இரும்பு நெஞ்சு இளகியது!
←அத்தியாயம் 36: பாண்டிமாதேவி
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: இரும்பு நெஞ்சு இளகியது!
அத்தியாயம் 38: நடித்தது நாடகமா?→
536பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: இரும்பு நெஞ்சு இளகியது!கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
தியாக சிகரம் - அத்தியாயம் 37[தொகு]
இரும்பு நெஞ்சு இளகியது!
வேட்டை மண்டபத்துக்குள் வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் பார்த்துவிட்டு நந்தினியும் சிறிது திகைத்துப் போனாள்.
"ஓஹோ! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டாள்.
"தேவி! தங்கள் கட்டளை என்று தங்கள் தோழி கூறியபடியால் வந்தேன். பெண் புத்தியைக் கேட்டிருக்கக்கூடாது என்று இங்கு வந்த பிறகு தெரிந்துகொண்டேன்" என்றான் வந்தியத்தேவன்.
"அக்கா! நான் இவருக்குப் புத்தி கூறவில்லை; என்னுடன் தங்களைப் பார்க்க வரும்படி வேண்டிக் கொண்டேன்!" என்றாள் மணிமேகலை.
நந்தினி தனக்கு முதலில் உண்டான திகைப்பைச் சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்.
"என் அருமைத் தோழி! பெண்களாகிய நாம், புருஷர்களை வேண்டிக்கொண்டால் அது புத்தி கூறுவது போலத்தான்!" என்றாள்.
"புத்தி கூறுவது போல மட்டுமா? கட்டளையிடுவது போல என்று சொல்லுங்கள் தேவி! தாங்கள் என்னை அழைப்பதாகச் சொல்லி இளவரசி என்னைக் கைப்பிடியாகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். அதன் பலன் நான் இந்தக் கொலைக்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று!" என்றான் வந்தியத்தேவன்.
"ஐயா! இங்கே நடந்திருப்பதைப் பார்த்தால், இவர்கள் கொலைகாரர்கள் என்று தோன்றவில்லையே? நான் இப்போது இங்கு வந்திராவிட்டால், தாங்கள் அல்லவோ இவர்களையெல்லாம் கொன்று தீர்த்திருப்பீர்கள் போலிருக்கிறது!"
"அக்கா! இவர்கள் கொலைகாரர்கள்தான்! சற்று முன் இவர்கள் இவரை வாலில்லாக் குரங்குடனே சேர்த்துக் கட்டிவிட்டார்கள்!..."
நந்தினி இலேசாகச் சிரித்த வண்ணம், "மணிமேகலை! முன்னொரு சமயம் இவர் இந்த வாலில்லாக் குரங்கின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார் என்று சொன்னாய் அல்லவா! அது இவர்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது!" என்றாள்.
"எப்படியோ இல்லை, அக்கா! நீங்கள் வருவதற்கு முதல் நாள் இந்த வேட்டை மண்டபத்தில் நான் பார்த்ததாகச் சொன்னேனே, அந்த மனிதர்கள்தான் இவர்கள்! அன்றைக்கே இவரைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். நல்ல வேளையாக இவர் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டார்!..."
"மறுபடியும் இன்றைக்கு இவரை நீயே இவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது ஏன், மணிமேகலை? இந்த வழியில் எதற்காக இவரை அழைத்துக் கொண்டு வந்தாய்?"
"அக்கா! சற்று முன் என் தமையன் கந்தமாறன் தங்களைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் படவேண்டாம் என்பதற்காக இந்த வழியில் அழைத்து வந்தேன்; அதுவே நல்லதாய்ப்போயிற்று. இல்லாவிட்டால், இந்தக் கொலைகாரர்கள்..."
"தங்காய்! இவர்கள் கொலைகாரர்கள் அல்ல. இவர்கள் இவரைக் கொல்லவும் வரவில்லை. இரண்டு மூன்று தடவை இவர் இவர்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் உயிரோடு விட்டிருக்கிறார்கள். இதன் உண்மையை நீ இவரைக் கேட்டே தெரிந்து கொள்ளலாம்."
"அப்படியானால், இவர்கள் யார், அக்கா! சற்று முன்னால் இவர்கள் கூறியதுதான் உண்மையா? இவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களா? தங்களை அழைத்துக்கொண்டு போவதற்காக வந்தவர்களா?" என்று மணிமேகலை வியப்புடன் கேட்டாள்.
"ஆம், தோழி! என்னைக் காப்பாற்றி அழைத்துப் போக வந்தார்கள். எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். நீங்கள் இருவரும் என்னுடன் அடுத்த அறைக்கு வாருங்கள்! இவர்கள் இருக்கட்டும்!" என்றாள் நந்தினி.
பிறகு ரவிதாஸனைப் பார்த்து, "மந்திரவாதி! இந்த இருவரில் ஒருவருக்கு நீங்கள் ஏதேனும் தீங்கு செய்தால், அதை எனக்குச் செய்த தீங்காகவே கருதுவேன். இவர்களை நீங்கள் இனி எந்த நிலைமையில் எங்கு சந்திக்க நேர்ந்தாலும் மிக்க மரியாதையுடன் நடத்த வேண்டும்!" என்றாள்.
ரவிதாஸன், "தேவி! மன்னிக்க வேண்டும். இந்த வாலிபனுக்கு நம்முடைய சங்கேதக் குரல் தெரிந்திருக்கிறது. சற்று முன் ஆந்தைக் குரல் கொடுத்தது இவனேதான்!" என்றான்.
"அதிலிருந்தே இந்த வீரன் நம்மைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லையா? மந்திரவாதி! உன்னுடைய புத்தி கூர்மை எங்கே போயிற்று? போனது போகட்டும். இனி, நான் மறுபடியும் தெரியப்படுத்தும் வரையில் இங்கே சத்தம் எதுவும் கேட்கக் கூடாது! ஜாக்கிரதை!" என்றாள் நந்தினி.
பிறகு, நந்தினியும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் யானைமுக வாசல் வழியாக நந்தினியின் அறைக்குள்ளே பிரவேசித்தார்கள். கதவும் உடனே அடைத்துக் கொண்டது.
"தங்காய்! நீ மிக்க புத்திசாலி! இவரை வேட்டை மண்டப வழியாக அழைத்து வந்தது நல்லதாய்ப் போயிற்று உன் தமையன் இப்போதுதான் இங்கிருந்து போகிறான். ஆதித்த கரிகாலரை அழைத்து வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான். அதற்குள் உங்களை நான் அனுப்பிவிட வேண்டும். உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் வேண்டும்!" என்றாள் நந்தினி.
"அக்கா! இது என்ன? தங்கள் கணவரைப் பற்றி உண்மையை அறிந்து வர இவரை அனுப்பப் போவதாகவல்லவோ சொன்னீர்கள்? தாங்கள் விடை பெற்றுக் கொள்வதாகச் சொல்கிறீர்களே?" என்றாள் மணிமேகலை.
"உன் தமையனிடம் பேசிய பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன், தங்காய்! பழுவேட்டரையர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் இனி இங்கே தங்க முடியாது. இந்த வீரரும் இனி இங்கே இருப்பது அபாயந்தான் ஐயா! தாங்கள் உடனே இங்கிருந்து கிளம்பிச் செல்லுங்கள். தங்கள் உயிரின் மேல் தங்களுக்கு ஆசை இல்லாவிட்டாலும், இந்தப் பெண்ணை உத்தேசித்தாவது உடனே போய்விடுங்கள்!" என்றாள் நந்தினி.
"அக்கா! அவர் போகிறதாயிருந்தால், என்னையும் கூட அழைத்துப் போகச் சொல்லுங்கள். நீங்களும் இவரும் போன பிறகு இந்த அரண்மனைச் சிறையில் அடைந்து கிடக்க என்னால் முடியாது!" என்றாள் மணிமேகலை.
"இளவரசி! பழுவூர் ராணியின் கருத்தைத் தாங்கள் அறிந்து கொள்ளவில்லை. நான் இங்கிருந்து போய்விட்டால், தாங்கள் ஆதித்த கரிகாலரை மணந்து தஞ்சை சாம்ராஜ்யத்தின் பட்ட மகிஷியாக விளங்கலாம் என்று சொல்கிறார்கள்!" என்றான் வல்லவரையன்.
"இல்லை, நான் அவ்விதம் சொல்லவில்லை. ஆதித்த கரிகாலரை மணக்கும் துர்ப்பாக்கியம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும், என் உயிருக்குயிராகிவிட்ட மணிமேகலைக்கு அந்தக் கதி நேர வேண்டுமா? ஐயா! தாங்கள் வேண்டுமென்று என் கருத்தைத் திரித்துக் கூறுகிறீர்கள். தாங்கள் இப்போது தப்பித்துச் சென்றால், பிறிதொரு காலத்தில் இந்தப் பெண்ணைக் கைப்பிடித்து மணந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெறக்கூடும்! மணிமேகலை! உனக்கு இவர் மீதுள்ள அன்பு உண்மையான அன்பு என்றால், உடனே இவரை இங்கிருந்து போகச் சொல்லு!" என்றாள் நந்தினி.
"ராணி! நான் போகச் சித்தமாயிருக்கிறேன். தங்களிடம் உள்ள ஒரு பொருளை யாசிக்கிறேன். அதைக் கொடுத்தால், உடனே போய்விடுகிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.
"ஐயா! என்னிடம் தாங்கள் கோரிப் பெறக்கூடிய அத்தகைய பொருள் என்ன இருக்கிறது? சொல்லுங்கள்!"
"மீன் அடையாளம் பொறித்த வாள் ஒன்று தங்களிடம் இருக்கிறது. அதைக் கொடுத்தால் போய்விடுகிறேன். என்னுடைய வாளைக் கொள்ளிடத்து வெள்ளத்தில் விட்டு விட்டேன் என்பதுதான் தங்களுக்குத் தெரியுமே?" என்றான் வந்தியத்தேவன்.
"ஐயா! வேட்டை மண்டபத்தில் எத்தனையோ வாள்களும், வேல்களும் இருக்கின்றன. வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் இந்தக் கணமே புறப்படலாமே? பெண்பாலாகிய நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கும் அந்த ஒரே ஆயுதத்தை ஏன் கேட்க வேண்டும்?"
"தேவி தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுந்தானா அந்த வாளை வைத்துப் பூஜை செய்து வருகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!"
"என் உயிருக்கும் மேலான கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவுந்தான் அந்தக் கத்தியை வைத்திருக்கிறேன்."
"தேவி! வேறு நோக்கம் ஒன்றுமில்லையா?"
"வேறு நோக்கம் எனக்கு என்ன இருக்கக்கூடும்?"
"வீர பாண்டியருடைய மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் இருக்கலாம் அல்லவா?"
"மணிமேகலை இருக்கும்போது நீர் அந்தப் பேச்சை எடுக்கமாட்டீர் என்று நினைத்தேன். நானும் இனி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்காய்! நீயும் தெரிந்துகொள். நான் இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்!"
இவ்வாறு சொல்லிய வண்ணம் நந்தினி தேவி பக்கத்தில் கட்டிலின் மீது வைத்திருந்த மீன் அடையாளமிட்ட வாளைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
"சோழ சாம்ராஜ்யத்தின் உட் கலகத்தைத் தீர்த்து வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. மதுராந்தகத் தேவருக்கும், ஆதித்த கரிகாலருக்கும் இராஜ்யப் பிரிவினை செய்து வைப்பதற்காகவும் நான் இங்கே வரவில்லை. கடம்பூர் அரண்மனையில் விருந்துண்டு களிப்பதற்காகவும் வரவில்லை! தங்காய்! உனக்குத் திருமணம் முடித்து வைப்பதற்காகவும் வரவில்லை. வீரபாண்டியரின் தலையைக் கொய்த பாதகனைப் பழிக்குப்பழி வாங்கவே வந்தேன். இது பாண்டிய குலத்து வாள்! இதன் மேல் ஆணையிட்டு நான் சபதம் செய்திருக்கிறேன். அந்தச் சபதத்தை முடிக்கவே வந்தேன். இன்றிரவு ஒன்று என் சபதத்தை முடிப்பேன்; அல்லது என் உயிரை முடிப்பேன்!" என்று நந்தினி ஆவேசம் வந்தவள் போல் பேசி நிறுத்தினாள்.
"அதற்கு நான் தடையாக இருப்பேன் என்றுதானே என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்? என் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமுறுத்தப் பார்க்கிறீர்கள்?" என்றான் வந்தியத்தேவன்.
"ஆகா! என் பழியை முடிப்பதற்கு நீர் தடை செய்யப்போகிறீரா? நல்ல காரியம்! யார் வேண்டாம் என்றார்கள்? உம்முடைய நண்பரிடம் சென்று இதையெல்லாம் சொல்லி இங்கே அவரை வராமல் தடுத்து விடுவதுதானே?"
"தேவி அவரிடம் சொல்லித் தடை செய்ய முடியாது என்றுதான் தங்களிடம் வந்தேன். தங்களுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாவது தங்களை இந்தப் பாவ காரியம் செய்யாமல் தடுப்பதற்கு வந்தேன்..."
"ஆகா? பாவ காரியமா? எது பாவ காரியம்? என் தோழியிடம் கேட்டுப் பார்க்கலாம். மணிமேகலை! நீ சொல்! நீ உன் நெஞ்சை ஒருவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறாய். அவர் காயம்பட்டு நிராதரவாயிருக்கும்போது அவருடைய பகைவன் அவரைக் கொல்ல வருகிறான். நீ அப்பகைவன் காலில் விழுந்து உன் காதலரைக் கொல்ல வேண்டாமென்று வேண்டிக்கொள்கிறாய். அவன் அப்படியும் கேட்காமல் கொன்றுவிட்டுப் போகிறான். அப்படிப்பட்ட கிராதகனைப் பழி வாங்குவது பாவம் என்று நீ சொல்லுவாயா, என் கண்ணே!"
"ஒரு நாளும் சொல்ல மாட்டேன், அக்கா! ஆனால் உங்களைப் போல் நான் அவன் காலில் விழுந்து கெஞ்சியிருக்கவும் மாட்டேன். நானே கத்தி எடுத்து அவனை முன்னாலேயே கொன்றிருப்பேன்!" என்று சொன்னாள் மணிமேகலை.
வந்தியத்தேவன் மணிமேகலையை நோக்கி, "இளவரசி! அந்தப் பகைவன் ஒருவேளை தங்களுடைய சொந்தச் சகோதரர் என்று ஏற்பட்டு விட்டால்?" என்று கேட்டான்.
"சகோதரனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்!" என்றாள் மணிமேகலை.
"அப்படிச் சொல்லடி, என் கண்ணே!" என்றாள் நந்தினி.
"இளவரசி தாம் சொல்லுவது இன்னதென்று யோசியாமல் சொல்லுகிறார். இவருடைய தமையன் கந்தமாறன் என்னதான் இவருக்கு விரோதமாகக் காரியம் செய்தாலும், அவனைக் கொல்ல இவருக்கு மனம் வருமா?" என்று வல்லவரையன் கேட்டான்.
நந்தினியும் மணிமேகலையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பின்னர் நந்தினி வந்தியத்தேவனைப் பார்த்து, "இது என்ன வீண் கேள்வி? நான் என் கூடப் பிறந்த சகோதரனைக் கொல்லப் போவதில்லை. முதன் முதலில் நீர் என்னைச் சந்தித்தபோது என் தமையன் திருமலையின் பெயரைச் சொன்னீர். அதனாலேதான் உம்மிடம் எனக்கு அபிமானம் உண்டாயிற்று. ஆழ்வார்க்கடியானுடைய நண்பர் என்பதற்காகவே நீர் பல முறை அபாயத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்தேன். ஐயா! இன்று நான் என் சபதத்தை முடிக்காமல் என் உயிரை விடும்படி நேர்ந்தால், திருமலையிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்க வேண்டும். அவனுடைய சொற்படி நான் நடக்காவிட்டாலும், அவனை அடியோடு மறந்து விடவில்லை என்பதாகச் சொல்ல வேண்டும்!" என்றாள்.
"அம்மணி! இந்தக் கபட நாடகம் இன்னும் ஏன்? ஆழ்வார்க்கடியான் தங்கள் தமையன் அல்ல; தாங்கள் அந்த வீர வைஷ்ணவனுடைய சகோதரியும் அல்ல..."
"பின் யார் என் தமையன்? யாருடைய சகோதரி நான்?"
"தங்கள் தமையனார் ஆதித்த கரிகாலர்தான். ஆகையினாலேயே தாங்கள் சகோதர ஹத்தி தோஷத்துக்கு ஆளாக வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். வீரபாண்டிய குலத்துக் கொலை வாளை தயவு கூர்ந்து என்னிடம் கொடுத்து விடும்படி மன்றாடுகிறேன்!"
"கரிகாலரும் நானும் உடன் பிறந்தவர்கள் என்ற அபூர்வ கற்பனையைத் தாங்கள் இளவரசரிடம் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதை அவர் நம்பினாரா?" என்று நந்தினி ஏளனப் புன்னகையுடன் கேட்டாள்.
"நம்பியதாகத்தான் தோன்றியது; ஆனால் அவர் மனத்தில் உள்ளதை நான் ஒன்றும் அறியேன்..."
"அவர் மனத்தில் உள்ளதை நான் அறிவேன். அந்தப் பழையாறை மோகினியின் கற்பனா சக்தியைப் பற்றி அவர் பெரிதும் வியக்கிறார்..."
"அம்மணீ! நான் கூறியது கற்பனையல்ல. பழையாறை இளையபிராட்டியின் கற்பனை அல்லவே அல்ல. ஈழ நாட்டில் நான் என் கண்ணால் பார்த்தேன்..."
"என்னத்தைப் பார்த்தீர்?"
"வாயினால் பேசும் சக்தி அற்ற ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன். என்னையும், ஆழ்வார்க்கடியானையும், அருள்மொழிவர்மரையும் அந்தத் தெய்வ மகள் பேரபாயத்திலிருந்து காப்பாற்றினார். அநுராதபுரத்தின் வீதிகளில் நள்ளிரவில் நாங்கள் ஒரு பழைய மாளிகையின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தபோது அவர் வீதியின் எதிர்பக்கத்தில் நின்று எங்களைச் சமிக்ஞையினால் அழைத்தார். அருள்மொழிவர்மரும் நாங்களும் அவரை நோக்கி நகர்ந்ததும் நாங்கள் சற்றுமுன் நின்றிருந்த வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது. பொன்னியின் செல்வர் அந்தப் பெண்ணரசியைத் தம் குல தெய்வம் என்று போற்றி வணங்கினார்..."
"ஐயா! இந்தக் கதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அருள்மொழிவர்மரை சோழ சிங்காதனத்தில் அமர்த்த விரும்பும் இளைய பிராட்டியிடம் இதையெல்லாம் நீங்கள் கூறியிருக்கலாம்; அவரும் வியந்து மகிழ்ந்திருப்பாள். என்னிடம் ஏன் சொல்கிறீர்?...."
"அதற்குக் காரணம் இருக்கிறது. அநுராதபுரத்து வீதிகளில் மங்கலான நிலவு வெளிச்சத்தில் அந்தப் பெண்ணரசியை நான் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தபோது, 'தஞ்சாவூரில் நாம் விட்டுப் பிரிந்து வந்த பழுவூர் இளைய ராணி இங்கே எப்படி வந்து சேர்ந்தார்?' வியப்படைந்தேன். அம்மணி! தங்களுக்கும் அவருக்கும் உருவத்தோற்றத்தில் அணுவளவும் வித்தியாசம் இல்லை. தாங்கள் ஆபரண அலங்காரங்களை நீக்கிவிட்டுக் கூந்தலைப் பிரித்துப் போட்டுக் கொண்டால் தத்ரூபமாக அவரைப் போலவே இருப்பீர்கள்..."
"நீ சொல்லுவதை நான் ஏன் நம்பவேண்டும்? தாங்கள் கற்பனா சக்தி அதிகமுடையவர் என்பதை நான் அறிவேன். இதுவும் ஏன் உமது அபூர்வ கற்பனைகளில் ஒன்றாயிருக்கக் கூடாது?"
"தேவி! சத்தியமாகச் சொல்கிறேன்."
"நீர் எவ்வளவுதான் ஆணையிட்டுச் சொன்னாலும் என்னால் நம்ப முடியாது!"
"ராணி! 'நம்ப முடியாது' என்று தாங்கள் சொல்வது பொய்! நான் சொல்வது உண்மை என்பது தங்களுக்கே தெரியும். அந்த உண்மையைத் தங்கள் காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதன் முதலில் தங்களைத் தஞ்சை அரண்மனையில் நான் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது இந்த மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்திக்கொண்டு வந்தான். என்னை அப்பால் போய் இருக்கச் சொன்னீர்கள். தற்செயலாகத் திறந்திருந்த பொக்கிஷ நிலவறைக்குள் நான் போய் ஒளிந்து கொண்டிருந்தேன். அப்போது சில விந்தையான காட்சிகளை நான் பார்க்கும்படி நேர்ந்தது..."
"ஆகா! அவை என்ன அபூர்வ காட்சிகள்?"
"கந்தமாறன் மதுராந்தகத் தேவரோடு அந்த நிலவறைப் பாதை வழியாகப் போவதைப் பார்த்தேன்..."
"அதனால் என்ன?"
"சிறிது நேரத்துக்கெல்லாம் அதே நிலவறையில் தாங்களும் பெரிய பழுவேட்டரையரும் போவதைப் பார்த்தேன். அப்போது நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது தெரிந்திருக்கவில்லை. பிறகு தான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். தங்கள் அன்னையின் ஆவி வடிவத்தைப்போல் நடித்துச் சக்கரவர்த்தியைத் துன்புறுத்துவதற்காகப் போகிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்..."
இத்தனை நேரம் திடமாக நின்று பேசிக்கொண்டிருந்த நந்தினி இப்போது திடீரென்று சோர்வடைந்து அங்கே கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்தாள்.
"ஐயா! இன்னும் என்ன தெரிந்துகொண்டீர்கள்?"
"தாங்களும் பெரிய பழுவேட்டரையரும் நிலவறைப் பாதையில் போய்க் கொண்டிருந்தபோது மதுராந்தகரை அழைத்துச் சென்ற கந்தமாறன் திரும்பி வந்துகொண்டிருந்தான். பழுவேட்டரையரிடம் அவன் ஏதோ கூறினான். அவர் அவனுடன் தீவர்த்தி பிடித்துக்கொண்டு வந்த காவலனிடம் ஒரு சமிக்ஞை செய்தார்..."
"அது என்ன சமிக்ஞை?"
"தங்களுக்கு அது தெரிந்தேயிருக்க வேண்டும். கந்தமாறனை முதுகில் குத்திக் கொன்றுவிடும்படி பழுவேட்டரையர் கட்டளையிட்டார். அதை நான் தடுத்துக் கந்தமாறன் உயிரைக் காப்பாற்றினேன். அதன் பயனாக, அவனுடைய முதுகில் கத்தியால் குத்திய பழி என் பேரில் விழுந்தது..."
நந்தினி மணிமேகலையைத் திரும்பிப் பார்த்துவிட்டு "ஐயா! ஏதேதோ சொல்லி இந்தப் பெண்ணின் மனத்தை ஏன் கலக்குகிறீர்கள்?" என்றாள்.
"தேவி! இத்தனை காலமும் இதையெல்லாம் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. உங்கள் கையில் வைத்திருக்கும் வாளை என்னிடம் தாங்கள் கொடுத்துவிட்டால், இனியும் யாரிடமும் சொல்லவில்லை..."
"வாளைக் கொடுக்க முடியாது, ஐயா! எதற்காகக் கொடுக்க வேண்டும்? யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இன்னும் ஏதாவது கற்பனை சேர்த்து வேணுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஏன்? இப்போதே கரிகாலரிடம் சென்று, அவர் இங்கு வருவதை நிறுத்தி விடுங்கள்! என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? போங்கள்!" என்று நந்தினி கூறிய போது, அவளுடைய கண்களில் நீர் ததும்பியது.
"அம்மணி! இளவரசருடைய சுபாவம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவரைத் தடுக்க என்னால் முடியாது. தடுக்க முயன்றால் அவருடைய பிடிவாதம் அதிகமாகும். ஆகையினால் தான் தங்களை வேண்டிக்கொள்ள வந்தேன்..."
"என்னை வேண்டிக்கொள்ள உமக்கு என்ன உரிமை? நீர் கூறியதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஈழ நாட்டில் என்னைப் பெற்றெடுத்த அன்னையை நீர் பார்த்ததாகவே இருக்கட்டும். அதற்காக நான் ஏன் என் சபதத்தைக் கைவிட வேண்டும்? என் அன்னைக்குச் சக்கரவர்த்தி பெரிய துரோகம் செய்திருக்கிறார். அவர் மேலும் அவருடைய மக்கள் மேலும் நான் ஏன் இரக்கம் காட்ட வேண்டும்? பழி வாங்குவதற்கு வேண்டிய காரணம் இன்னும் அதிகமாகவல்லவோ ஆகிறது?"
"இல்லை, அரசி இல்லை! தங்களுடைய பழி வாங்கும் எண்ணத்தைத் தங்கள் அன்னை சரியென்று ஒப்புக்கொள்வாரா என்று யோசித்துப் பாருங்கள். சக்கரவர்த்தியின் மக்களை அந்த மூதாட்டி தம் உயிருக்கு உயிராகக் கருதியிருக்கிறார். அவர்களில் ஒருவரைத் தாங்கள் தங்கள் கையினால் கொல்லுவதை அவர் விரும்புவாரா என்று யோசித்துப் பாருங்கள்? ஒருநாளும் விரும்பமாட்டார். தங்களுடைய செயலை அறிந்தால் அவர் தங்களை வெறுப்பார். அவர் உயிரோடிருக்கும் வரையில் தங்களைச் சுற்றி வருத்திக் கொண்டிருப்பார். வாயினால் அவர் பேச முடியாது. ஆனால் அவருடைய கண் பார்வையே தங்களை என்றைக்கும் நரகத்திலும் கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்..."
நந்தினியின் கண்களில் இப்போது கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மேல் நோக்காகப் பார்த்தாள். அங்கே ஏதோ துயர மயமான காட்சியைப் பார்த்தவள்போல் அவள் முகம் வேதனை அடைந்து காட்டியது.
"அம்மா! அம்மா! வீரபாண்டியருடைய தலையும் உடலும் தனித்தனியே வந்து என் பிராணனை வதைத்து எடுப்பது போதாதா? நீ வேறே வந்து என்னைச் சுற்ற வேண்டுமா?" என்று சொல்லிக் கொண்டே, அந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காதவள்போல் கண்களைக் கையினால் மூடிக் கொண்டாள். சிறிது நேரம் அந்த அறையில் நந்தினியின் விம்மல் சத்தம் மட்டுமே கேட்டது.
மணிமேகலை வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! தாங்கள் இவ்வளவு குரூரமானவர் என்று எனக்குத் தெரியாமல் போயிற்று!" என்றாள்.
இதைக் கேட்ட நந்தினி உடனே தன் கண்களைப் பொத்தியிருந்த கரங்களை எடுத்துவிட்டு, "அவர் பேரில் குற்றம் ஒன்றுமில்லை, தங்காய்! என்னுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறார். என்னைப் பெரும் பாதகத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் சொல்லுகிறார்! ஆனாலும் அது என்னை இப்படித் துன்புறுத்துகிறது!" என்றாள்.
பின்னர், கண்ணீர் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை நோக்கி, "ஐயா! இதுவரையில் யாரும் சாதிக்க முடியாத காரியத்தை நீர் சாதித்துவிட்டீர். இதோ உமது விருப்பத்தின்படி இந்த வாளை உம்மிடமே கொடுத்து விடுகிறேன், பெற்றுக் கொள்ளும்!" என்று வாளை நீட்டினாள். வந்தியத்தேவன் அதைப் பெற்றுக் கொள்ளக் கையை நீட்டியபோது நந்தினி மறுபடியும் பின் வாங்கினாள்:-
"கொஞ்சம், பொறுங்கள்! வாளை எடுத்து கொள்வதற்கு முன் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா என்று சொல்லுங்கள் என் சபதத்தை நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து கிளம்பினால் வேட்டை மண்டபத்தில் உள்ளவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்கள். உயிரோடு சிதையில் வைத்து நெருப்பு மூட்டிக் கொளுத்தி விடுவார்கள். அதற்குக்கூட நான் அஞ்சவில்லை. ஆனால் நான் சாவதற்கு முன்னால் என் தாயை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்... வாணர் குல வீரரே! நீர் கூறியதையெல்லாம் நான் நம்பவில்லையென்று சொன்னேன். அது தவறு! ஈழநாட்டுக் காடுகளில் தலைவிரி கோலமாகத் திரிந்து கொண்டிருக்கும் என் அன்னையைப் பற்றி நீர் சொல்லியதையெல்லாம் நான் நம்புகிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறேன். நானே அவரைப் பார்த்ததும் உண்டு..."
"எப்போது? எப்படி?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.
"குழந்தைப் பிராயத்தில் நான் படுத்துத் தூங்கும்போது சில சமயம் திடுக்கிட்டுக் கண் விழித்துக் கொள்வேன். அப்போது ஒரு பெண்ணுருவம் என் முகத்தினருகில் குனிந்து என்னைக் கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கக் காண்பேன். நான் கண் விழித்ததும் அந்த உருவம் மறைந்து விடும். எனக்கு இது அதிசயத்தையும், அச்சத்தையும் அளித்து வந்தது. கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக் கொள்வதில் எனக்கு அப்போதிருந்து ஆசை நிரம்ப உண்டு. ஆகையால் என் முகத்தோற்றம் என் மனத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. நான் தூங்கும்போது என்னைக் குனிந்து உற்றுப்பார்த்த உருவம் என்னைப் போலவே இருப்பது பற்றி வியந்திருக்கிறேன். என் முகமும் ஒரேமாதிரி இருக்கும். கூடுவிட்டுக் கூடு பாய்வது பற்றிய கதைகளை நான் கேட்டிருந்தேன். என் உயிரே என் உடம்பை விட்டுப் பிரிந்து தனியாக மேலே நின்று என் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்று சந்தேகப்படுவேன். சில சமயம், நான் இறந்துபோய் விட்டேனோ, படுத்திருப்பது என் உயிரற்ற உடம்போ என்று எண்ணித் திடுக்குறுவேன். இதெல்லாம் உண்மையாக, நடப்பதா, கனவில் நடப்பதா, அல்லது என் மனப்பிரமையா, எனக்குச் சித்தக் கோளாறு ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் எண்ணி வேதனைப்படுவேன். எனக்குப் பிராயம் வந்த பிறகு, அப்படி நான் கண்டதெல்லாம் உண்மையான தோற்றமேதான் என்று பல காரணங்களினால் எனக்கு நிச்சயமாயிற்று. முக்கியமாக சுந்தர சோழர் என்னைப் பார்த்து அடைந்த குழப்பத்தைக் கவனித்து அந்த நிச்சயம் அடைந்தேன். வேறு பல அறிகுறிகளிலும், ஆழ்வார்க்கடியான் சில சமயம் தவறிக் கூறிய வார்த்தைகளினாலும், என்னைப் போன்ற உருவம் படைத்த என் அன்னை ஒருத்தி இருக்கவேண்டும் என்று நிச்சயம் அடைந்தேன். அவரை ஒரு தடவை பார்க்கவேண்டும், அவருடைய மடியிலே படுத்து விம்மி அழவேண்டும் என்று என் உள்ளத்தில் தாபம் குடி கொண்டது. ஐயா! இன்று தாங்கள் கூறிய வார்த்தைகளினால் அந்தத் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. என்னை என் தாயாரிடம் நீர் அழைத்துப் போவதாயிருந்தால், என் பழிவாங்கும் நோக்கத்தை விட்டு விடுகிறேன். இந்தப் பாண்டிய குலத்து வாளை உம்மிடம் இப்போதே கொடுத்து விடுகிறேன்!" என்று விம்மிக்கொண்டே கூறினாள் நந்தினி.
வந்தியத்தேவன் சிந்தனையில் ஆழ்ந்தான். "இது என்ன வம்பு? கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டுவிட்டதே?" என்று எண்ணினான்.
மணிமேகலை, "ஐயா! நானும் தங்களை வேண்டிக் கொள்கிறேன். அக்காவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக வாக்குக் கொடுங்கள்" என்றாள்.
வந்தியத்தேவன் மிக்க தயக்கத்துடன், "என்னால் முடிந்தால் பார்க்கிறேன்!" என்று சொன்னான்.
"அப்படியானால், உடனே நாம் கிளம்ப வேண்டும். ஆதித்த கரிகாலர் இங்கு வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இங்கிருந்து எப்படிப் புறப்பட்டுச் செல்வது? வாசல் வழி அபாயகரமானது, எதிரே கந்தமாறனும், கரிகாலனும் வந்தாலும் வருவார்கள்!" என்றாள் நந்தினி.
"வேட்டை மண்டபத்துக்குள்ளிருக்கும் சுரங்கப்பாதை வழியாக அழைத்துப் போகிறேன், வாருங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.
"அக்கா! நானும் வந்துவிடுகிறேன். என்னையும் அழைத்துப் போங்கள்!" என்றாள் மணிமேகலை.
நந்தினி அதைக் கவனிக்காமலே, "வேட்டை மண்டபத்துக்குள் போக நான் விரும்பவில்லை. ரவிதாஸனும் அவனுடைய ஆட்களும் நம்மை உயிரோடு விடமாட்டார்கள்..." என்றாள்.
"அம்மணி! தங்கள் கையில் உள்ள வாளை மட்டும் என்னிடம் கொடுங்கள். அவர்கள் நாலு பேரையும் நான் சமாளித்துக்கொள்கிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.
"வேண்டாம்! அதனால் பல சங்கடங்கள் உண்டாகும் மணிமேகலை! இங்கிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா?" என்று கேட்டாள் நந்தினி தேவி.
மணிமேகலை புருவத்தை நெறித்துக்கொண்டு சிறிது யோசித்தாள். "அக்கா! எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவரையே கேளுங்கள். முன்னொரு சமயம் இவர் இந்த அறையிலிருந்து மாயமாக மறைந்து போனார். எப்படிப் போனார் என்று கேளுங்கள்!" என்றாள். நந்தினி வந்தியத்தேவன் முகத்தைப் பார்த்தாள்.
வந்தியத்தேவன், "ஆம், அம்மணி! வேறு ஒரு வழி இருக்கிறது. தற்செயலாக அதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் அதன் வழியாகப் போவது எளிதன்று. மச்சுக்கு மச்சு, மாடத்துக்கு மாடம் தாவிக் குதிக்க வேண்டும், அப்புறம் மதில் ஏறியும் குதிக்க வேண்டும். தங்களால் முடியுமா என்று சந்தேகிக்கிறேன். அதைக் காட்டிலும் மந்திரவாதியையும் அவனுடைய ஆட்களையும் ஒரு கை பார்த்துவிட்டுச் சுரங்க வழி போவது எளிது!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.
அப்போது மணிமேகலை, "ஐயோ அவர்கள் வருகிறார்கள் போலிருக்கிறதே!" என்று திடுக்கிட்டுக் கூறினாள்.
இருவரும் உற்றுக் கேட்டார்கள். ஆம்; அப்போது அரண்மனை முன்கட்டிலிருந்து அந்த அறைக்குள் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது.
"ஐயா! சீக்கிரம் வேட்டை மண்டபத்துக்குள் போய் விடுங்கள்!" என்றாள் நந்தினி.
"மறைந்துகொள்ள எனக்கு வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது. தேவி! அந்த வாளை இப்படிக் கொடுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.
நந்தினி அவனிடம் வாளைக் கொடுப்பதற்காக அதை முன்னால் நீட்டினாள். அப்போது அவளுடைய கைதவறி, வாள் தரையில் விழுந்து ஜணஜண கண கணவென்னும் ஒலியை எழுப்பியது.