Get it on Google Play
Download on the App Store

அநிருத்தப் பிரமராயர்

 

 

←அத்தியாயம் 9: "இது இலங்கை!"

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: அநிருத்தப் பிரமராயர்

அத்தியாயம் 11: தெரிஞ்ச கைக்கோளப் படை→

 

 

 

 

 


348பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: அநிருத்தப் பிரமராயர்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 10[தொகு]
அநிருத்தப் பிரமராயர்


இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான் நம்பியைக் கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டு விட்டோம். அதற்காக நேயர்களிடமும், நம்பியிடமும் மன்னிப்புக் கோருகிறோம். முக்கியமாக நம்பியின் மன்னிப்பை இப்போது நாம் கோரியே தீரவேண்டும். ஏனெனில் ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அவனுடைய கைத்தடியோ தலைக்கு மேலே சுழன்றுகொண்டிருக்கிறது. அவனைச் சுற்றி ஆதி சைவர்களும், வீர சைவர்களும் பலர் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டம் பலமாக இருப்பதால், ஆழ்வார்க்கடியானுடைய கதி யாதாகுமோ என்று நமக்குக் கொஞ்சம் கவலையாகவுமிருக்கிறது. எனினும் நம்பியின் நரசிம்மாவதாரத் தோற்றமும், அவனுடைய கைத்தடி சுழலும் வேகமும் அந்தக் கவலையைப் போக்குகின்றன. 
வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான் பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயு வேக மனோ வேகமாகத் தென்திசையை நோக்கிச் சென்றான். வழியில் எங்கும் அவன் சைவ வைஷ்ணவச் சண்டையில் இறங்கவில்லை. காரியத்துக்குத் குந்தகம் வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான். மதுரையில் சிறிது நேரம் தங்கினான். அங்கு அவன் அறிய விரும்பிய செய்தியை விசாரித்து அறிந்து கொண்டு இராமேசுவரத்துக்குப் புறப்பட்டான். வந்தியத்தேவன் பூங்குழலியின் படகில் சென்று இலங்கைத் தீவில் இறங்கிய அதே நாள் மாலையில் ஆழ்வார்க்கடியான் நம்பி இராமேசுவரம் வந்து சேர்ந்துவிட்டான். 
அந்தப் புண்ணிய பூமியை மிதித்த உடனே ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் அத்தனை நாளும் அடங்கிக் கிடந்த வைஷ்ணவ ஆர்வம் கரையை உடைத்துக்கொண்டு பொங்கி விட்டது. இராமேசுவரத் தீவில் எங்கெங்கும் மொய்த்துக் கொண்டிருந்த வீர சைவ பட்டர்கள் அந்த ஆர்வத்துக்குத் தூபம் போட்டுவிட்டார்கள். அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று பற்பல தீர்த்தங்களிலும் ஸ்நானம் பண்ணி வைப்பதும், ஆலயத்தில்- மூர்த்தி தரிசனம் செய்து வைப்பதும், அந்தந்தத் தீர்த்தம்- மூர்த்தி விசேஷங்களை எடுத்துச் சொல்வதுமே அவர்களுடைய அலுவல்கள். எனவே, புதிய யாத்ரீகர்களைக் கண்டதும் பட்டர்கள் பலர் சென்று சூழ்ந்து கொள்வார்கள். அவ்விதமே ஆழ்வார்க்கடியானையும் சுற்றி மொய்த்துக் கொண்டார்கள். 
"அப்பனே! வா! வா! இந்த ஸ்தலத்திலுள்ள அறுபத்து நான்கு தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து உன் தேகத்தில் தரித்திருக்கும் வைஷ்ணவப் பாஷாண்டமத சின்னங்களைக் கழுவித் துடைத்துக் கொள்! இராமரின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய ஸ்தலம் அல்லவா இது? வைஷ்ணவ பாஷாண்ட மதசின்னங்களை நீ அணிந்ததினால் ஏற்பட்ட பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம்!" என்று ஒரு பட்டர் விந்நியாசமாகப் பேசினார். 
இன்னொருவர் குறுக்கிட்டு, "இராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம் ஆஞ்சநேய தீர்த்தம், சுக்ரீவதீர்த்தம் இப்படி அறுபத்து நாலு தீர்த்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அந்தந்த தீர்த்தத்தில் தலை மூழ்கி அவரவர்களுடைய தோஷத்தைப் போக்கிக் கொண்டார்கள். நீ என்னுடன் முதலில் ஆஞ்சநேய தீர்த்தத்துக்கு வா! வைஷ்ணவ சின்ன தோஷத்துக்குச் சரியான சங்கல்பம் பண்ணி வைக்கிறேன்!" என்றார். 
மற்றொரு பட்டர் "அப்பனே! இவர்கள் சொல்வதைக் கேளாதே! இராமர் இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சமுத்திர மணலைப் பிடித்து வைத்துச் சிவலிங்கமாக்கிப் பூஜித்த இடத்துக்கு உன்னை நேராக அழைத்துப் போகிறேன்" என்றார். 
ஆழ்வார்க்கடியான் கண்ணில் தீப்பொறி பறக்க எல்லாரையும் ஒரு தடவை விழித்துப் பார்த்து, "நிறுத்துங்கள் உங்கள் அபத்தப் பேச்சை! முதலில் நீங்கள் சொன்ன தீர்த்தங்களினால் உங்களுடைய நாவை அலம்பி உங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்!" என்றான். 
"ஓஹோ! இராமன், லக்ஷ்மணன் என்றெல்லாம் சொன்னதனால் எங்களுக்குப் பாவம் வந்திருக்கும் என்று நினைக்கிறாயா? அப்படி ஒன்றுமில்லை. இந்த க்ஷேத்திரத்துக்குப் பெயரே இராமேச்சுவரம்; இராமர் ஈசுவரனாகிய சிவபெருமானைப் பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட இடம். அத்துடன் இராமர் என்ற பெயரில் இருந்த தோஷமும் போய்விட்டது!" என்றார் ஒரு வீர சைவ பட்டர். 
"ஓ அஞ்ஞான சிரோன்மணிகளே! ஏன் இப்படித் தலைக்குத் தலை உளறுகிறீர்கள்? இந்த ஸ்தலப் பெயரின் அர்த்தம் இன்னதென்பதையே நீங்கள் தெரிந்துகொண்ட பாடில்லை!" 
"நீதான் சொல்லேன், பார்ப்போம்!" 
"பிரம்மாவினுடைய ஒரு தலையைப் பறித்ததினால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட்டது. திருமாலின் பூரண அவதாரமாகிய இராமபிரானுடைய பாதம் பட்டுப் புனிதமான இந்த இடத்துக்குச் சிவன் வந்து அந்தப் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார். இராமரை ஈசுவரன் பூஜித்த இடமானபடியால் இராமேசுவரம் என்ற பெயர் ஏற்பட்டது! தெரிந்து கொண்டீர்களா, மூடசிகாமணி பட்டர்களே!" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜித்தான். 
"யாரடா! அவன் எங்களை மூட சிகாமணிகள் என்பது? அடே தடியா! நீ என்ன தலையில் கொம்பு முளைத்தவனா?" என்று ஒரு பட்டர் சீறினார். 
"இல்லை, ஐயா, பட்டரே! என் தலையிலே கொம்பு முளைக்கவில்லை; கையிலேதான் இந்தக் கொம்பு இருக்கிறது! என்னை யார் என்று கேட்டீர் அல்லவா? சொல்லுகிறேன். திருக்குருகூரில் அவதரித்து, வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் அடியார்க்கு அடியான்! மற்றவர்கள் மண்டையில் நையப்புடைக்கும் கைத்தடியான்!" என்று தடியைத் தூக்கிக் காட்டினான். 
"ஆழ்வார்க்கடியார்க் கடியானே! நீ ஏன் உன் தலையில் முன்புறத்தில் குடுமி வைத்திருக்கிறாய்? அதையும் மழுங்கச் சிரைத்து விட்டாயானால், உன் மண்டையில் உள்ளும், புறமும் ஒன்றாயிருக்கும்!" என்றார் ஒரு சைவர். 
"பட்டர்களே! இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்திலே வந்து என் முன் குடுமியை எடுத்து விடுவதாகவே எண்ணியிருந்தேன். அதற்குள் நீங்கள் ஞாபகப்படுத்தினீர்கள்!..." 
"அடே! நாவிதர் தெருவுக்குச் சென்று ஒரு நாவிதனை அழைத்து வாருங்களடா! கத்தியை நன்றாய்த் தீட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள்! இவனுடைய சிகையை ஆணி வேரோடு களைந்தெறியச் சொல்லலாம்!" என்றார் ஒரு பட்டர். 
"இதற்கு நாவிதனைக் கூப்பிடுவானேன்? நாமே அந்தக் கைங்கர்யம் செய்து விடலாமே? நல்ல கூர்மையான கத்தியாகக் கொண்டு வாருங்கள்!" என்றார் இன்னொரு சைவர். 
"கொஞ்சம் பொறுங்கள்; இன்னும் ஒரு விஷயம் பாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் என் தலை முழுவதும் சிகை அடர்த்தியாக இருந்தது. ஒரு சைவனுடைய மண்டையை உடைத்து விட்டு என் சிகையிலிருந்து ஒரு ரோமத்தை வாங்கிவிடுவதென்று விரதம் எடுத்துக்கொண்டேன். அதன்படி முக்காலே அரைக்கால்வாசி சிகை தீர்ந்து விட்டது. இந்த ஊரில் என் முழுவிரதத்தையும் நிறைவேற்றிக் கடலில் ஒரு முழுக்குப் போடப் போகிறேன். எங்கே, ஒவ்வொருவராக உங்களுடைய மண்டையைக் காட்டுங்கள் பார்க்கலாம்!" என்று ஆழ்வார்க்கடியான் கைத்தடியை ஓங்கினான். 
"அடடே! இந்த வைஷ்ணவன் என்ன துடுக்காகப் பேசுகிறான்?" என்று சொன்னார் ஒருவர். 
"எங்கள் எல்லாருடைய மண்டையையும் உடைத்து விடுவாயா? உன்னால் முடியுமா?" என்று கூறினார் இன்னொருவர். 
"முடியாமலா முக்காலே அரைக்கால் பங்கு சிகையை எடுத்து விட்டிருக்கிறேன்?" என்று கூறி ஆழ்வார்க்கடியான் தடியை வேகமாகச் சுழற்றத் தொடங்கினான். 
"அடியுங்கள்! பிடியுங்கள்! கட்டுங்கள்! வெட்டுங்கள்!" என்று தலைக்குத் தலை கத்தினார்களே தவிர, அக்கூட்டத்தில் யாரும் ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நெருங்கவில்லை. 
அச்சமயம் வெகு சமீபத்தில் எழுந்த ஒரு கோஷம் அவர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது. "திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!" 
எல்லோரும் திகைத்துப் போய்க் கோஷம் வந்த திசையை நோக்கினார்கள். ஆழ்வார்க்கடியான் எல்லாரிலும் அதிகமாகத் திகைத்துத் தனது கைத் தடியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு பார்த்தான். அவர்கள் நின்று சண்டையிட்ட இடம், இராமேசுவரக் கோயில் மதிலின் ஓரமான ஒரு முடுக்கு. அந்த முடுக்குத் திரும்பியதும் எதிரே விரிந்து பரந்தகடல். அக்கடலின் காட்சியோ கண்கொள்ளாத அற்புதக் காட்சியாயிருந்தது. பெரிய பெரிய மரக்கலங்கள், நாவாய்கள், சிறிய கப்பல்கள், படகுகள், ஓடங்கள், வள்ளங்கள், வத்தைகள், கட்டுமரங்கள் ஆகியவை நெடுகிலும் வரிசை வரிசையாகக் கண்ணுக்கெட்டிய தூரம் காணப்பட்டன. பாய்மரங்களிலிருந்து படபடவென்று காற்றில் அடித்துக்கொண்டு பறந்த வெண்ணிறப் பாய்கள், கடலையும் வானத்தையும் தூரத்திலே திட்டுத் திட்டாகத் தோன்றிய பல தீவுகளையும் பெரும்பாலும் மறைத்துக் கொண்டிருந்தன. 
மேலே சொன்னவாறு கட்டியங் கூறிக்கொண்டு காவல் வீரர்கள் முன்னும் பின்னும் தொடர, சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற முதன் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயர் ராஜ கம்பீரத்துடன் ஒரு படகில் வந்து கொண்டிருந்தார். கரையில், கோயில் மதில் ஓரமாக நடந்து கொண்டிருந்த சச்சரவை அவர் கவனித்தார். கூட்டத்தின் நடுவில் கக்கத்தில் தடியுடன் பரம சாதுவைப்போல் நின்ற ஆழ்வார்க்கடியானைக் கையினால் சமிக்ஞை செய்து அருகில் அழைத்தார். ஆழ்வார்க்கடியான் பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு கடற்கரையோரம் சென்று நின்றான். 
"திருமலை! இது என்ன தெருக்கூத்து?" என்றார் அநிருத்தர். 
"குருவே! எல்லாம் கபட நாடக சூத்திரதாரியான அந்தக் கண்ணனின் திருக்கூத்துத்தான்! என் கண்களில் காண்பதை நான் நம்புவதா, இல்லையா என்றே தெரியவில்லை. நான் காண்பது கனவா? அல்லது எல்லாம் வெறும் மாயையா?..." 
"திருமலை! உன்னைப் பரம வைஷ்ணவன் என்று நினைத்தேன். எப்போது பிரபஞ்சத்தை மித்தை என்று சொல்லும் மாயாவாதியானாய்?" 
"குருவே! பரம வைஷ்ணவ பரம்பரையில் அவதரித்த தாங்கள் சைவ சமயி ஆகும்போது நான் என் மாயவாதி ஆகக் கூடாது? என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு ஸ்ரீ சங்கர பகவத் பாதாச்சாரியாரின் அடியார்க்கடியான் ஆகிவிடுகிறேன்..." 
"பொறு! பொறு! நான் சைவ சமயி ஆனதாக யார் சொன்னது?" 
"தங்கள் திருமேனியில் உள்ள சின்னங்கள் சொல்லுகின்றன!" 
"ஆகா! திருமலை! நீ இன்னும் முன்போலவே இருக்கிறாய் புறச்சின்னங்களுக்கே முக்கியம் கொடுக்கிறாய்! நெற்றியில் இடுகிற சந்தனத்தைச் சாய்த்து இட்டால் என்ன? நிமிர்ந்து இட்டால் என்ன?" 
"குருவே! நான் ஒன்றும் அறியாதவன்; எது முக்கியம், எது அமுக்கியம் என்று தெரியாதவன். தாங்கள்தான் என்னைத் தெளிவித்து ஆட்கொள்ள வேண்டும்." 
"எல்லாம் தெளிவிக்கிறேன். நான் தங்கும் இடத்துக்கு வந்து சேர்! அதோ! கடலில் ஒரு சிறிய தீவு தெரிகிறது பார்த்தாயா? அங்கேயுள்ள மண்டபத்துக்கு வா." 
"குருவே! இதோ இந்தச் சண்டைக்காரச் சைவர்கள் என்னை வரவிடவேண்டுமே?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிக் கையினால் அவர்களைச் சுட்டிக் காட்டினான். 
அதுவரை சும்மாயிருந்த வீர சைவர்கள் உடனே நெருங்கி வந்தார்கள். 
"பிரம்மாதி ராஜரே! இந்த வைஷ்ணவன் எங்கள் மண்டைகளை உடைத்து விடுவானாம்! இவனை தக்கபடி தண்டிக்கவேண்டும்!" என்று ஒருவர் ஆரம்பித்தார். மற்றவர்கள் தலைக்குத் தலை பேசலானார்கள். 
"இவனுக்குத் தண்டனை நான் கொடுக்கிறேன். நீங்கள் போகலாம்" என்றார் அநிருத்தர். 
இதனால் அவர்கள் திருப்தி அடையவில்லை. "நாங்களே இவனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாதா? இவனுடைய முன் குடுமியைச் சிரைத்து, இவனுடைய ஊர்த்வ சின்னங்களையெல்லாம் அழித்து, இவனைக் கிணற்றில் போட்டு முழுக்காட்டி..." என்று அடுக்கினார் ஒருவர். 
"என்ன சொன்னீர்கள்?" என்று ஆழ்வார்க்கடியான் கண்களில் தீ எழத் திரும்பி நோக்கினான். 
அநிருத்தப் பிரம்மராயர் அப்போது, "பட்டர் மணிகளே! இவன் பெரிய முரடன். இவனைத் தண்டிக்க உங்களால் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். 
பிறகு தம்மைத் தொடர்ந்து வந்த படகில் இருந்த அகப் பரிவார வீரர்களைப் பார்த்து, "உங்களின் எட்டுப்பேர் இறங்கி இவனை நம் இடத்துக்குக் கொண்டு வாருங்கள்!" என்றார். 
அவ்வளவுதான். மறுகணம் வீரர்கள் எட்டுப் பேர் கரையில் குதித்தார்கள்; ஆழ்வார்க்கடியானைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். 
படகு மேலே சென்றது. 
படை வீரர்கள் புடைசூழ ஆழ்வார்க்கடியானும் போனான். 
பட்டர்களும் மற்றவர்களும் அந்த வைஷ்ணவனுடைய முரட்டுத்தனத்தைக் குறித்துப் பலவாறு பேசிக்கொண்டு கலைந்து போனார்கள்.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!