Get it on Google Play
Download on the App Store

வேஷம் வெளிப்பட்டது

 

 

←அத்தியாயம் 36: இருளில் ஓர் உருவம்

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: வேஷம் வெளிப்பட்டது

அத்தியாயம் 38: வானதிக்கு நேர்ந்தது→

 

 

 

 

 


439பொன்னியின் செல்வன் — கொலை வாள்: வேஷம் வெளிப்பட்டதுகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 37[தொகு]
வேஷம் வெளிப்பட்டது


பயங்கரத் தோற்றம் கொண்டிருந்த அந்தக் காளாமுக சைவரை அந்த நேரத்தில் அந்த இடத்தில் பார்க்கும் வந்தியத்தேவன் ஒரு கணம் திகிலடைந்தான். பிறகு அவனுக்கு இயற்கையான துணிச்சல் திகிலை விரட்டியடித்தது. "இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? எங்கே?" என்று சிந்தித்தான். ஆம், ஆம்; அரிச்சந்திர நதிக்கரையில் மரத்தடியில் படுத்திருந்த போது இரண்டு பேர் வந்து உற்றுப் பார்த்துவிட்டுப் போகவில்லையா? அவர்களில் ஒருவன் இவன்! அவ்வளவுதானா? ஒரு தடவை மட்டும் பார்த்த முகமா இது? அந்தக் கூரிய பார்வையுள்ள கண்களை வேறு எங்கேயும் பார்த்ததில்லையா? 
இதற்குள் காளாமுக சைவன் அவனை உற்றுப் பார்த்து விட்டு, "ஹா! ஹா! ஹா!" என்று சிரித்தான். அந்தக் குரல் அடிக்கடி கேட்ட குரல்போல் இருக்கிறதே? 
"அட சே! நீ தானா? உனக்காகவா இந்த நள்ளிரவில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்?" என்று காளாமுக சைவன் கூறியபோது, அவன் வேண்டுமென்று சிறிது குரலை மாற்றிக் கொண்டு பேசியதாகத் தோன்றியது. 
"பின்னே, யாருக்காக வந்தாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். 
"இளவரசரைத் தேடிக் கொண்டு வந்தேன்!" என்றான் காளாமுகன். 
"எந்த இளவரசரை?" 
"உனக்கென்ன அதைப்பற்றி? நீ ஏன் கேட்கிறாய்?" 
"நானும் ஒரு இளவரசன்தான்; அதனால் தான் கேட்டேன்." 
"இளவரசனுடைய முக லட்சணத்தைப் பார்...!" 
"என் முகலட்சணத்துக்கு என்ன ஐயா, குறைவு? உம்மைப் போல் தாடி மீசையும், சடைமுடியும், எலும்பு மாலையும் அணிந்தால் என் முகம் இலட்சணமாகி விடுமா?" 
"அணிந்து பாரேன்! அப்போது தெரியும்." 
"தாடி மீசையும் ஜடைமுடியும் எத்தனைநாளில் வளரும்?" 
"அது என்ன பிரமாதம்? ஒரு நாளில் வளர்ந்து விடும். வேண்டுமென்றால் ஒரு நாழிகையில் கூட..." 
"அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன்..." 
"என்ன நினைத்தாய்?" 
"ஒன்றுமில்லை. என்னைக் கட்டியிருக்கும் கட்டுக்களை அவிழ்த்துவிடு. நானும் உங்கள் கோஷ்டியில் சேர்ந்து விடுகிறேன்." 
"போதும் போதும்! உன்னைப் போன்ற ஒற்றர்கள் இன்னும் யாரோ எங்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் மகாசங்கம் இன்று அப்படி முடிந்தது." 
"எப்படி முடிந்தது?" 
"மகா சங்கத்துக்கு இளவரசர் வரப்போகிறார்; அவர் சிம்மாசனம் ஏறியதும், எங்கள் மகாகுருவை இராஜ குருவாக ஏற்றுக் கொள்வதாய் வாக்களிக்கப் போகிறார் என்று காத்திருந்தோம்! இளவரசர் வரவேயில்லை." 
"என்னைக் கட்டு அவிழ்த்துவிடு; இளவரசர் ஏன் வரவில்லையென்று நான் தெரியப்படுத்துகிறேன்." 
"எந்த இளவரசர்?" 
"வேறு யார்? கண்டராதித்தரின் குமாரர் மதுராந்தகர் தான்!" 
"நான் ஊகித்தது சரி!" 
"என்ன ஊகித்தாய்?" 
"நீ ஒற்றன் என்று ஊகித்ததைத்தான் சொல்கிறேன்." 
"எதைக் கொண்டு ஊகித்தாய்?" 
"இளவரசரைத் தேடிக்கொண்டு வந்தபோது, இந்தக் காட்டுக்குள்ளிருந்து சிலர் வெளியேறுவதைப் பார்த்தேன். அவர்கள் இன்னார் என்று எனக்குத் தெரியும். நீ ஒற்றன் என்று சந்தேகித்துத்தான் அவர்கள் உன்னைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும். ஆனால் உன்னை உயிரோடு ஏன் விட்டுவிட்டுப் போனார்கள் என்றுதான் தெரியவில்லை." 
"அதை நான் சொல்லுகிறேன்; என்னைக் கட்டு அவிழ்த்து விடு!" 
"நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். உன்னைக் கட்டு அவிழ்த்து விடவும் முடியாது. நான் சொல்கிறபடி செய்கிறதாக ஒப்புக் கொண்டால்..." 
"நீ சொல்கிறபடி என்ன செய்ய வேண்டும்?" 
"உனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லையென்று ஒப்புக் கொண்டு நூற்றெட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டும்!" 
"அப்படியா சமாசாரம்?" என்றான் வந்தியத்தேவன். 
இந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்த போதெல்லாம் அவனுடைய கைகள் சும்மா இருக்கவில்லை. மெள்ள மெள்ள கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டேயிருந்தன. 
"நூற்றெட்டுத் தோப்புக் கரணம் போட வேண்டும்" என்று காலாமுகன் கூறியபோது எல்லாக் கட்டுக்களும் அவிழ்ந்து விட்டன. 
பாய்ந்தான் வந்தியத்தேவன், அவனைக் கீழே தள்ளினான். காலாமுகன் கையில் ஏந்தியிருந்த சுளுந்து பக்கத்தில் விழுந்தது; ஆனால் அடியோடு அணைந்து விடாமல் சிறிது வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. 
கீழே விழுந்த காலாமுகன் மார்பின்மீது வந்தியத்தேவன் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் முக தாடியைப் பிடித்துக் குலுக்கினான். தாடி வந்தியத்தேவனுடைய கையோடு வந்து விட்டது. அதே சமயத்தில் காலாமுகன் வந்தியத்தேவனை உதறித் தள்ளிவிட்டு எழுந்து நின்றான். 
தரையில் கிடந்த அணைந்து போகும் தறுவாயிலிருந்த சுளுந்தை வந்தியத்தேவன் எடுத்துத் தூக்கிப் பிடித்தான். தாடியும் சடையும் இழந்த காலாமுகனுடைய முகம் சாக்ஷாத் வீரவைஷ்ணவ ஆழ்வார்க்கடியானுடைய முகமாகக் காட்சி அளித்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 
"வைஷ்ணவரே! சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது என்று எனக்குச் சொன்னீரே? நீர் மட்டும் என்ன செய்தீராம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். 
"உன்னைப்போல் நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொள்ளவில்லையே, அப்பனே! நான் மட்டும் இப்போது வந்திராவிட்டால்..." 
"நீர்தான் என் கட்டுக்களை அவிழ்த்து விட்டதாக எண்ணமா?" 
"நீயே கட்டு அவிழ்த்துக் கொண்டிருந்தாலும் இந்த காட்டிலிருந்து என் உதவியில்லாமல் வெளியே போகமுடியாது. நரிகளுக்கு இரையாக வேண்டியதுதான்." 
"நரிகள் கிடக்கட்டும். இங்கே சற்றுமுன் வந்து கூடியிருந்த மந்திரவாதி நரிகளை நீர் பார்த்திருந்தால்... அந்த நரிகளிடமிருந்து நான் தப்பியதுதான் பெரிய காரியம்!" 
"அந்த மந்திரவாதிகளை எனக்கும் தெரியும். மந்திரவாதிகள் மட்டுந்தான் வந்திருந்தார்களா? இன்னும் யாராவது வந்திருந்தார்களா?" 
"சிறிய மீன் ஒன்று வந்திருந்தது. புலியை விழுங்க ஆசைப்படும் அதிசயமான மீன் அது!" 
"ஆகா! சொல்! சொல்! யார் யார் வந்திருந்தார்கள். என்னென்ன நடந்தது? விவரமாகச் சொல்!" 
"நீர் எதற்காக இந்த வேஷம் தரித்தீர்? சாயங்காலம் எங்கே போயிருந்தீர்? போயிருந்த இடத்தில் என்ன நடந்தது?- அதையெல்லாம் சொன்னால் இங்கே நடந்ததை நான் சொல்கிறேன்!" 
"நான் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. இன்று முன்னிரவில் கொள்ளிடக்கரையில் காலாமுகர் மகாசங்கம் கூடும் என்று தெரிந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் இந்த வேஷம் போட்டுக் கொண்டு போனேன். பார்த்துவிட்டுக் கொள்ளிடக்கரைத் தோணித்துறையில் உன்னை வந்து சந்திக்கலாம் என்று எண்ணினேன். மகாசங்கமும் கூடிற்று; பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். காலாமுகர்களின் பெரிய குருவும் வந்திருந்தார். ஆனால் முக்கியமாக யார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ, அவர் வரவேயில்லை!" 
"இளவரசர் மதுராந்தகரைத்தானே எதிர்பார்த்தார்கள்?" 
"ஆம்; அது எப்படி உனக்குத் தெரிந்தது?" 
"மதுராந்தகர் தஞ்சை சிம்மாசனத்தில் ஏறினால் இராஜ்ய பாரம் அழகாகத்தான் நடைபெறும்!" 
"ஏன் அவ்விதம் சொல்கிறாய்?" 
"ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவரால் முடியவில்லையே? பழுவேட்டரையர் போன்ற சிற்றரசர்களையும், கலக மூட்டும் காலாமுக சைவர்களையும், சண்டைக்கார வீர வைஷ்ணவர்களையும் அவரால் எப்படி அடக்கி ஆள முடியும்?" 
ஆழ்வார்க்கடியான், நகைத்துவிட்டு, "நீ வரும் வழியில் மதுராந்தகரைப் பார்த்தாயா? அவருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?" என்று கேட்டான். 
வந்தியத்தேவன் தான் மதுராந்தகரைத் தொடர்ந்து வந்ததையும், திடீரென்று தீவர்த்தியைக் கண்டு அவருடைய குதிரை தறிகெட்டு ஓடியதையும், தான் அவரைச் சிறிது தூரம் தேடிப் போனதையும், கடைசியில் களத்துமேட்டில் குதிரையை மட்டும் பார்த்ததையும் கூறினான். 
பிறகு, "ஐயோ! பாவம்! குதிரை அவரை எங்கே தள்ளிற்றோ, என்னவோ? அவருடைய உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் நேர்ந்திருக்கலாம். அதனால்தான் அவர் உங்கள் மகாசங்கத்துக்கு வரவில்லை; நாம் மறுபடியும் போய் அவரைத் தேடிப் பார்க்கலாமா?" என்று கேட்டான். 
"அழகுதான்! அதைப்பற்றி நமக்கு என்ன? நம்முடைய வேலையை நாம் பார்க்கலாம் வா! புறப்படு உடனே! பொழுது விடிவதற்குள் நாம் கொள்ளிட நதியின் தோணித்துறையில் இருக்க வேண்டும்" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"மதுராந்தகர் வாய்க்காலிலோ, வயல் வரப்பிலோ விழுந்து செத்துக் கிடந்தாரானால்?.. அப்போதுகூட நமக்கு என்ன கவலை என்று சொல்வீரா?" 
"அப்படியெல்லாம் நேர்ந்திராது. அநிருத்தர் அதற்கு முன் ஜாக்கிரதை ஏற்பாடு செய்திருப்பார்." 
"முதன் மந்திரி அநிருத்தரா? அவருக்கு என்ன இதைப் பற்றித் தெரியும்?" 
"ஆகா! அது என்ன அப்படிக் கேட்கிறாய்? அன்பில் அநிருத்தருக்குத் தெரியாமல் இந்த இராஜ்யத்தில் எந்த இடத்திலும் எதுவுமே நடக்க முடியாது." 
"ஓகோ! கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக்கூட்டத்தைப் பற்றிய விஷயமும் அவருக்குத் தெரியுமா?" 
"ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள். வீர நாராயணபுரத்துத் திருவிழாவின் போது பழுவூர் ராணியின் பல்லக்குப் போனதை நாம் இருவர் ஒரு மரத்தடியில் நின்று பார்த்தோம் அல்லவா!" 
"ஆம்; பல்லக்கின் திரை விலகியதும் நீர் அடைந்த பரபரப்பு இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 'பழுவூர் ராணியிடம் ஒரு ஓலை கொடுக்க முடியுமா' என்று நீர் என்னைக் கேட்டீர்?" 
"நீ அதற்குச் 'சீச்சீ! அது என்ன வேலை' என்றாய். நான் ஏதோ? காதல் ஓலை கொடுக்க விரும்பியதாகவே எண்ணினாய். 'சதிகாரர்களின் பேச்சை நம்பி மோசம் போகவேண்டாம்' என்று மதுராந்தகருக்கு எச்சரிக்கை செய்யவே நான் விரும்பினேன், முதன் மந்திரியின் கட்டளைப்படி!" 
"பல்லக்கில் இருந்தது மதுராந்தகர் என்று உமக்குத் தெரியுமா?" 
"முதலில் சந்தேகித்தேன் திரைவிலகியதும் அந்த இரகசியம் தெரிந்தது. நீ நல்ல அழுத்தக்காரன். நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் நீ பல்லக்கில் இருந்தது பழுவூர் ராணி அல்ல மதுராந்தகர் என்று சொல்ல மறுத்து விட்டாய் அல்லவா?" 
"நீர் மாத்திரம் அழுத்தக்காரர் இல்லையா? இன்று சாயங்காலம் நீர் எங்கே போகப் போகிறீர் என்று கூடச்சொல்ல மறுத்து விட்டீரே." 
"சொன்னால் நீ அதிலும் தலையிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருப்பாய். இப்போதே எவ்வளவு சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டாய், பார்! இனிமேலாவது..." 
"காலாமுகர் கூட்டத்தைப் பற்றியும் மதுராந்தகர் அங்கே போக உத்தேசித்திருப்பது பற்றியும், முதன் மந்திரிக்குத் தெரியுமா?" 
"தெரியாமலா என்னை அனுப்பினார்? அதே சமயத்தில் மதுராந்தகர் அங்கே போய்ச் சேராதிருப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். யாரோ தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான் என்று சொன்னாயே, அவனும் அநிருத்தரின் ஆளாகத்தான் இருந்திருப்பான். வேண்டுமென்றே குதிரையை மிரட்டித் தறிகெட்டு ஓடும்படி செய்திருப்பான். தரையில் விழுந்த இளவரசரை யாராவது எடுத்துக் காப்பாற்றியிருப்பார்கள். இத்தனை நேரம் அநேகமாக அவர் ரதத்திலோ, பல்லக்கிலோ ஏறித் தஞ்சையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார். வா! நாமும் நம் வழியே போகலாம்."
"வைஷ்ணவரே! நான் வர முடியாது." 
"இது என்ன, நீ ஒப்புக்கொண்ட காரியம் என்ன ஆயிற்று? காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலர் புறப்பட்டு விட்டதாகக் கேள்விப்படுகிறேன். நாம் உடனே வாயுவேக மனோவேகமாகப் போனால்தான்...." 
"ஆதித்த கரிகாலரிடம் கொடுக்க வேண்டிய ஓலையை நீரே கொடுத்துவிடலாமே? அவர் மதுராந்தகரைப் போல் ஸ்திரீ வேஷத்திலும் வர மாட்டார்; இரவில் ஒளிந்தும் பிரயாணம் செய்ய மாட்டார்..." 
"நீ என்ன செய்யப்போகிறாய்?" 
"உண்மையில் நான் மதுராந்தகரைப் பின் தொடர்ந்து இன்று சாயங்காலம் புறப்படவில்லை. வேறொருவரைத் தொடர்ந்து போக ஆரம்பித்ததில் மதுராந்தகரை வழியில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது." 
"நான் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன். நீ தொடர்ந்து போக ஆரம்பித்தது ஒரு பெண்மணியாக இருக்கும்." 
"நீர் பொல்லாத வைஷ்ணவர்! ஒரு நாள் உம்முடைய மண்டையை உடைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறேன்." 
"இது உன்னால் முடியாத காரியம். ஏற்கெனவே என் மண்டையை ஒரு காளாமுகனுக்கு அடகு வைத்திருக்கிறேன். அது போனால் போகட்டும், நீ குடந்தையிலிருந்து யாரைத் தொடர்ந்து புறப்பட்டாய்? அந்தப் பெண் யார்?" 
"கொடும்பாளூர் இளவரசி குடந்தை சோதிடர் வீட்டுக்கு வந்திருந்தாள். பல்லக்கில் ஏறிக்கொண்டு தனியாகப் புறப்பட்டுப் போனாள். உண்மையில் அந்தச் சித்தப் பிரமை கொண்ட பெண்ணைத் தொடர்ந்து நான் கிளம்பவில்லை. அவளுடைய பல்லக்கு நான் போக வேண்டிய பாதையில் கொஞ்சதூரம் போயிற்று. திடீரென்று அந்தப் பல்லக்கைச் சில மனிதர்கள் வந்து தாக்கினார்கள். கூடப்போன தாதிப் பெண்ணை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு வானதியை மட்டும் கொண்டு போனார்கள். வைஷ்ணவரே! அந்தப் பெண்ணின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் உம்மோடு வர எனக்கு இஷ்டமில்லை." 
"அந்தப் பெண்ணைப் பற்றி உனக்கு என்ன அவ்வளவு கவலை?" 
"அது என்ன அப்படிச் சொல்கிறீர்? ஈழத்துப் பட்டமகாவீரர் சிறிய வேளாரின் புதல்வியல்லவா? பழையாறை இளைய பிராட்டியின் மனத்திற்குகந்த தோழியல்லவா? இன்னும், பொன்னியின் செல்வருக்கு வானதி தேவியை மணம் செய்விக்கப் போவதாகவும் ஒரு பிரஸ்தாபம் இருந்ததல்லவா?" 
"அப்பனே! பொன்னியின் செல்வர்தான் கடலில் முழுகி இறந்துவிட்டாரே? அவருடைய திருமணத்தைப் பற்றி இப்போது என்ன கவலை?" 
"அவர் இறந்து விட்டார் என்பது என்ன நிச்சயம்? ஊகந்தானே?" 
"அப்படியானால் அவர் உயிரோடிருக்கலாம் என்று நீ நினைக்கிறாயா?" 
"வைஷ்ணவரே! என்னுடைய வாயைப் பிடுங்கி ஏதேனும் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்பது உங்கள் உத்தேசமாயிருந்தால், அதை மறந்துவிடும்!" 
"சரி! சரி! நீ பெரிய அழுத்தக்காரன் என்பது எனக்குத் தெரியும் ஆனால் வானதி தேவியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். இளைய பிராட்டிக்கு அவள் பேரில் உயிர் என்பதுதான் உனக்கு நன்றாகத் தெரியுமே?" 
"அதனாலேதான் நானும் கவலைப்படுகிறேன். வானதி தேவிக்கு இந்த ஆபத்து வந்தது இளைய பிராட்டிக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லவா?" 
"இன்றைக்குத் தெரியாவிட்டால் நாளைக்குத் தெரிந்து விடுகிறது." 
"நாளைக்குத் தெரிந்து என்ன பயன்? காலாமுகர்கள் அந்தக் கன்னிப் பெண்ணை இன்றிரவு பலி கொடுத்து விட்டால்...." 
"வானதியைக் காலாமுகர்கள் தாக்கிப் பிடித்துக் கொண்டு போனதாகவா சொல்லுகிறாய்?" அப்படித்தான் எனக்குத் தோன்றியது. வானதியின் தோழியும் அப்படித்தான் என்னிடம் கூறினாள்." 
"அது உண்மையானால், நீ கொஞ்சம் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை. கொடும்பாளூர் வம்சத்தார் காளாமுகத்தைச் சேர்ந்தவர்கள். வானதி தேவி கொடும்பாளூர்ப் பெண் என்று தெரிந்தால், அவளுக்குக் காலாமுகர்கள் இராஜோபசாரம் செய்வார்கள்!" 
"ஓகோ! இது எனக்குத் தெரியாமல் போயிற்றே?" 
"ஆகையால்தான் காலாமுகர்கள் மதுராந்தகத் தேவருக்கு எதிராக இருக்கிறார்கள்..." 
"இந்த மண்டை ஓட்டுச் சாமியார்கள் எதிராக இருந்தால், என்ன வந்துவிடப் போகிறது? 
"உனக்குத் தெரியாது. இந்த நாட்டின் மிகப் பெரிய குடும்பங்கள் காலாமுகத்தைச் சேர்ந்தவை. சைன்யத்திலும் அத்தகைய பலர் இருக்கிறார்கள் அதனாலேயே பழுவேட்டரையர் இன்றைக்கு இந்த ஏற்பாடு செய்திருந்தார். மதுராந்தகருக்குக் காலாமுகர்களின் ஆதரவைத் தேட முயன்றார். அது ஒரு குதிரை செய்த கோளாறினால் பலிக்காமற் போயிற்று. நீ புறப்பட்டு, என்னுடன் வருகிறாயா அல்லது நான் கிளம்பட்டுமா?" 
வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக எழுந்து குதிரையையும் கையில் பிடித்துக்கொண்டான். அடர்ந்த காடுகளின் ஊடே ஆள் நுழையக்கூடிய வழியைக் கண்டுபிடித்து அவர்கள் வெளியே வந்தார்கள். 
"அதோ பார்!" என்று ஆழ்வார்க்கடியான் வானத்தைச் சுட்டிக் காட்டினான். 
முன் எப்போதையும் விடத் தூமகேதுவின் வால் நீண்டு வானத்தின் ஒரு பாதி முழுவதிலும் வியாபித்திருப்பதை வந்தியத்தேவன் பார்த்தான். குளிர்ந்த வாடைக்காற்று வீசிற்று. வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. தூரத்தில் கிராமத்து நாய் ஒன்று தீனமான சோகக் குரலில் அழுதது.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!