்னருக்கு நான்கு சகோதரர்கள் இருந்ததாகவும், அவர்களும் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் ஆட்சி புரிந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர் காயல் மன்னன் தமது சகோதரர்களைப் பொன்றே வருடந்தோறும், 2000க்கு அதிகமான குதிரைகளை வாங்கினார் என்றும் வரைந்துளளார். ஆனால் வருட முடிவில் நுாறு குதிரைகள் கூட எஞ்சி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[5] காரணம் நிர்வாகக் குறைபாடும் குதிரைகளை அக்கரையுடன் சிறப்பாகப்பாக  பராமரிக்க தவறியதும் ஆகும். குதிரைகளுக்கு இலாடம் பூட்டும் பணியாளர் கூட அப்பொழுது தமிழ்நாட்டில் இல்லை என்பதாக அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஆசிரியர் வஸ்ஸாப் சொல்லும் காரணம், . . . . . இந்தக் குதிரைகள் கரை இறக்கப்பட்டவுடன் அவைகளுக்கு பார்லி தானியத்தை அப்படியே கொடுப்பதற்குப் பதிலாக அதனை வறுத்து தயிருடன் சேர்த்துக் கொடுத்தனர், சூடான பசும்பாலும் கொடுத்தனர். இலாயத்தில் நாற்பது நாட்கள் கட்டிப்போட்டு அவைகளைக் கொழுக்கச் செய்தனர். பிறகு, அவைகளுக்குப் போதுமான பயிற்சி அளிக்காத நிலையில் போர் வீரர்கள் அவைகளின் மீது பிசாசுகளைப் போல் ஏறி அமருவர். இந்தக் காரணங்களினால் மிகவும் வலுவான வேகமான, துடிப்பான குதிரை கூட சிறு காலத்திற்குள்
பலவீனமாகவும், சோம்பலுடையதாகவும் பயனற்றதாகவும் மாறி விடுகின்றன. இந்த நாட்டுக்கால நிலையில், சாட்டையின் சாடுதல் இல்லாமல், பாய்ந்து செல்லக்கூடிய வன்மைமிக்க இந்தக் குதிரைகளை, இலாயத்தில் நிழலான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவை பலவீனமுற்று சவாரிக்கு தகுதியற்றதாகி விடுகின்றன . இதன் காரணமாக ஆண்டு தோறும் புதிய குதிரைகளுக்கான தேவை எழுகிறது. இஸ்லாமிய நாட்டு வணிகர்கள் அவைகளை கொண்டு வருகின்றனர்" என அவர் வரைந்துள்ளார்.[6]
சுல்தான் ஜமால்தீன் வளம் சேர்க்கும் வணிகத்தில் மட்டு மல்லாமல், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகியவை எஞ்சாதிருக்கும் அரசியலில் சிறப்புற்று விளங்கினார். "தம்மில்பெரி யார் தமரா ஒழுகுதல், வன்மையில் எல்லாம் தலை” என்றபொது மறைக்கேற்ப, பாண்டியன் குலசேகரன் சுல்தான் ஜமால்தீனிடம் அரசியல் பணிகளில் உதவிகளை அவாவினார். அப்பொழுது ஈழத்திற்கு அனுப்பப்பட்ட பாண்டியப் படையணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஈழத்திலிருந்து தமிழர் தளபதிகளான காலிங்கராயர், சோழகங்கன் ஆகியோர்களையும் பாண்டிய நாட்டு கரையிலிருந்து எதிர்கரையான ஈழ நாட்டிற் இயல்பாகச் சென்ற தமிழர்களை துரத்தியடித்த சிங்கள அரசர் புவனேக பாகுவைப் பொருதுவதற்காக பாண்டிய நாட்டுப் படைகள், கிழக்குக் கடற்கரை பட்டினம் ஒன்றிலிருந்த கப்பல்களில் புறப்பட்டன. அவை ஈழத்தையடைவதற்குள்ளாக மன்னர் புவனேகபாகு இறந்துவிட்டார். நாட்டில் அராஜகமும் பசிப் பிணியும் நிலவின. இந்தச் சூழ்நிலையில் சுல்தான் ஜமால்தின் ஈழத்தின் உறுதி மிக்க சுபகிரி கோட்டையைக் கைப்பற்றி அதனை நாசமுறச் செய்ததுடன் அங்கு புனிதப் பொருளாக காக்கப்பட்டு வந்த புத்தபிரானது பல்லையும் ஏனைய கொள்ளைப் பொருட்களையும் கவர்ந்து வந்து பாண்டியனிடம் ஒப்படைத்தார்.  பாண்டியனும் "கதிரவனைக் கண்ட தாமரை போல மகிழ்ச்சி அடைந்ததாக" இலங்கை வரலாறான மகாவம்சம் விவரித்துள்ளது. அத்துடன், சுல்தான் ஜமால்தீனை ஆரிய சக்கரவர்த்தி எனவும் தமிழர்களில் தலைசிறந்தவர் என்றும் அந்நூலில் குறித்துள்ளது.[7]
“ஆரியச் சக்கரவர்த்தி” என்று விருது, அந்த கால கட்ட அரசியலில், தளபதிகளுக்கு வழங்கப்பட்டதொரு சிறப்புப் பட்டமாகும். இதனை, 13 வது, 14வது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்புல்லானி திருக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[8] சுல்தான் ஜமால்கீனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது.[9] கல்வெட்டு ஒன்றில் பாரசீக மன்னர் ஷாவிற்கு "ஆசியா" என்ற பட்டம் இருந்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. பாண்டியப் பேரரசர் குலசேகரரிடமிருந்து இந்த ஆரியச் சக்கரவர்த்தி, ஆனையொன்றைப் பெற்றது விவரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு இலங்கை வரலாற்று நூல் இந்த ஆரியச் சக்கரவர்த்தி, பாண்டிய நாட்டில் இராமேசுவரத்தை அடுத்த பகுதியை ஆண்ட குறுநில மன்னர் எனவும் பெரிதுபடுத்திக் குறித்துள்ளது.[10] வணிகத்தின் மூலம் எய்திய செல்வத்தைத் தவிர்த்து கீழ்க்கோடி நாடான சீனத்தினின்றும். இந்துஸ்தானத்தின் வடபகுதிகளிலிருந்தும், மாபார் என வழங்கப்பட்ட தென் தமிழகத்தின் தேவைக்கு எந்தவிதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படல் வேண்டும் என்பதற்கான கட்டளைகளை சுல்தான் ஜமால் தீன் வழங்கி வந்தார். தரவழைக்கப்பட்ட பொருட்களை அவரது முகவர்கள் முதலில் தேர்வு செய்த பிறகு எஞ்சியவற்றை மற்றவர்கள் விலைக்கு வாங்க இயலும் அவ்விதம் தேர்வு பெற்ற பொருட்களை அவரது கப்பல்களில் அல்லது பிறரது வாணிபக்கலங்களின் மூலம் மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதனைப் போன்றே மாபாரின் பண்டங்களும் மாலிக்-குல்-இஸ்லாமினால் தேர்வு செய்யப்பட்டு எஞ்சியவை கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவைகளின் மூலம் சம்பாதிக்கப்பட்ட செலாவணியைக் கொண்டு உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்கள் அந்த நாடுகளில் வாங்கப்பட்டன. உலகின் கடைக்கோடி நாடான சீனத்தின் பொருட்கள் மேற்கு கோடி மூலையில் உள்ள நாடுகளில் பாவிக்கப்பட்டன. இத்தகைய முறையான தொடர் வாணிகம் அதுவரை யாராலும் திறம்பட மேற்கொள்ளப்பட வில்லையென வஸ்ஸாப் வரைந்துள்ளார்.[11] கிழக்கும், மேற்கும் கொண்டிருந்த இத்தகைய உலகம் அளாவிய கடல் வணிகத்திற்கு வித்திட்டவர்கள் இந்த தமிழ்நாட்டு அரபு முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாததாகும். அவர்களின் வழித்தோன்றல்கள் இந்த வாணிக முறையை பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கப்பகுதி வரை மேனாட்டாரும் வியக்கும். வண்ணம் காயல், கீழக்கரை, தொண்டி, தேவிபட்டி னம், நாகப்பட்டினம் ஆகிய துறைகளில் தொடர்ந்து ஒழுகி வந்தனர். இவர்களில் சிறந்து விளங்கிய செம்மல்களான சீதக்காதி மரைக்காயர், அப்துல் காதிர் மரைக்காயர் ஹபீப் மரைக் காயர் பற்றிய வாணிப வளம், வள்ளண்மை, வாழ்க்கை ஆகியவை, வரலாற்று இதழ்களில் வாடாத மலர்களாக இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் சீனத்தில் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பேரரசர் குப்ளாய்கானது அரசவைக்கு அரசியல் தூதுவராக செல்ல வேண்டிய சூழ்நிலை சுல்தான் ஜமாலுத்தீனுக்கு ஏற்பட்டது. அன்புடைமை, ஆன்ற குடிப்பெருமை, வேந்தன் விரும்பும் பண்புடைமை, ஆகிய துதுக்குரிய இலக்கணம் அனைத்தும் அவரிடம் அமைந்து இருந்ததை நன்கு உணர்ந்த பாண்டியன் மாறவர்மன் குலசேகரன், இந்த வணிகப் பெருமகனை நகச்சொல்லி நன்றி பயக்கும் தூதாகக் கொண்டதில் வியப்பில்லை. கி.பி. 1279 ல் சீனம் சென்ற இவர் பேரரசர் குப்ளாய்கானது விருந்தோம்பலில் திளைத்தவராக பத்துமாதங்கள் தங்கிவிட்டு காயல் திரும்பினார்.  தொடர்ந்து அவரும் அவரது மக்களும் இந்தப் பணியில்  பாண்டியனுக்கு உதவியதை யுவாங்ஷிங் என்ற சீன நூல் வரைந்துள்ளது.[12] இவர்களது பணியில் பாண்டியனைப் போன்று மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டார் பேரரசர் குப்ளாய்கான். இதனால் தனது "மருமகன்" என்று பொருள்படும் "பூ-மா" என சீன மொழியில் பாண்டியனை உறவு கொண்டாடி வந்தார்.[13] இவ்விதம் சீனமும் தமிழகமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அன்று, நெருக்கமான, இயல்பான மனித உணர்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்ததை எண்ணும்பொழுது, நமது நெஞ்சம் நெகிழ்வு பெறுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எய்திய சாதனையை இருபதாம் நூற்றாண்டு அரசியலில் எய்த இயலவில்லை!
பாண்டிய நாட்டிலிருந்து அரசியல் தூதுக்குழுக்கள் கி.பி. 1279, 1280, 1282, 1283, 1284, 1286, 1288, 1290, 1301 மற்றும் 1314 ஆகிய ஆண்டுகளில் சினம் சென்று வந்தன.[14] கி.பி. 1301ல் சுல்தான் ஜமால்தீனது மகன் பக்ரூதீன் அகமது என்பவர் சீனம் சென்று நான்கு ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய பின் தாயகம் திரும்பினார். வழியில், கரையை எட்டுவதற்கு இரண்டு நாட்கள் பயணத் தொலைவில், கப்பலில் இறந்து போனார், கிழக்கு இராமநாதபுரம் கடற்கரையில் சுந்தரமுடையான் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள சீனியப்பா தர்கா என்ற தலம் அவரது அடக்கவிடமாக இருக்க வேண்டுமென ஊகிக்கப்படுகிறது.[15] இவரது மைந்தர் நிஜாமுத்தின் கி.பி. 1341ல் பாண்டிய நாட்டின் கடைசித் தூதுவராக சீனத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது இன்னொரு மைந்தரான ஸிராஜ் தக்கியுத்தீன் பத்தனில் (பெரியபட்டினம்) பெரும் வணிகராகவும், பாண்டிய மன்னரது வணிகப் பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய ஜக்காத்தை(தானம்), — மொத்த இருப்புச் சொத்தின்  பெறுமானத்தில் இரண்டரை சதவீத மதிப்புத் தொகையை ஆண்டிற்கு ஒருமுறை வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் வழங்கிவந்தார் என பாரசீக காப்பியமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[16] சிறப்பான வகையில் செல்வமும் செல்வாக்கும் பெற்று இருந்தும், சமயத்தைப் பேணுவதிலும், அன்றறிவாம் எண்ணாது அறஞ் செய்யும்" ஆற்றலும் பெற்று இருந்த அவரது அரிய பண்பினை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அதனை அடுத்து சகோதர சண்டைகளினால், பாண்டியப் பேரரசு பலவீனமடைந்தது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த இஸ்லாமியரது நெருக்கமும், பிடிப்பும் தளர்ந்தது. தில்லிப் பேரரசின் தலையீடு அதனை உறுதிப்படுத்தியது.
 

 

↑ Krishnasamy Ayyangar. Dr. S.—South India and her Moham madan Invaders (1921) P.P. 70-71.

↑ Yule Cordier - Travels of Marcopolo - Book ||| chap - XIV 

↑ Wassaff - Elliot and Dowson – VOL ||| P.32

↑  Ibid. P. 33

↑ Nilakanta Sastri — K.A. – Foreign Notices of S. India(1972) р.167

↑ Wassaff — Elliot and Dowson – Part II P.314.15

↑ Nicholos and Paranavitana-Concise History of ceylon(1960)

↑ A. R 11 O. 113/1903

↑ Srinivasa Ayangar Dr.S-South India and har Mohammadan Invaders (1921) P.57.

↑ Nicholos and Paranaviathana - Concise History of ceylon (1961) p. 289.

↑ Nilakanta sastri K.A. – Foreign Notices of South India (1952)p. 189.

↑ Nilakanta Sastri K.A. - Foreign Notices of South India (1972) p. 150

↑ Ibid — 153

↑ Ibid — 154

↑ Krishnasamy Iyanger Dr. S.K. – South India and Her Mohammedan Invaders (1921) p. 193.

↑ Futuhus Salatin of Isami - (English Trans) vol II Aligarh 1977 verses, 7037-39