Get it on Google Play
Download on the App Store

அவள் பெண் அல்ல!

 

 

←அத்தியாயம் 41: கரிகாலன் கொலை வெறி

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திமணிமகுடம்: "அவள் பெண் அல்ல!"

அத்தியாயம் 43: "புலி எங்கே?"→

 

 

 

 

 


492பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: "அவள் பெண் அல்ல!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

மணிமகுடம் - அத்தியாயம் 42[தொகு]
"அவள் பெண் அல்ல!"


இளவரசன் கரிகாலன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இளம் பிராயத்து நினைவுகள் அவன் உள்ளத்தில் அலை அலையாக மோதிக் கொண்டு தோன்றி, குமுறிக் கொந்தளித்து விட்டுப் பிறகு வேறு நினைவுகளுக்கு இடங்கொடுத்து விட்டு மறைந்தன. அந்த நினைவு அலைகளைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி ஒரு தீர்க்கமான மூச்சு விட்டு விட்டுக் கரிகாலன். 
"போனதைப் பற்றி இப்போது பேசவேண்டாம்; நடக்க வேண்டியதைப் பற்றி பேசலாம். அதற்காகவே உன்னைத் தனியாக அழைத்து வந்தேன். பந்தயத்தில் நாம் தோற்று விட்டோ ம். பன்றி போய்விட்டது. இனி என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று யோசித்து முடிவு செய்யலாம். வல்லவரையா! நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது என்று நினைத்தாலே எனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. தப்பித் தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக அவள் மன்றாடிய போது எப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ, அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது. வல்லவரையா! உன் கருத்து என்ன? இன்னமும் அவளுக்கு உண்மை தெரியாது என்றா நினைக்கிறாய்? அவள் சுந்தர சோழரின் மகள் என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா கருதுகிறாய்?" 
"கோமகனே! இவையெல்லாம் தெரிந்திருந்தால், இன்னமும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுடன் சேர்ந்திருப்பாரா? சோழ குலத்துக்கு விரோதமாக ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய நாட்டு மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம் சூட்டியிருப்பாரா? அந்த மணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக் கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா? இவையெல்லாம் திருப்புறம்பயம் பள்ளிப்படையருகில் நள்ளிரவில் நடந்ததை நானே பார்த்தேன்.." 
"இவ்வளவையும் பார்த்த உன்னை நந்தினி உயிரோடு விட்டு விட்டதை நினைத்தால் வியப்பாயிருக்கிறது." 
"ஐயா! எனக்கு அதில் வியப்பு இல்லை; பெண் உள்ளத்தில் இயற்கையாகக் குடிகொண்டுள்ள இரக்கம் காரணமாயிருக்கலாம் அல்லவா?" 
"வல்லவரையா! நீ உலகமறியாதவன். பெண் உள்ளத்தில் குடிகொண்டுள்ள வஞ்சகமும் வஞ்சனையும் எத்தகையவை என்பது உனக்குத் தெரியாது. என்ன நோக்கத்துடன் உன்னை அவள் உயிரோடு விட்டாள் என்பதை நான் அறியேன். ஆனால் என்னை எதற்காக ஓலை அனுப்பி வரவழைத்தாள் என்பது என் அந்தரங்கத்துக்குத் தெரிந்திருக்கிறது." 
"இளவரசே! அது என்ன காரணமாயிருக்கும்?" 
"என்னைக் கொன்று வீர பாண்டியனுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான் வரவழைத்திருக்கிறாள்.." 
"ஐயா! அப்படி ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடப் போகிறதென்று எண்ணித்தான் இளைய பிராட்டியும் முதன்மந்திரியும் என்னை அவசரமாக அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்கள் கடம்பூருக்குப் போக வேண்டாம் என்று சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லை...." 
"வல்லவரையா! இளைய பிராட்டியும் முதன்மந்திரியும் மிக மிக அறிவாளிகள்தான். ஆனால் விதியை அவர்களால் கூடத் தடுக்க முடியாது அல்லவா? அருள்மொழிவர்மனைப் பற்றிச் சோதிடர்கள் சொல்லியிருப்பதையெல்லாம் உண்மையாக்குவதற்காகவே விதி என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறதோ என்னமோ, யார் கண்டது? வல்லவரையா! கந்தமாறன் என் பின்னாலிருந்து அம்பை விட்டானே? உண்மையில் அவன் கரடியைக் குறிப் பார்த்து விட்டானா? என்னைக் குறிப்பார்த்து விட்டானா? நீ கவனித்தாயா?" 
"நான் கவனிக்கவில்லை, ஐயா! ஆனால் கந்தமாறன் அத்தகைய துரோகம் செய்யக் கூடியவன் என்று நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அதிலும் சக்கரவர்த்தியின் குமாரனைப் பின்னாலிருந்து அம்பு எய்து கொல்லக் கூடியவனா கந்தமாறன்? அவனுடைய அறிவுக் கூர்மையைப் பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லைதான். முதுகில் குத்தப்பட்டு உணர்வற்றுக் கிடந்தவனை நான் தூக்கிக் கொண்டு போய்க் காப்பாற்றினேன். கண் விழித்ததும் என்னைப் பார்த்தபடியால் நான்தான் அவனைக் குத்தியதாக எண்ணிக் கொண்டான். அப்போது அவன் என் பேரில் கொண்ட பகைமை இன்னும் மாறவில்லை. ஆனால் அவனுடைய புத்தி கொஞ்சம் கட்டையாயிருந்தாலும், துரோக சிந்தையுள்ளவன் அல்ல!..." 
"நண்பா! ஒரு அழகிய பெண்ணின் மோகனாஸ்திரத்துக்கு எவ்வளவு சக்தியுண்டு என்று எனக்குத் தெரியாது. எவ்வளவு நல்லவனையும் அது துரோகச் செயல் புரியச் செய்துவிடும்..." 
"ஐயா! பெண்களின் மோகன சக்தியைப் பற்றி நானும் சிறிது அறிந்து தானிருக்கிறேன். அதனால் நான் ஒரு நாளும் துரோகியாகி விடமாட்டேன்..." 
"ஆகா! மணிமேகலை நல்ல பெண், உன்னைத் துரோகமான காரியம் செய்யும்படி ஏவமாட்டாள்..." 
"நான் மணிமேகலையைச் சொல்லவில்லை; பூரண சந்திரனைப் பார்த்த கண்களுக்கு மின்மினி கவர்ச்சிகரமாகத் தோன்ற முடியுமா?" 
"பூரண சந்திரன் என்று யாரைக் குறிப்பிடுகிறாய்?" 
"இளவரசே! கோபிக்க வேண்டாம்; பழையாறை இளைய பிராட்டியைத்தான் சொல்லுகிறேன்..." 
"அடே! அதிகப் பிரசங்கி! உலகிலுள்ள மன்னாதி மன்னர்கள் எல்லோரும் குந்தவையின் கைப்பிடிக்கத் தவம் கிடக்கிறார்கள். அத்தகைய என் சகோதரியை நீ மனத்தினாலும் நினைக்கலாமா?" 
"ஐயா! பூரண சந்திரனுடைய மோகனத்தையும் தண்ணொளியையும் பூலோக சக்கரவர்த்திகளும் பார்த்து அனுபவிக்கிறார்கள்; ஏழை எளியவர்களுந்தான் நிலவில் நின்று களிக்கிறார்கள். அவர்களை யார் தடுக்க முடியும்?" 
"ஆமாம்; உன் பேரில் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தெரிந்துதான் நான் உன்னை என் சகோதரியிடம் ஓலையுடன் அனுப்பினேன். நீயும் அவளுக்குத் திருப்தியாக நடந்து கொண்டாய். ஆனால் பார்த்திபேந்திரனிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லிவிடாதே! அவன் சோழ குலத்துக்கு மருமகனாகித் தொண்டை நாட்டுக்கு மன்னனாக விளங்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான்..." 
"ஐயா! அவ்விதம் சில காலத்துக்கு முன்பு வரையில் இருந்திருக்கலாம். இப்போது கந்தமாறன், பார்த்திபேந்திரன் இருவரும் நந்தினி தேவி காலால் இட்ட வேலையைத் தலையினால் செய்யக் காத்திருக்கிறார்கள்....." 
"அதை நான் கவனித்து வருகிறேன்; ஆகையினால்தான் அவர்கள் விஷயத்தில் எனக்குப் பயமாயிருக்கிறது." 
"எல்லாவற்றையும் உத்தேசிக்கும்போது, தாங்கள் இளைய ராணியைச் சீக்கிரம் சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவது அவசியம் என்று தோன்றுகிறது." 
"நண்பா! எனக்கு அவ்வளவு தைரியம் வரும் என்று தோன்றவில்லை. எனக்குப் பதிலாக நீயே அவளைச் சந்தித்துச் சொல்லி விட்டால் என்ன?" 
"இளவரசே! நான் சொன்னால் இளைய ராணிக்கு நம்பிக்கை ஏற்படாது. ஒருமுறை நான் அவரை ஏமாற்றிவிட்டு தப்பித்துக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆகையால் இதுவும் ஏதோ ஒரு சூழ்ச்சி என்று கருதக் கூடும்." 
"ஆனால் நான் நந்தினியைத் தனியாகச் சந்திப்பது எப்படி? அவளோ அந்தப்புரத்தில் இருக்கிறாள்!" 
"ஐயா! மணிமேகலையின் மூலம் அது சாத்தியமாகும். அதற்கு வேண்டிய ஏற்பாடு நான் செய்கிறேன்...." 
"மணிமேகலையை நீ கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது. நல்ல காரியந்தான்! எது எப்படியானாலும் மணிமேகலையை உனக்குத் திருமணம் செய்து விட்டேனானால், என் உள்ளம் ஓரளவு நிம்மதி அடையும்." 
"ஐயா! மணிமேகலையை நான் என் உடன் பிறந்த சகோதரியாகக் கருதுகிறேன். அவளுக்கு இன்னும் பன்மடங்கு மேலான அதிர்ஷ்டம் கிட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்..." 
"எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?" 
"தெரியவில்லையா, இளவரசே! சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்து இளவரசரின் உள்ளத்தில் கன்னி மணிமேகலை இடம் பெற்றிருப்பதாக ஊகிக்கிறேன். சற்று முன் சம்புவரையர் குமாரியைப் பற்றி ஒரு மாதிரி பேசினேன். என் மனத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காக அவ்விதம் சொன்னேன். இளைய பிராட்டி ஒருவரைத் தவிர இந்த உலகில் பிறந்த வேறு எந்தப் பெண்ணும் மணிமேகலைக்கு அறிவிலும் குணத்திலும் இணையாக மாட்டார்கள். தாங்கள் மட்டும் மணிமேகலையை மணந்து கொண்டால் நம்முடைய தொல்லைகள் எல்லாம் தீர்ந்து விடும். சம்புவரையரும் கந்தமாறனும் நம்முடன் சேர்ந்து விடுவார்கள். பழுவேட்டரையர்கள் தனித்துப் போய் விடுவார்கள். இளைய ராணியின் சக்தியும் குன்றி விடும். மதுராந்தகத் தேவர் பின்னர் இராஜ்யம் என்ற பேச்சையே எடுக்க மாட்டார். சிற்றரசர்களின் சூழ்ச்சியையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியையும் ஒரேயடியாய் முறியடித்து வெற்றி காணலாம்..." 
"எல்லாம் சரிதான், தம்பி! ஆனால் கடம்பூருக்கு நான் திருமணம் செய்து கொள்வதற்காக வரவில்லை. ஏதோ ஒரு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், கேள்! பழுவேட்டரையர் மதுராந்தகனோடு திரும்பி வரும்போது ஒரு பெரிய படையுடன் வரப்போகிறார்..." 
"ஐயா! அப்படியானால் நாமும் திருக்கோவலூர் அரசருக்குச் சொல்லி அனுப்பிப் படை திரட்டிக் கொண்டு வரச் செய்தால் என்ன? எதற்கும் முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லதல்லவா?" 
"நானும் அதைப் பற்றி யோசித்து வருகிறேன். ஒவ்வொரு சமயம் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? இந்தக் கடம்பூர் அரண்மனையைத் தரை மட்டமாக்கி, இங்கே சதியாலோசனை செய்தவர்கள் அத்தனை பேரையும் அரண்மனை வாசலில் கழுவிலேற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. என் தந்தையை முன்னிட்டுத்தான் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். அவரை மட்டும் நீ காஞ்சிக்கு அழைத்து வந்திருந்தால்...?" 
"இளவரசே! அவரிடம் தங்கள் ஓலையைச் சேர்ப்பிப்பதே பிரம்மப் பிரயத்தனமாகி விட்டதே!" 
"ஆமாம்; சக்கரவர்த்தி இந்தப் பழுவேட்டரையர்களிடம் நன்றாய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். என் பெற்றோர்களுக்கென்று காஞ்சிமா நகரில் நான் கட்டிய பொன் மாளிகையில் வௌவால்கள் சஞ்சரிக்கின்றன. நான் உயிரோடிருக்கும்போது அவர்களை அம்மாளிகையில் வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ, என்னமோ தெரியாது. இந்தக் கடம்பூரைவிட்டு உயிரோடு போவேனோ என்று கூடச் சந்தேகமாயிருக்கிறது..." 
"இளவரசே! தாங்கள் இவ்விதம் பேசப் பேச, மலையமானைப் படைகளுடன் வரச் சொல்வது மிக்க அவசியம் என்று தோன்றுகிறது.." 
"அந்த காரியத்துக்கு உன்னையே அனுப்பலாமா என்று பார்க்கிறேன்.." 
"ஐயா! மன்னிக்கவேணும்! தங்களை விட்டு ஒரு கணமும் பிரியவே கூடாது என்று தங்கள் தமக்கையார் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.." 
"அதை நீ இது வரை நன்றாக நிறைவேற்றி வருகிறாய்." 
"பார்த்திபேந்திர பல்லவர் இங்கே சும்மாத்தான் இருக்கிறார். பொழுது போகாமல் கஷ்டப்படுகிறார்..." 
"ஆமாம்; பழுவூர் இளைய ராணியைப் பாராத ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. பார்த்திபேந்திரன் பெண்ணழகுக்கு இவ்வளவு அடிமையானவன் என்று நான் கனவிலும் கருதவில்லை. அவனைத்தான் மலையமானிடம் அனுப்ப வேண்டும்." 
"சரியான யோசனை, ஐயா!" 
"அவன் இல்லாதபோது எனக்கு ஏதாவது அபாயம் நேரிட்டால் உதவிக்கு நீ இருக்கவே இருக்கிறாய்..." 
"இளவரசே! யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களுக்குத் தீங்கு செய்யத் துணிவுள்ளவன் இந்த உலகில் இருப்பதாக நான் கருதவில்லை. தாங்கள் இல்லாதபோது தங்களைப் பற்றி ஏதேதோ பேசிய வீரக் கிழவர்கள் தங்களை நேரில் பார்த்ததும் கைகால் நடுங்கி வாய் குழறித் தடுமாறுவதை நேரில் பார்த்தேனே?" 
"தம்பி! கையில் கத்தி எடுத்துப் போராடக் கூடிய எந்த ஆண் மகனுக்கும் நான் பயப்படவில்லை. பின்னாலிருந்து முதுகில் அம்பு விடக்கூடிய கந்தமாறன் போன்றவர்களுக்கும் நான் பயப்படவில்லை..." 
"மறுபடி கந்தமாறனைப் பற்றி அப்படிச் சொல்கிறீர்களே.." 
"கேள், தம்பி! ஒரு பெண்ணின் நெஞ்சின் ஆழத்தில் உள்ள வஞ்சகத்துக்குத்தான் அஞ்சுகிறேன். அவள் மனத்தில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ணும்போதெல்லாம் என் உள்ளம் பதைபதைக்கிறது. அவள் என்னை மர்மமாகப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருக்கிறது. அதைப் பற்றி எண்ணிய உடனே என் கை கால்கள் வெடவெடத்துப் போகின்றன." 
"ஐயா! நந்தினிதேவியின் வஞ்சகத்துக்குப் பயப்பட வேண்டியதுதான் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அவருடைய உள்ளத்தில் எவ்வளவு பயங்கரமான துவேஷம் குடிகொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். என்னை அவர் உயிரோடு போகவிட்டதை நினைக்கும்போது சில சமயம் அதில் என்ன சூழ்ச்சி இருக்குமோ என்று பீதி கொள்கிறேன். ஆனால் இதெல்லாம் அவருக்கு உண்மை தெரியாமலிருக்கும் காரணத்தினால்தான் அல்லவா? அவருடைய சகோதரர் தாங்கள் என்பதைத் தெரிவித்து விட்டால் அதற்குப் பிறகு எந்தக் கவலையும் வேண்டியதில்லையல்லவா?" 
"அப்படியா எண்ணுகிறாய்? வல்லவரையா! நீ கெட்டிக்காரன்தான். ஆனால் பெண்களின் இயல்பு அறியாத அப்பாவிப் பிள்ளை. நந்தினிக்குத் தான் சுந்தர சோழரின் குமாரி என்பது தெரிந்தால், எங்கள் எல்லோரிடமும் அவளுடைய குரோதம் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகும். தஞ்சை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவளுக்குப் பட்டம் சூட்டுவதாகச் சொன்ன போதிலும் அவளுடைய கோபம் தீராது..." 
"இளவரசே! அப்படித் தாங்கள் கருதினால் அந்தப் பொறுப்பை என்னிடமே ஒப்புவியுங்கள். நானே நந்தினியிடம் உண்மை வரலாற்றைச் சொல்வேன். அவருடைய கோபத்தையும் தணிக்க முயல்வேன்...." 
"உன்னாலும் அது முடியாது, நண்பா! நந்தினியின் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது. நான் சொல்வதை கேள்! எங்கள் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒன்று நான் சாக வேண்டும்; அல்லது அவள் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். வீர பாண்டியனைக் கொன்ற வாளினால் அவளையும் கொன்று விடுகிறேன்...." 
"இளவரசே! இது என்ன பயங்கரமான பேச்சு?" 
"வல்லவரையா! ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக ஓர் உயிரைக் கொல்லுவது குற்றமா? அவள் பெண்ணாயிருந்தால் என்ன? என் உடன் பிறந்த சகோதரியாக இருந்தால்தான் என்ன? உண்மையில் அவள் பெண் அல்ல; பெண் உருக்கொண்ட மாய மோகினிப் பேய்! அவளை உயிரோடு விட்டுவைத்தால் விஜயாலய சோழர் காலத்திலிருந்து பல்கிப் பெருகி வந்திருக்கும் இந்தச் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிவிடும்... ஆகா! அது என்ன?" என்று ஆதித்த கரிகாலன் திகிலுடன் கேட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான். 
அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் காட்டுப் புதர்களுக்கு மத்தியில் ஏதோ அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் குதிரைகளைத் தட்டிவிட்டு அருகில் சென்று பார்த்தார்கள். மிக அபூர்வமான காட்சி ஒன்று தென்பட்டது. காட்டுப்பன்றி ஒன்றும், சிறுத்தைப் புலி ஒன்றும் கொடூரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 
"ஆகா! நாம் தேடி வந்தவன் இங்கே இருக்கிறான்!" என்றான் கரிகாலன். 
"சிறுத்தை நமக்கு வேலை இல்லாமல் செய்து விடும் போலிருக்கிறது!" என்றான் வந்தியத்தேவன். 
"அப்படியா நினைக்கிறாய்? பார்த்துக் கொண்டே இரு!" என்றான் கரிகாலன். 
சிறுத்தைக்கும் பன்றிக்கும் நடந்த அகோரமான யுத்தத்தை இருவரும் சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுத்தை பன்றியின் மீது பாய்ந்து அதை நகங்களினாலும் பற்களினாலும் தாக்க முயன்றது. ஆனால் காட்டுப்பன்றியின் கடினமான தோல், புலி நகத்திற்கும் பற்களுக்கும் சிறிது அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் பன்றி வேகமாக ஓடி வந்து சிறுத்தையை முட்டித் தள்ளித் தரையிலும் மரங்களின் வேர்களிலும் வைத்துத் தேய்த்த போதெல்லாம் சிறுத்தை படாதபாடு பட்டது. பன்றியின் கோரைப் பற்கள் சிறுத்தையின் தோலைச் சின்னாபின்னமாகக் கிழித்தன. கடைசியாக ஒரு முறை சிறுத்தையைப் பன்றி கீழே முட்டித் தள்ளியபோது அது செத்தது போலக் கிடந்தது. 
"தம்பி! சிறுத்தை செத்து விட்டது! பன்றி இனி நம் பேரில் திரும்பும்! அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்!" என்று கூறிக் கரிகாலன் வில்லில் அம்பைப் பூட்டி, விட்டான். 
அம்பு பன்றியின் கழுத்தில் போய்த் தைத்தது. பன்றி கழுத்தை உதறிக் கொண்டே திரும்பிப் பார்த்தது. இரு குதிரைகளையும் அவற்றின் மீதிருந்தவர்களையும் ஒரு கணம் கவனித்தது. பிறகு ஒரு தடவை சிறுத்தையைப் பார்த்தது. அதனால் இனி ஒன்றும் ஆகாது என்று தெரிந்து கொண்டது போலும்! மூர்க்க ஆவேசத்துடன் குதிரைகளை நோக்கிப் பாய்ந்து வந்தது. கரிகாலன் இன்னொரு அம்பை வில்லில் பூட்டுவதற்கு முன்னால் அவன் ஏறியிருந்த குதிரையைத் தாக்கியது. தாக்குதலின் வேகத்தினால் சிறிது நகர்ந்த குதிரையின் பின்னங்கால் ஒரு மரத்தின் வேரில் அகப்பட்டுக் கொள்ளவே குதிரை தடுமாறிக் கீழே விழுந்தது. குதிரையின் அடியில் கரிகாலன் அகப்பட்டுக் கொண்டான். பன்றி சிறிது பின்னால் நகர்ந்து வந்து மறுபடியும் தரையில் கிடந்த குதிரையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!