Get it on Google Play
Download on the App Store

மோக வலை

 

 

←அத்தியாயம் 1: கோடிக்கரையில்

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: மோக வலை

அத்தியாயம் 3: ஆந்தையின் குரல்→

 

 

 

 

 


400பொன்னியின் செல்வன் — கொலை வாள்: மோக வலைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 2[தொகு]
மோக வலை


வயது முதிர்ந்த பிறகு இளம் பெண்ணை மணந்து கொள்வோர் எப்போதும் சந்தேகம் என்னும் மாயா உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அன்னியர்கள் யாரைக் கண்டாலும் இயற்கையான அருவருப்பு ஏற்படுகிறது. பழுவேட்டரையருக்கு இத்தகைய அருவருப்பு ஏற்பட அதிகக் காரணம் இருந்தது. நந்தினி தமக்கு முன்னால் வந்து நின்று பேசத் தொடங்கியதை அவர் சிறிதும் விரும்பவில்லை. அதே சமயத்தில் நந்தினியைக் கடிந்து கொள்ளவும் அவரால் முடியவில்லை. 
எனவே நந்தினி கேட்ட கேள்விக்கு மறுமொழியாக, "ராணி! இந்த உலகத்தில் நமக்குத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எல்லாரையும் நாம் பார்த்து அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால் நமக்கு நஷ்டமும் இல்லை!" என்றார். 
இதைக்கேட்ட பார்த்திபேந்திரன், "ஐயா! சோழநாட்டின் பொக்கிஷ மன்னரின் பட்டமகிஷிக்கு என்னைத் தெரியாததினால் நஷ்டம் ஒன்றுமில்லை; நஷ்டம் எனக்குத்தான். ஆகையால் என்னை நானே தெரிவித்துக் கொள்கிறேன், அம்மணி! என்னைப் பார்த்திபேந்திரப் பல்லவன் என்று அழைப்பார்கள்!" என்று சொன்னான். 
"ஓ! அப்படியா? தங்கள் பெயரை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றாள் நந்தினி. 
"பார்த்திபேந்திரா! ஏன் விருதுகளை விட்டுவிட்டுப் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டாய்? இவ்வளவு தன்னடக்கமும், பணிவும் எப்போது ஏற்பட்டன? நந்தினி! இவன் வெறும் பார்த்திபேந்திரன் அல்ல. வேங்கியும் கலிங்கமும் வென்று வீரபாண்டியன் தலைகொண்ட பார்த்திபேந்திரப் பல்லவன்!" என்று பழுவேட்டரையர் பரிகாசக் குரலில் கூறினார். 
நந்தினியின் முகம் ஒரு கண நேரம் புயல் குமுறும் வானத்தைப்போல் இருண்டது. அவளுடைய இரு கண்களிலிருந்தும் இரு மின்னல்கள் தோன்றி ஒளி வீசி உடனே மறைந்தன. அடுத்த கணம் அவள் கலகலவென்று சிரித்தாள். 
"ஐயா! வீரபாண்டியன் தலைகொண்ட பெருமையான பட்டத்தை எத்தனை பேர் சூட்டிக் கொள்கிறார்கள்! அதற்கு ஏதேனும் கணக்கு உண்டா?" என்று கேட்டாள். 
"அம்மணி! தனாதிகாரி என் பேரில் உள்ள அபிமானத்தினால் அவ்விதம் கூறினார். உண்மையில் அந்த விருதுக்கு நான் உரியவன் அல்ல. வீரபாண்டியன் தலைகொண்ட பெருமை ஆதித்த கரிகாலர் ஒருவருக்கே உரியது!" 
"அது ஏன் அப்பா, அவ்விதம் சொல்கிறாய்? செத்த பாம்பை அடித்த பெருமையில் உனக்குக் கொஞ்சமும் பங்கு வேண்டாமா!" என்று பழுவேட்டரையர் பரிகாசக் குரலில் கேட்டுவிட்டுக் குறுஞ்சிரிப்புச் சிரித்தார். 
"இல்லை, அரசே! இல்லை! ஆதித்த கரிகாலர் செத்த பாம்பைக் கொல்லவில்லை. அவர் வாளை ஓங்கியபோது வீரபாண்டியன் முழு உயிர் உள்ள பாம்பாகத்தான் இருந்தான். அவன் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்து மோகினியை ஒத்த ஒரு மங்கை முன்னால் வந்து நின்று கை கூப்பிக் கெஞ்சினாள். வாளை ஓங்கியவன் நானாக இருந்தால், உடனே அவ்வாளை தூரவீசி எறிந்திருப்பேன். வீரபாண்டியன் பிழைத்துப் போயிருப்பான்!" என்று பார்த்திபேந்திரன் பழுவேட்டரையருக்குப் பதில் சொன்னான். ஆனால் அவனுடைய கண்களோ நந்தியின் முகத்தை கூர்ந்து நோக்கின. 
நந்தினி, பேச்சு அபாயகரமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பழுவேட்டரையரைத் திரும்பிப் பார்த்து, "நாதா! அந்தப் பழைய கதை இப்போது எதற்கு? இவர் இங்கு வந்த காரியம் என்னவென்று விசாரிக்கலாமே!" என்றாள். 
உடனே பழுவேட்டரையரும், "ஆம் தம்பி! பழைய கதை வேண்டாம்! உன் கதையைச் சொல்! காஞ்சியிலிருந்து எப்போது புறப்பட்டாய்? எங்கே பிரயாணம்? இங்கு இறங்கி வந்த காரணம் என்ன?" என்று கேட்டார். 
நந்தினியைப் பார்த்ததால் மதிமயங்கிப் போயிருந்த பார்த்திபேந்திரனும் தான் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தான். 
"ஐயா! என்னை மன்னிக்க வேண்டும்! ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டேன். மிக முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். சோழ நாட்டையே துயரக் கடலில் மூழ்கச் செய்யக்கூடிய பயங்கரமான செய்தி - ஈழத்திலிருந்து என்னுடன் இந்தக் கப்பலில் புறப்பட்டு வந்த இளவரசர் அருள் மொழிவர்மர், சுழற்காற்று அடித்த சமயம் கடலில் குதித்து விட்டார். அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வேளை இங்கே வந்து ஒதுங்கினாரோ என்று பார்ப்பதற்கு வந்தேன்!" என்றான் பார்த்திபேந்திரன். 
அவன் கூறி முடிப்பதற்குள், "ஆகா! என்ன சொன்னாய்?" என்று பழுவேட்டரையர் அலறினார். சுழற் காற்றினால் வேருடன் பறிக்கப்பட்ட நெடுமரத்தைப் போல் தரையில் வீழ்ந்தார். 
அவரைத் தாங்கி எடுப்பதற்காகப் பார்த்திபேந்திரன் பாய்ந்து சென்றான். நந்தினி குறுக்கே நின்று அவன் நீட்டிய கையைப் பற்றி அகற்றினாள். பழுவேட்டரையரின் அருகில் தான் உட்கார்ந்து அவருடைய தலையைத் தன் மடியின் மீது எடுத்து வைத்துக் கொண்டாள். 
"தண்ணீர்! தண்ணீர்! என்று கத்தினாள். 
கூடாரத்திலிருந்து சேடிப்பெண் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் சில வீரர்களும், கலங்கரை விளக்கக் காவலரும், அவர் குடும்பத்தாரும் ஓடி வந்தார்கள். நந்தினி மிக்க கம்பீரத்துடன் அவர்களையெல்லாம் அப்பால் நிற்கும்படி ஏவினாள். பழுவேட்டரையரின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். "நாதா! நாதா!" என்று கொஞ்சும் குரலில் அழைத்தாள். சில நிமிடங்களுக்கெல்லாம் கிழவரின் கண்கள் திறந்தன. உடனே நினைவும் வந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். 
"நந்தினி! சற்று முன் என் காதில் விழுந்தது உண்மையா? இந்தப் பல்லவன் என்ன சொன்னான்? பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் சொன்னான் அல்லவா? அந்த வீரகுமாரன் சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோது இந்தக் கைகளால் அவனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தேன். இதே கைகளினால்தான் அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வரும்படியான கட்டளையில் முத்திரை வைத்தேன். ஐயோ! சோழ நாடு என்னைப் பற்றி என்ன நினைக்கும்?" என்று பழுவேட்டரையர் தலையில் அடித்துக் கொண்டார். வயிரம் பாய்ந்த அந்த வீரக் கிழவர் அவ்விதம் மனம் கலங்கிப் புலம்பியதை அதுவரையில் நந்தினி பார்த்ததில்லை; யாருமே கண்டதில்லை. 
"நாதா! பதறாதீர்கள்! இவர் இன்னும் செய்தி முழுதும் சொல்லவில்லையே? முழுதும் கேட்டுவிட்டு மேலே செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது நலம் அல்லவா?" என்றாள் நந்தினி. 
"ஆமாம், நீ சொல்வது சரிதான். பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து சொல்கிறாயா? பசித்திருக்கும் புலியுடன் விளையாடாதே? ஜாக்கிரதை!" என்று அக்கிழவர் கண்களில் கனல் எழும்படி நோக்கிக் கர்ஜித்தார். 
"ஐயா! மன்னிக்க வேண்டும்! இளவரசர் இறந்து விட்டார் என்று நான் சொல்லவில்லை. அவ்வளவு பயங்கரமான நஷ்டம் இத்தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் என்று என்னாலும் நம்ப முடியவில்லை. சுழற்காற்று உக்கிர நிலையை அடைந்திருந்தபோது அவர் என் கப்பலிலிருந்து கடலில் குதித்தார் என்று தான் சொன்னேன். கடவுள் அருளால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். இந்தக் கடற்கரையிலே வந்து ஒதுங்கியிருக்கலாம். அந்த ஆசையுடனே பார்ப்பதற்கு இங்கே வந்தேன்..." 
"சுழற்காற்று அடித்தபோது கடலில் குதித்தாரா! எதற்காக? ஏன் குதித்தார்? உன்னுடைய கப்பலில் அவர் ஏன் ஏறினார்? அவர் குதித்தபோது, நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று பழுவூர் அரசர் படபடப்புடன் கேட்டார். 
நந்தினி குறுக்கிட்டு, "ஐயா! இவர் இலங்கைக்கு எதற்குப் போனார் என்பதிலிருந்து விவரமாகச் சொல்லட்டும்!" என்றாள். 
"ஆமாம்! உள்ளது உள்ளபடியே சொல்லு! உண்மையைச் சொல்லாவிட்டால் நீ உயிருடன் தப்பமுடியாது! உன்னை..." என்று பழுவேட்டரையர் பற்களை நற நறவென்று கடித்தார். 
"அரசே! உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லை. நான் பொய் சொல்ல நினைத்தாலும் என் நாக்குச் சொல்லாது. கேளுங்கள்! தாங்களும், கடம்பூர் சம்புவரையரும், மற்றும் பலரும் சோழகுலத்துக்கு விரோதமாகச் சதி செய்கிறீர்கள் என்று காஞ்சி நகருக்குச் செய்தி எட்டியது." 
"பொய்! பொய்! முற்றிலும் பொய்!" 
"செய்தி பொய்யாக இருக்கட்டும்! அதுவே நான் வேண்டுவது. காஞ்சிக்கு எட்டிய செய்தியையே நான் கூறினேன். அதன் பேரில் திருக்கோவலூர் மலையமானும், ஆதித்த கரிகாலரும் என்னை ஈழத்துக்கு அனுப்பினார்கள். அருள்மொழிவர்மரைக் கையோடு அழைத்து வரும்படி அனுப்பினார்கள்...." 
இவ்வாறு ஆரம்பித்துப் பார்த்திபேந்திரன், தான் இலங்கை சேர்ந்தது முதல் நடந்ததையெல்லாம், தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறினான். 
கதை முடிந்ததும் பழுவேட்டரையர், "கடவுளே! சோழ நாட்டுக்குப் பெருங்கேடு வந்துவிட்டது! இந்தப் பாவியினால் தான் வந்தது! இளவரசரைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படி நான் அல்லவோ கட்டளை போட்டேன்? நான் அல்லவோ மரக்கலங்களை அனுப்பினேன்?" என்று கதறினார். 
"அரசே! தங்கள் குற்றம் ஒன்றும் இல்லை; தாங்கள் கட்டளை பிறப்பித்திராவிட்டாலும், இந்த மனிதருடைய கப்பலில் இளவரசர் ஏறிக் காஞ்சிக்குப் பயணமாகியிருப்பார் அல்லவா? வீணாக நொந்து கொள்ள வேண்டாம். நம்முடைய செயல்களுக்கு மேலே விதியின் செயல் ஒன்று இருக்கிறது. மேலும்..." நந்தினி இவ்விடத்தில் உரத்துப் பேசுவதைச் சட்டென்று நிறுத்திப் பழுவேட்டரையரின் காதோடு ஏதோ சொன்னாள்: பழுவேட்டரையரின் முகம் சிறிது மலர்ச்சி அடைந்தது. 
"ஆமாம் - ஆமாம்! அது எனக்குத் தோன்றாமல் போயிற்று!" என்றார். 
பிறகு பார்த்திபேந்திரனைப் பார்த்து, "பல்லவா! உன் கப்பலுக்குப் போய் நான் பரிசோதித்துவிட்டு வரப்போகிறேன். அதுவரை நீ இங்கேயே இருக்கவேண்டும்! தப்பிச் செல்ல முயல வேண்டாம். ஓட முயற்சி செய்தால் உடனே வேல் எறிந்து கொல்லும்படி என் வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் போகப்போகிறேன். ஜாக்கிரதை! முதுகிலே காயத்துடன் சாகாதே! உன் பரம்பரை, வீரபரம்பரை!" என்றார். 
"வந்தனம், ஐயா! தப்பித்து ஓடும் எண்ணமே எனக்குக் கிடையாது. அத்தகைய எண்ணமிருந்தால் உங்கள் வீரர்கள் யாராலும் தடுக்கவும் முடியாது. முதுகிலே காயம்படும் உத்தேசமும் எனக்கு இல்லை!" என்றான் பல்லவன். 
"அரசே! இவரைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம். நானே பார்த்துக் கொள்ளுகிறேன். தப்பியோடப் பார்த்தால், இதோ இந்தக் கத்தி உடனே இவர் மார்பில் பாயும்! நீங்கள் நிம்மதியாகப் போய்க் கப்பலைச் சோதித்துவிட்டு வாருங்கள். மாலுமிகளையும் விசாரியுங்கள், இவர் கூறியதெல்லாம் உண்மைதானா என்று" - இவ்விதம் நந்தினி கூறிக் கொண்டே இடுப்பிலிருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்தாள். 
"ராணி! உனக்கு ஏன் இந்தப் பொறுப்பு? நீ கூடாரத்துக்குள் போயிரு! அல்லது தியாகவிடங்கரின் வீட்டில் போய் இரு. இவனை நம் வீரர்களே கவனித்துக் கொள்வார்கள். அல்லது இவனையும் நான் என்னோடு கப்பலுக்கு அழைத்துப் போகிறேன்...." 
"நான் வரவில்லை ஐயா! நான் தங்களுடன் வந்தால் தங்களுக்கு மறுபடியும் சந்தேகமாகத்தானிருக்கும். மாலுமிகள் எனக்காகச் சாட்சி சொல்லிவிட்டதாய் நினைப்பீர்கள். நான் இவ்விடத்தைவிட்டு நகரமாட்டேன். தாங்கள் கவலையின்றிப் போய்வாருங்கள்!" 
"நாதா! தாங்கள் கப்பலிலிருந்து திரும்பி வரும் வரையில் நானும் இங்கேயேதான் இருக்கப் போகிறேன். இங்கிருந்தபடி தங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்!" என்றாள் நந்தினி. 
பிறகு பழுவேட்டரையரின் காதோடு, "இவன் இங்கே ஏதேனும் துப்பறிய வந்திருக்கிறானோ, என்னமோ, யார் கண்டது? மேலும் இளவரசரைப்பற்றிய செய்தி தாங்கள் திரும்பி வரும் வரையில் யாருக்கும் தெரியக்கூடாது" என்றாள். 
பழுவேட்டரையர் தலையை அசைத்துவிட்டுப் படகில் ஏறினார். படகு மரக்கலத்தை நோக்கிச் சென்றது. 
படகு சிறிது தூரம் போகும்வரையில் நந்தினி படகையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் பார்த்திபேந்திரன் கண்கொட்டாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள். பார்த்திபேந்திரன் வெட்கித் தலைகுனிவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் தேன் மலரைப் பார்த்து விட்ட வண்டு அப்பால் திரும்புமா? 
நந்தினி கூரிய சிறிய கத்தியை எடுத்து மறுபடி காட்டி, "ஜாக்கிரதை! தப்பி ஓடப் பார்க்கவேண்டாம்!" என்றாள். 
"தேவி! கத்தியைக் காட்டி பயமுறுத்துவானேன்? தப்பியாவது ஓடவாவது! வலையில் அகப்பட்ட மீன் எவ்விதம் தப்பி ஓடும்? தாங்கள் விரித்த வலையில் அகப்பட்டு..." 
"என்ன, ஐயா, சொல்கிறீர்? என்னை வலைஞர் குலப்பெண் என்று சொல்கிறீரா? இது பழுவூர் அரசர் காதில் விழுந்தால்..." 
"அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை தேவி! ஆனால் மீன் பிடிக்கும் வலையை நான் குறிப்பிடவும் இல்லை. தங்களுடைய வேல்விழிகள் விரிக்கும் மோக வலையைச் சொல்கிறேன்..." 
"சீச்சீ! என்ன தைரியம் உமக்கு? வலைஞர் குலப்பெண் என்றாலும் பாதகமில்லை. ஆடவர்களுக்கு மோகவலை விரிக்கும் கணிகை என்றா என்னைச் சொல்கிறீர்?" 
"மன்னிக்கவேண்டும்! அப்படிப்பட்ட அபவாதத்தையும் நான் சொல்லவில்லை. தாங்கள் வேண்டுமென்று வலை விரிக்க வேண்டுமா, என்ன? சிலந்திப்பூச்சி வலை நெய்வது ஈக்களைப் பிடிப்பதற்காகவா? அது தான் வசிப்பதற்காக வலை பின்னுகிறது. ஈக்கள் தாமாகப்போய் அவ்வலையில் விழுகின்றன..." 
"என்னைச் சிலந்திப் பூச்சி என்றா சொல்கிறீர்? அவ்வளவு பயங்கரமாக இருக்கிறேனா நான்?" 
"தவறு! தவறு! நான் தீபத்தைச் சொல்லியிருக்க வேண்டும். தீபம் எரிவது விட்டில் பூச்சிகளுக்காக அல்ல. தீபம் எரிந்து தன்னைச் சுற்றிலும் ஒளி வீசி ஜோதி மயமாகச் செய்கிறது! அசட்டு விட்டில் பூச்சிகள் அதைக் கனி என்று நினைத்துக் கொண்டு சென்று விழுந்து மாய்கின்றன...." 
"ஒரு சிறிய காற்று குப் என்று அடித்தால் தீபம் அணைந்து விடுகிறது. வாயினால் ஊதிக்கூட அணைத்துவிடலாம். தீபத்தின் சக்தி அவ்வளவுதான்!" 
"தீபம் அணைந்துவிடும்; ஆனால் பூரணசந்திரனை யார் அணைக்க முடியும்? பூரணசந்திரன் சமுத்திர ராஜனுக்காக உதயமாகவில்லை. இயற்கை நியதியின்படி சந்திரன் உதயமாகிறது. அதன் குளிர்ந்த நிலா ஒளியை வானமும் பூமியும் மகிழும்படி பரப்புகிறது. ஆனால் பேதைக் கடலைப் பாருங்கள்! பூரண சந்திரனைக் கண்டு கடல் எதற்காக அப்படிக் கொந்தளிக்க வேண்டும்? எட்டாத பழத்துக்கு ஏன் கொட்டாவி விட்டுத் தவிக்க வேண்டும்?" 
"பல்லவ குல மன்னர்களின் கவிதா ரசனையைப் பற்றியும் கற்பனைத் திறனைப்பற்றியும் ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவையெல்லாம் உண்மையென்பதாக இப்போதுதான் உணர்கிறேன்." 
"புராணங்களிலும், காவியங்களிலும் நான் படித்ததையும் கேட்டதையும் நேற்றுவரை நம்பவில்லை; இன்றைக்குத்தான் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது." 
"எதைப்பற்றிச் சொல்கிறீர்கள்?" 
"பெண் உருவங் கொண்டவர்கள் சிலர் வானத்தையும் பூமியையும் தங்கள் காலடியில் போட்டுக்கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று கேட்டிருக்கிறேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த அசுரர்கள், அமுதபானம் செய்ய வேண்டிய சமயத்தில் மோகினியினால் ஏமாந்து போனார்கள். சுந்தோப சுந்தர்கள் ஒரு பெண் நிமித்தமாக அடித்துக்கொண்டு செத்தார்கள். மேனகையினால் விசுவாமித்திரர் தவங் கெட்டது. கோவலன் மாதவியின் மோக வலையில் விழுந்து கிடந்தான். தசரதர் கைகேயிக்காக ராமனைக் காட்டுக்கு அனுப்பினார். எகிப்து நாட்டு ராணியின் காரணமாக மகத்தான ரோம சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது..." 
"போதும் ஐயா! போதும்! இந்த உதாரணங்களையெல்லாம் எதற்காகச் சொல்கிறீர்கள்?" 
"தெரியவில்லையா, தேவி! யாருக்கு உதாரணமாகச் சொல்கிறேன் என்று உண்மையாகத் தெரியவில்லையா?" 
"எனக்கு உதாரணமாகச் சொல்கிறதாயிருந்தால், அதைப் போல் பெரிய தவறு நீ வேறு செய்ய முடியாது." 
"தவறு ஒன்றுமில்லை. அவர்களுடைய சக்தியைக் காட்டிலும் தங்கள் சக்தி குறைந்தது அன்று." 
"உம்முடைய வாய்மொழியே உமக்கு விரோதமாயிருக்கிறது." 
"எப்படி, தேவி?" 
"பழுவூர் அரசரை நான் வேண்டுமென்றுதான் கப்பலுக்கு அனுப்பினேன், உம்மிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்பதற்காக." 
"தங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டுதான் நானும் அவருடன் போகாமல் இங்கேயே தங்கினேன்." 
"வீரபாண்டியனை ஒரு பெண் காப்பாற்ற முயன்றாள் என்றும் ஆதித்த கரிகாலன் அதைப் பொருட்படுத்தவில்லையென்றும் நீர் சொன்னீர் அல்லவா?" 
"ஆம் சொன்னேன்." 
"காப்பாற்ற முயன்ற பேதைப்பெண் யார் என்று தெரியுமா?" 
"இப்போது பழுவூர் அரண்மனையின் ஜோதியாக விளங்கும் இளைய ராணி நந்தினி தேவிதான்." 
"நீர் சற்றுமுன் வர்ணித்தபடி எனக்கு அவ்வளவு சக்தி இருந்திருந்தால் நான் காப்பாற்ற விரும்பிய மனிதரின் உயிரைக் காப்பாற்றி இருக்க மாட்டேனா? அது ஏன் என்னால் முடியாமல் போயிற்று?" 
"இரத்த வெறிகொண்டிருந்த ஆதித்த கரிகாலன் அச்சமயம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லைதான். ஆனால் அதற்குப் பிறகு மூன்று வருஷமாக அவர் எத்தகைய சித்திரவதையை அநுபவித்து வருகிறார் என்பதை நான் அறிவேன்." 
"உமக்கு எப்படித் தெரியும், ஐயா? உம்மிடம் சொன்னாரா?" 
"மூன்று வருஷமாய் மனத்திலே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உள்ளத்தை ஏதோ ஒரு துன்பம் அரித்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அறிந்திருந்தேன். பத்து நாளைக்கு முன்பு, நான் ஈழத்துக்குப் புறப்பட்டதற்கு முதல் நாள்தான்,- மனத்தைத் திறந்து என்னிடம் சொன்னார் அது முதல்..." 
"அது முதல் என்ன?" 
"பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனத்திலும் குடிகொண்டு விட்டது!" 
"ஆதித்த கரிகாலரின் நிலையில் நீர் இருந்திருந்தால் நான் கேட்டுக் கொண்டதற்காக வீரபாண்டியரை உயிரோடு விட்டிருப்பீர் என்று சொன்னது நினைவிருக்கிறதா?" 
"நன்றாக நினைவிருக்கிறது." 
"அது உண்மைதானா?" 
"சத்தியம், தேவி! தாங்கள் சோதித்துப் பார்க்கலாம்." 
"ஐயா! என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?" 
"தங்கள் தங்கக் குரலில் எதைச் சொன்னாலும் என் செவிகள் இன்பம் அடையும்; உள்ளம் பூரிக்கும்." 
"நீர் என்னைச் சோதிப்பதற்காகவே இப்படிப் பேசுகிறீர் என்று சந்தேகிக்கிறேன். நான் விரிக்கும் மோக வலையைப்பற்றிப் பேசி, நீர் எனக்கு வலை விரிக்கப் பார்க்கிறீர். என்னுடைய அந்தரங்கத்தை அறிந்து கொள்ள முயல்கிறீர்." 
பார்த்திபேந்திரன் திடுக்கிட்டுப் போனான். ஆரம்பத்தில் அவன் பேச ஆரம்பித்தபோது அந்த எண்ணத்தோடுதான் ஆரம்பித்தான். பிறகு அதை மறந்துவிட்டான். கபடமாக ஆரம்பித்த பேச்சு அவனை மோகக்கடலில் உண்மையாகவே தள்ளிவிட்டது. முதலில் அப்படி எண்ணியது குறித்து அவன் வெட்கப்பட்டான். அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், "தேவி! அவ்விதம் தங்களை சோதித்து ஒற்றன் வேலை செய்ய நான் பிரயத்தனப்படும் பட்சத்தில் என் தலையில் இடி விழட்டும்!" என்றான். 
"ஐயோ! அப்படி சொல்லாதீர்" என்று நந்தினி அலறினாள். 
"ஏன், தேவி! ஏன்?" 
"உங்கள் பெரிய இளவரசரிடமிருந்து வந்தானே, இன்னொருவன், அவன் பெயர் என்ன?..." 
"வந்தியத்தேவனா!" 
"ஆம் அவன்தான்! என்னிடம் மிகத் தந்திரமாக ஒற்று அறிந்து போக முயன்றான். தாங்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் தலையில் இடி விழுந்தே விட்டது போலிருக்கிறதே!" 
"துரதிர்ஷ்டவசமாக அவன் தலையில் இடி விழவில்லையே! அவன் நின்ற கப்பலில் அல்லவா விழுந்தது? அதனால் அவனுக்கு வந்த ஆபத்து, சின்ன இளவரசரையும் அல்லவா பீடித்து விட்டது?" 
"பாவம்! பழையாறை இளைய பிராட்டியை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. அவள் இந்த உலகில் மிகவும் பிரியம் வைத்திருந்த இருவர் ஏககாலத்தில் மாண்டு போனார்கள்! என்ன துரதிர்ஷ்டம்!" 
"தேவி! இரண்டு பேர்கள் யார்?" 
"நீர் சொன்ன இரண்டு பேருந்தான்! இளையபிராட்டிக்குத் தம்பியின் மீது தனி வாஞ்சை உண்டு அல்லவா?" 
"அது உலகம் அறிந்தது. அவருடைய பிரியத்துக்குப் பாத்திரமான இன்னொருவர்...?" 
"ஏன் உங்கள் பெரிய இளவரசர் அனுப்பிய தூதன் தான்." 
"வந்தியத்தேவனையா சொல்கிறீர்கள்?" 
"அவனைத்தான்!" 
"சீச்சீ! சோழ சாம்ராஜ்யத்தையே ஆட்டுவிக்கும் சக்தி வாய்ந்த பழையாறை இளையபிராட்டி அற்பனும், தற்பெருமைக்காரனும், அதிகப்பிரசங்கியுமான அந்த வாலிபன் மீது..." 
"ஆம்; அந்த வாலிபன் மீது மோகம் கொண்டாள். அதனாலே தான் அவனைப் பழுவேட்டரையரின் தண்டனையிலிருந்து தப்புவிப்பதற்காக ஓலை கொடுத்து இலங்கைக்கு அனுப்பினாள். பாவம்! இந்தக் கிழவர் இளவரசரின் துர்க்கதிக்குத் தாமே காரணம் என்று துடியாய்த் துடிக்கிறார், உண்மையில் அதற்கு இளையபிராட்டிதான் காரணம். அவள் ஓலை கொடுத்து அனுப்பாதிருந்தால்..." 
"உண்மை, உண்மை! இந்த விபரீதம் எல்லாம் ஏற்பட்டிராது." 
"என் கணவர் கப்பலிலிருந்து திரும்பி வந்ததும் இந்த உண்மையை அவருக்கு நீர் எடுத்துச் சொல்லவேண்டும். சொன்னால், என்னுடைய நன்றிக்குப் பாத்திரமாவீர்!" 
"அம்மணி தங்களுடைய நன்றிக்குப் பாத்திரமாக இது ஒன்றுதானா வழி? வேறு எனக்குத் தாங்கள் இடக்கூடிய பணிகள் இல்லையா?" 
"ஐயா! ஒரு பேதைப் பெண்ணின் நன்றிக்குப் பாத்திரமாக எத்தனையோ நூறு வழிகள் உண்டு." 
"அவற்றில் இன்னும் இரண்டொன்றைச் சொல்லுங்கள். ஆதித்த கரிகாலருக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அதை அவர் கைசோர விட்டுவிட்டார். விட்டு விட்டு அப்புறம் இரவு பகலாகத் துடிதுடிக்கிறார். நான் ஒரு நாளும் அத்தகைய தவற்றைச் செய்யமாட்டேன்!" 
"இது சத்தியமா, ஐயா? ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அவள் எது சொன்னாலும் செய்யக்கூடிய மனிதரா நீங்கள்?" 
"எந்தப் பெண் என்பதைப் பொறுத்தது, தேவி! நேற்றுவரைக்கும் நான் பார்த்திருக்கும் எந்தப் பெண்ணின் விருப்பத்துக்காகவும் எதுவும் செய்திருக்கமாட்டேன்! சொன்னால் சிரித்திருப்பேன். இன்று அப்படியல்ல! தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால், போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்...!" 
இவ்விதம் பார்த்திபேந்திரன் வெறி கொண்டவனைப்போல் கூறியபோது அவனுடைய உடம்பு தலையிலிருந்து கால்வரையில் நடுநடுங்கியது. அவனுடைய வாயிலிருந்து வந்த சொற்கள் குழறின; உதடுகள் துடித்தன; பற்கள் கடித்தன; ரோமங்கள் குத்திட்டு நின்றன; மூச்சு விடும் சத்தம் கொல்லன் உலைச் சத்தத்தைப் போலக் கேட்டது. 
பார்த்திபேந்திரனுடைய இந்த மாறுதல் நேயர்களுக்கு வியப்பை அளிக்கும். ஏன்! அவனிடமே, "நீ இப்படி ஆவாய்" என்று முதல் நாள் யாராவது சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்கமாட்டான். பிற்காலத்தில் நினைத்துப் பார்த்தால் அவனுக்கேகூட வியப்பளிக்கக்கூடிய காரியந்தான். ஆனால் இது பார்த்திபேந்திரனைப் பற்றிய அதிசயம் மட்டும் அல்ல; மனித இயற்கையைப் பற்றிய இரசியம். 
எத்தனையோ மேதாவிகள் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள். 
இதற்கு மாறாக, நெடுங்காலமாய்த் தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள். 
பார்த்திபேந்திரனுடைய ஆவேச மொழிகளைக் கேட்டுவந்த நந்தினி, "போதும் ஐயா! போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்" என்றாள்.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!