Get it on Google Play
Download on the App Store

வானதிக்கு நேர்ந்தது

 

 

←அத்தியாயம் 37: வேஷம் வெளிப்பட்டது

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: வானதிக்கு நேர்ந்தது

அத்தியாயம் 39: கஜேந்திர மோட்சம்→

 

 

 

 

 


440பொன்னியின் செல்வன் — கொலை வாள்: வானதிக்கு நேர்ந்ததுகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 38[தொகு]
வானதிக்கு நேர்ந்தது


சூரியன் மறைந்து நாலுதிக்கிலும் இருள் சூழ்ந்து வந்த நேரத்தில், வானதி குடந்தை - திருவாரூர் சாலையில் பல்லக்கில் போய் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குழம்பியிருந்தது. நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போக வேண்டும் என்றும், அங்கே காய்ச்சல் வந்து படுத்திருக்கும் இளவரசருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? புத்த பிக்ஷுக்களின் விஹாரத்துக்குள் தன்னை அனுமதிப்பார்களா, அங்கே இளவரசரைத் தான் பார்க்க இயலுமா, பார்த்தாலும் பணிவிடை செய்ய முடியுமா - என்பதை யெல்லாம் எண்ணியபோது ஒரே மலைப்பாயிருந்தது. நாகைப்பட்டினத்துக்குத் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணிய போது அதைரியம் உண்டாயிற்று. அதைரியத்தைப் போக்கி மனதில் உறுதி உண்டுபண்ணிக் கொள்ள முயன்றாள். உலகில் பெரிய காரியம் எதுதான் எளிதில் சாத்தியமாகும்? ஒவ்வொருவர் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அந்த ஓடக்காரப் பெண் கடலில் தனியாகப் படகு செலுத்திக்கொண்டு போக எவ்வளவு நெஞ்சுத் துணிவு உள்ளவளாயிருக்க வேண்டும்? புயலிலும், மழையிலும் மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு விட்டுக் கொண்டு போய் இளவரசரைக் காப்பாற்றியதற்கு எவ்வளவு நெஞ்சுத் துணிவு அவளுக்கு இருக்க வேண்டும்? தான் இந்த சிறிய பிரயாணத்தைக் குறித்துப் பயப்படுவது எவ்வளவு பேதமை? சூடாமணி விஹாரத்துக்குள் உடனே போக முடியாவிட்டால் பாதகமில்லை. அக்கம் பக்கத்தில் இருந்து இளவரசரைப் பற்றிய செய்தி தெரிந்து கொண்டிருந்தாலும் போதும். இளவரசரைப் பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை; அந்த ஓடக்காரப் பெண்ணையாவது பார்க்க முடிந்தால் போதும். ஆம், அதுதான் சரி, அவளை எப்படியாவது தெரிந்து கொண்டால், அவள் மூலமாக இளவரசரைப் பார்க்க முடிந்தாலும் முடியலாம். அவரிடம் தனக்குள்ள அன்பு ஏதோ ஒரு பிரயோஜனத்தை காட்டிவிட வேண்டும். அதற்குப் பிறகு இந்த உயிரை விட்டாலும் விட்டுவிட்டலாம். அல்லது புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷுணி ஆனாலும் ஆகிவிடலாம்... 
மறுநாள் எந்த நேரத்துக்கு நாகைப்பட்டினம் போய்ச் சேரலாம் என்று பல்லக்குச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காக வானதி பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்தாள். சாலை ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின்னால் சில உருவங்கள் மறைந்து நிற்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. இன்னும் சிறிது கவனமாக உற்றுப் பார்த்தாள். மறைந்து நின்றவர்கள் வீர சைவ காலாமுகர்கள் என்று தெரிந்தது. இதைக் குறித்து வானதிக்குச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. அவள் கொடும்பாளூர் அரண்மனையில் வளர்ந்த காலத்தில் அடிக்கடி காலாமுகர்கள் அங்கே வருவதுண்டு. அவளுடைய பெரிய தந்தையிடம் பேசி, தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுப் போவதுண்டு. காலாமுகர்களின் பெரிய குருவே ஒரு சமயம் கொடும்பாளூர் வந்திருக்கிறார். அவருக்கு உபசாரங்கள், பூஜைகள் எல்லாம் நடந்தன. அவளுடைய பெரிய தகப்பனார் பூதி விக்கிரம கேசரி பல திருக்கோயில்களில் காலாமுகர்களுக்கு அன்னம் படைப்பதற்கென்று நிவந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார். ஆகையால் காலாமுகர்கள் தனக்குக் கெடுதல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒருவேளை உதவி செய்தாலும் செய்வார்கள். இன்றைக்கு அவர்களுடைய மகாசங்கம் கூடுகிறதென்பதும் வானதிக்குத் தெரிந்திருந்தது. ஆகையால் அன்று பழையாறையிலிருந்து குடந்தைக்கு வந்தபோது கூடச் சாலையில் காலாமுகர் கூட்டங்களை அவள் பார்க்கும்படி நேர்ந்தது. ஆனாலும், இவர்கள் எதற்காக மரத்தின் பின்னால் ஒளிந்து நிற்கிறார்கள்? தன்னை ஒருவேளை வேறு யாரோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டு ஏதாவது தீங்கு செய்யலாம் அல்லவா?... 
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்தபோதே, மறைந்திருந்தவர்கள் திடு திடு வென்று ஓடி வந்தார்கள். பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்போதும் அவள் பயப்படவில்லை. தான் யார் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க எண்ணினாள். எப்படி அதைச் சொல்வது என்று யோசிப்பதற்குள், பல்லக்குடன் வந்த பணிப்பெண்ணை இரண்டு பேர் பிடித்து மரத்தோடு கட்டுவதைப் பார்த்தாள். உடனே அவளையறியாமல் பீதியுடன் கூடிய கூச்சல் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பல்லக்கைச் சூழ்ந்திருந்த காலாமுகர்களில் ஒருவன் ஒரு திரிசூலத்தை எடுத்து அவள் முகத்துக்கு நேரே காட்டி, "பெண்ணே, கூச்சல் போடாதே! கூச்சல் போடாதிருந்தால், உன்னை ஒன்றும் செய்யமாட்டோ ம். இல்லாவிட்டால் இந்தச் சூலத்தினால் குத்திக்கொன்று விடுவோம்" என்றான். 
வானதிக்குச் சிறிது தைரியம் வந்தது கம்பீரமாகப் பேச எண்ணிக்கொண்டு, "நான் யார் தெரியுமா? கொடும்பாளூர் வேளார் மகள், என்னைத் தொட்டீர்களானால் நீங்கள் நிர்மூலமாவீர்கள்" என்றாள். அவளுடைய மனத்தில் தைரியம் இருந்ததே தவிர, பேசும்போது குரல் நடுங்கிற்று. 
அதைக் கேட்ட காலாமுகன் "எல்லாம் எங்களுக்குத் தெரியும். தெரிந்துதான் உனக்காகக் காத்திருந்தோம் சற்று நேரம் சத்தமிடாமலிரு! இல்லாவிட்டால்...." என்று மறுபடியும் திரிசூலத்தை எடுத்து நீட்டினான். 
அதே சமயத்தில் சாட்டையினால் 'சுளீர்' 'சுளீர்' என்று அடிக்கும் சத்தமும், 'ஐயோ' என்ற குரலும் கேட்டது. அப்படி அடிபட்டு அலறியவர்கள் சிவிகை தூக்குவோர் என்பதை வானதி அறிந்தாள். அவர்களைச் சில காலாமுகர்கள் சாட்டையினால் அடித்திருக்க வேண்டும்! அதைப்பற்றி வானதி ஆத்திரப்பட்டுப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிவிட எண்ணினாள். அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஏனெனில் சிவிகை தூக்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஓடத் தொடங்கினார்கள். காலாமுகர்களும் பல்லக்கைச் சூழ்ந்த வண்ணம் ஓடிவந்தார்கள். ஓடும்போது அவர்கள் பயங்கரமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினார்கள். ஆகையால் வானதி தான் கூச்சல் போடுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தாள். ஓடும் பல்லக்கிலிருந்து கீழே குதிப்பதும் இயலாத காரியம். அப்படிக் குதித்தாலும் இந்தப் பயங்கர மனிதர்களுக்கு மத்தியில் தானே குதிக்க வேண்டும்? இவர்கள் எங்கேதான் தன்னைக்கொண்டு போகிறார்கள், எதற்காகக் கொண்டு போகிறார்கள் பார்க்கலாம் என்ற எண்ணமும் இடை இடையே தோன்றியது. 
சுமார் அரை நாழிகை நேரம் ஓடியபிறகு மரங்களின் மறைவிலிருந்து ஒரு பழைய துர்க்கைக் கோயிலுக்கு அருகில் வந்து நின்றார்கள். இதற்குள் நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. ஒருவன் கோயிலுக்குள் சென்று அங்கே எரிந்து கொண்டிருந்த தீபத்தை எடுத்துக் கொண்டு வந்து வானதியின் முகத்துக்கு எதிரே காட்டினான், காலாமுகர்களில் ஒருவன் வானதியை உற்றுப்பார்த்து "பெண்ணே! நாங்கள் கேட்கும் விவரத்தைச் சொல்லி விடு! உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது நீ எங்கே போக விரும்புகிறாயோ, அங்கே கொண்டு போய்ப் பத்திரமாய்ச் சேர்த்து விடுகிறோம்" என்றான். 
வானதியின் மனத்தில் இதுவரை தோன்றாத சந்தேகம் உதித்தது. "எனக்கு என்ன விவரம் தெரியும்? என்னை என்ன கேட்கப் போகிறீர்கள்?" என்றாள். 
"பெண்ணே! நீ யாரோ ஒருவரை அந்தரங்கமாகச் சந்திப்பதற்கே இப்படித் தனியாகப் பிரயாணம் தொடங்கினாய் அல்லவா? அவர் யார்? யாரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டாய்?" 
வானதியின் சந்தேகம் உறுதிப்பட்டது. ஒரு கண நேரத்தில் அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று. ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டாலும் பயந்து மிரண்டு கொண்டிருந்த பெண்மான் உலகில் எதற்கும் அஞ்சாத பெண் சிங்கமாக மாறியது. 
"நான் யாரைச் சந்திக்கப் புறப்பட்டால் உங்களுக்கு என்ன? நீங்கள் யார் அதைப் பற்றிக் கேட்பதற்கு? சொல்ல முடியாது!" என்றாள் வானதி. 
காலாமுகன் சிரித்தான். "அதை நீ சொல்ல வேண்டாம்; எங்களுக்கே தெரியும். இளவரசன் அருள்மொழிவர்மனைச் சந்திப்பதற்குத்தான் நீ புறப்பட்டாய்! அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று சொல்லி விடு. உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறோம்" என்றான். 
"நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னிடமிருந்து எந்த விவரமும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது" என்று வானதி அழுத்தம் திருத்தமாய்க் கூறினாள். 
"உன்னை என்ன வேணுமானாலும் செய்து கொள்ளலாம் என்றா சொல்கிறாய்? நாங்கள் செய்யப் போவதும் என்ன வென்று அறிந்தால் இப்படிச் சொல்லத் துணியமாட்டாய்!" 
"என்ன செய்யப்போகிறீர்கள்? அதையும் சொல்லிப் பார்த்து விடுங்கள்!" 
"முதலில் உன் அழகான பூப் போன்ற கரங்களில் ஒன்றை இந்தத் தீவர்த்திப் பிழம்பில் வைத்துக் கொளுத்துவோம். பிறகு இன்னொரு கையையும் கொளுத்துவோம். பின்னர், உன் கரிய கூந்தலில் தீவர்த்தியைக் காட்டி எரிப்போம்..." 
"நன்றாகச் செய்து கொள்ளுங்கள். இதோ என் கை! தீவர்த்தியை அருகில் கொண்டு வாருங்கள்!" என்றாள் வானதி. 
இராஜ்யத்தில் நடந்து வந்த சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் வானதிக்குத் தெரிந்துதானிருந்தன. 
'இந்தத் துஷ்டர்கள், சதிகாரர்களின் ஆட்களாயிருக்க வேண்டும். இளவரசர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். அவருக்குக் கெடுதி செய்யும் நோக்கத்துடனே தான் இருக்க வேண்டும். இளவரசருக்காக, அவருடைய பாதுகாப்புக்காக நான் இத்தகைய கொடூரங்களை அனுபவிக்கும்படி நேர்ந்தால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?' இவ்வாறு எண்ணினாள், கொடும்பாளூர் இளவரசி வானதி. அந்த எண்ணந்தான் அவளுக்கு அத்தகைய மனோதைரியத்தை அளித்தது. 
"பெண்ணே! யோசித்துச் சொல்! வீண் பிடிவாதம் வேண்டாம். பிறகு வருத்தப்படுவாய்! உன் ஆயுள் உள்ள வரையில் கண் தெரியாத குரூபியாயிருப்பாய்!" என்றான் காலாமுகன். 
"என்னை நீங்கள் அணு அணுவாகக் கொளுத்துங்கள்; என் சதையைத் துண்டு துண்டாக வெட்டுங்கள். ஆனாலும் என்னிடமிருந்து ஒரு விவரமும் அறிய மாட்டீர்கள்?" என்றாள். 
"அப்படியானால் எங்களுடைய காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான்! சீடா! கொண்டுவா அந்தத் தீவர்த்தியை இங்கே!" என்றான் காளாமுகன். 
அச்சமயம் வானதியின் கவனம் சற்றுத் தூரத்தில் சென்றது. யானைகள், குதிரைகள், காலாட்படைகள், பல்லக்குகள் முதலியன அடங்கிய நீண்ட ஊர்வலம் ஒன்று அவர்கள் இருந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். தெய்வத்தின் அருளால் தனக்கு ஏதோ எதிர்பாராத உதவி வருகிறது என்று எண்ணினாள். 
"ஜாக்கிரதை! அதோ பாருங்கள்!" என்று சுட்டிக் காட்டினாள். காளாமுகன் மறுபடியும் சிரித்தான். 
"வருகிறது யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான். 
"முதன்மந்திரி அநிருத்தர் மாதிரி இருக்கிறது. நான் இப்போது கூச்சல் போட்டால் அவர்களுக்குக் காது கேட்கும். ஜாக்கிரதை! என்னை விட்டுவிட்டு ஓடிப்போய் விடுங்கள்! இல்லாவிட்டால்..." என்றாள் வானதி. 
"ஆம், பெண்ணே! வருகிறவர் முதன் மந்திரி அன்பில் அநிருத்தர்தான். அவருடைய கட்டளையின் பேரில்தான் உன்னை நாங்கள் பிடித்துக்கொண்டு வந்தோம்" என்றான் காலாமுகன். 
இப்போது வானதியை மறுபடியும் திகில் பற்றிக் கொண்டது. அவளை அறியாமல் பீதி நிறைந்த கூச்சல் அவள் தொண்டையிலிருந்து வந்தது. இதை அடக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய வாயைத் தானே பொத்திக்கொள்ள முயன்றாள்.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!