விடுதலைக்குத் தடை
←அத்தியாயம் 51: மணிமேகலை கேட்ட வரம்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: விடுதலைக்குத் தடை
அத்தியாயம் 53: வானதியின் யோசனை→
574பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: விடுதலைக்குத் தடைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
தியாக சிகரம் - அத்தியாயம் 52[தொகு]
விடுதலைக்குத் தடை
மணிமேகலைக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று குந்தவைப் பிராட்டி யோசித்தாள். அவளுடைய உள்ளம் தாங்க முடியாத துயரத்தினாலும் கவலையினாலும் குழம்பியிருந்தபடியால், யோசனை ஒன்றும் தோன்றவில்லை.
அச்சமயத்தில் அரண்மனை வாசலில் பெரியதொரு கோஷம் எழுந்தது.
"வானதி! அது என்னவென்று பார்! சக்கரவர்த்தியின் மனோ நிலையையும் உடல் நிலையையும் கூட இந்த ஜனங்கள் மறந்து விடுகிறார்கள்! இப்படி ஆரவாரம் செய்கிறார்கள்!" என்றாள்.
வானதி அரண்மனையில் முகப்பில் சென்று எட்டிப் பார்த்து விட்டு உடனே அவசரமாகத் திரும்பி வந்தாள்.
மிகுந்த பரபரப்புடன், "அக்கா! அவர் வந்து கொண்டிருக்கிறார்!" என்றாள்.
"அவர் என்றால் யார்?" என்று புன்னகையுடன் கேட்டாள் குந்தவை.
"அவர்தான், அக்கா! உங்கள் தம்பி!"
உடனே குந்தவை, "சரி அப்படியானால் நீ இந்தப் பெண்ணைச் சற்று அப்பால் அழைத்துக் கொண்டு போ!" என்று சொன்னாள்.
வானதி தயங்குவதைப் பார்த்துவிட்டு, "சீக்கிரம் போ! உன்னைப் பார்க்காமல் அவன் போய்விட மாட்டான். நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.
வானதி மணிமேகலையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அப்பால் சென்றதும், பொன்னியின் செல்வன் அந்த இடத்துக்கு வந்தான்.
"தம்பி! இது என்ன நீ போகுமிடமெல்லாம் ஜனங்கள் கூடிக் கூச்சல் போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களை அரண்மனை வாசலுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாயே! மனம் புண்ணாகி வேதனையில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் காதில் இந்த ஜனங்களின் கூச்சல் விழுந்தால் அவருக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்?" என்றாள்.
"நான் என்ன செய்யட்டும், அக்கா! எனக்கு மட்டும் மனவேதனை இல்லாமலா இருக்கிறது? கரிகாலருடைய வீரத்திருமேனி எரிந்து சாம்பலாவதற்குள்ளே இந்த ஜனங்கள் 'அருள்மொழிக்குப் பட்டம்' என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கூச்சல் எனக்கு கர்ண கடூரமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடி போய்விடலாமா என்று எண்ணுகிறேன். அப்படிச் செய்தால் குழப்பம் இன்னும் அதிகமாகி விடுமோ என்றும் பயமாயிருக்கிறது. மதுராந்தகரும் சிற்றரசர்களும் சூழ்ச்சி செய்து என்னையும் கொன்று விட்டார்கள் என்று ஜனங்கள் நம்பினாலும் நம்புவார்கள். அதனால் ஏற்படக் கூடிய விபரீதங்களை நினைத்தால் என் உள்ளம் திடுக்கிட்டு நடுங்குகிறது."
"ஆம், ஆம்! அம்மாதிரி ஒரு காலும் செய்துவிடாதே! அந்த எண்ணத்தையே விட்டுவிடு! ஜனங்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும். சக்கரவர்த்தியின் நெஞ்சு நிச்சயமாகப் பிளந்து போய்விடும். மந்தாகினி தேவியையும், கரிகாலனையும் நினைத்து நினைத்து அவர் துயரப்பட்டுக் கொண்டிருப்பது போதும்!" என்றாள் இளைய பிராட்டி.
"ஆகையினால்தான் நான் ஓடிப் போகத் தயங்குகிறேன். எப்படியாவது ஜனங்களுக்கும், வீரர்களுக்கும் நல்ல வார்த்தை சொல்லி மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்குப் பார்க்கிறேன். நான் பேசும் போதெல்லாம் ஜனங்களும் சாவதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்பால் திரும்பியதும் உடனே பழையபடி கோஷம் போடத் தொடங்கிவிடுகிறார்கள். நான் அவர்களுடைய மனத்தை மாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு இப்பால் வருகிறேன். உடனே திருக்கோவலூர்ப் பாட்டனும், கொடும்பாளூர் வேளானும் போய்ப் படை வீரர்களுடைய மனத்தை மாற்றி விடுகிறார்கள்! அக்கா! அவர்களைப் பற்றி உன்னிடம் சொல்லத்தான் வந்தேன். மலையமானையும் வேளாரையும் நீ அழைத்துப் பேச வேண்டும். நான் எது சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. நீ சொன்னால் ஒருவேளை கேட்பார்கள்..."
"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன், தம்பி! அவர்கள் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. வேறு ஏதேனும் உபாயத்தைத்தான் பார்க்கவேண்டும்.."
"அக்கா! வேளாரிடம் நீ ஒரு செய்தியைக் கூறியிருக்க மாட்டாய். அதைச் சொன்னால் அவர் ஒருவேளை எனக்குப் பட்டம் கட்டுவதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க மாட்டார்."
"அது என்ன, தம்பி?"
"உன் தோழி வானதி செய்திருக்கும் சபதத்தைப் பற்றிக் கூற வேண்டும். அவள் என்னோடு சிங்காதனத்தில் அமருவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறாள் அல்லவா? அதைப் பற்றிச் சொன்னால் பெரிய வேளாருக்கு எனக்குப் பட்டம் கட்டுவதில் அவ்வளவு சிரத்தை இல்லாமல் போய்விடும்!"
"தம்பி! அதை நான் அவரிடம் சொல்லவில்லையென்றா நினைத்தாய்? சொல்லியாகிவிட்டது. அதற்கு அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'ஒரு சிறு பெண்ணின் மூடத்தனத்துக்காக ஒரு பெரிய ராஜ்யத்தை பாழாக்கச் சொல்கிறீர்களா? வானதி இல்லாவிட்டால், இந்தப் பாரத தேசத்தில் நூறு இளவரசிகள் அருள்மொழிக்கு மாலையிடக் காத்திருக்கிறார்கள். சிங்காதனம் ஏறச் சொன்னாலும் ஏறுவார்கள். கழுமரத்தில் ஏறச் சொன்னால் கூட ஏறுவார்கள்!" என்று சேநாதிபதி கூறிவிட்டு வானதியை ஒரு கோபப் பார்வை பார்த்தார். அந்தப் பெண் நடுநடுங்கிப் போய்விட்டாள்!"
அருள்மொழிவர்மன் புன்னகை புரிந்து, "நல்லவேளையாய் அப்பொழுது மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிடவில்லையே!" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான்.
"வானதியை ஒரு காரியமாக அனுப்பியிருக்கிறேன்" என்றாள் இளைய பிராட்டி.
"அக்கா! நீயும் வானதியும் என் கட்சியில் உறுதியாக இருந்தால் ஒரு மாதிரி சமாளிக்கலாம். நாம் இருவரும் சக்கரவர்த்தியிடம் செல்வோம். சக்கரவர்த்தியின் கண்டிப்பான கட்டளைக்குத்தான் இந்தக் கிழவர்கள் இருவரும் கீழ்ப்படிவார்கள்..."
"அதற்கும், ஓர் இடையூறு இருக்கிறதே, தம்பி! செம்பியன் மாதேவி குறுக்கே நிற்கிறார்களே? நாம் சொல்வதற்கு விரோதமாக அவர் பிடிவாதமாகச் சொன்னால் நம் தந்தைத்தான் என்ன செய்வார்! அவருடைய மனதே பேதலித்துப் போனாலும் போய்விடும். ஆகையால் இது விஷயமாகச் சக்கரவர்த்தியைத் தொந்தரவு செய்யவும் எனக்குப் பயமாயிருக்கிறது."
"அப்படியானால் நாம் இருவரும் சேர்ந்து செம்பியன் மாதேவியைத் தான் பிரார்த்தனை செய்து கேட்டுக் கொள்ளவேண்டும். அவருடைய மனத்தை மாற்ற முயல வேண்டும். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று அவர் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் நாம் ஊகித்ததுதான். சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். மதுராந்தகரிடம் இன்றைக்குத்தான் அவர் உண்மையைக் கூறினார். 'நீ என் மகன் அல்ல' என்று சொன்னதும், நம் சித்தப்பாவின் முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும். களை சொட்டும் அவருடைய அழகிய முகம் கோர ராட்சதனின் முகம் போல மாறிவிட்டது. நல்லவேளையாக அந்தச் சமயம் நான் போய்ச் சேர்ந்தேன்..."
"அப்படியா? அப்புறம் என்ன நடந்தது?" என்றாள் குந்தவை.
"பாட்டியின் முன்னால் கைக்கூப்பி நின்று, 'அம்மா! மதுராந்தகர் தங்கள் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நானும் அறிவேன். அதனால் என்ன? தாங்கள் அருமையாக வளர்த்த புதல்வர் தங்கள் புதல்வரே அல்லவா? ஆகையால் அவர்தான் மகுடம் சூட்டிக் கொள்ளவேண்டும்' என்றேன்.."
"அதற்குப் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி என்ன பதில் கூறினார்?"
"அவர் பதில் கூறுவதற்கு முன்னால் திரும்பி வந்து விட்டேன்.
"தம்பி! மதுராந்தகர் செம்பியன் மாதேவியின் புதல்வர் இல்லாவிட்டாலும், வேறு வகையில் அவருக்குச் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை உண்டு என்று நீ சொல்லவில்லையா? அவரும் நம் தந்தையின் புதல்வர், உன் தமையன் என்று கூறவில்லையா?"
"சொல்லவில்லை, அக்கா!"
"ஏன் தம்பி! அதனால் நம் தந்தைக்குக் களங்கம் உண்டாகும் என்று அஞ்சினாயா? அல்லது பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினாயா?"
"இல்லை அக்கா! நீயும் நானும் இத்தனை நாளும் அதைப் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கை ஆதாரமற்றது என்று அறிந்தேன், அதனால்தான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...."
"அது எப்படி தம்பி?"
"ஆம், அக்கா! முதன்மந்திரி அநிருத்தருக்கு அந்தச் செய்தியெல்லாம் நன்றாய்த் தெரியும். நம் தந்தை ஈழத் தீவிலிருந்து திரும்பி வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுராந்தகனும் நந்தினியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்களாம். ஆகையால், அவர்கள் நம் உடன் பிறந்தவர்களாக இருக்க முடியாதல்லவா?" என்றான் அருள்மொழி.
குந்தவை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "அருள்மொழி! இது தெரிந்தும் நீ மதுராந்தகருக்குப் பட்டத்தைக் கொடுப்பதற்கு விரும்புகிறாயா?" என்று கேட்டாள்.
"ஆம், அக்கா! எப்படியும் மதுராந்தகர் மந்தாகினி தேவியின் வயிற்றில் பிறந்த புதல்வர். செம்பியன் மாதேவி எடுத்து வளர்த்த புதல்வர். எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை கிடையாது. உன் தோழி வானதிக்கும் சிங்காதனம் ஏறும் விருப்பம் இல்லை..."
"தம்பி! இராம கதையில் பரதர் தமக்குக் கிடைத்த இராஜ்யத்தை வேண்டாமென்று சொல்லி இராமரை அழைத்து வரப் போனார். குஹன் இதை அறிந்ததும் 'ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்' என்று கூறினானாம். 'ஆயிரம் பரதர்கள் உனக்கு இணையாக மாட்டார்கள்' என்று சோழ நாட்டு மக்கள் சொல்லப் போகிறார்கள்."
"பிற்பாடு அவர்கள் எது வேணுமானாலும் சொல்லட்டும். இச்சமயம் என்னை விட்டால் போதும் என்றிருக்கிறது அக்கா! கடைசியாக நான் ஒரு யுக்தி கண்டுபிடித்து மனதிற்குள் வைத்திருக்கிறேன். அதைப் பற்றி உன் அபிப்ராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்..."
"அது என்ன யுக்தி, தம்பி?"
"குடந்தைக்கு அருகில் பழுவேட்டரையர்கள் படை திரட்டிச் சேர்த்து வருகிறார்கள் என்பது தெரியும் அல்லவா?"
"ஆமாம்; அவர்களுடன் பல சிற்றரசர்களும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் அது மிகவும் சிறிய படை என்று கேள்விப்படுகிறேன். நம் பாட்டனாரும் வேளாரும் இங்கே வைத்திருக்கும் படையோடு போனால் மூன்றே முக்கால் நாழிகையில் அந்தப் படையை அழித்து விடுவோம் என்று சொல்கிறார்களே?"
"அப்படி ஒன்றும் நேராமலிருப்பதற்குத்தான் யுக்தி செய்திருக்கிறேன். ஒருவருக்கும் தெரியாமல் நான் மட்டும் ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு போய் பழுவேட்டரையர்களிடம் என்னை ஒப்புக் கொடுத்துவிடப் போகிறேன். அவர்கள் என்னைச் சிறைப்படுத்திவிடுவார்கள். அப்புறம் நம் பாட்டன் மலையமானும், சேநாதிபதி பெரிய வேளாரும் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா?"
குந்தவை மூக்கில் விரல் வைத்து அதிசயித்துவிட்டு, "அற்புதமான யுக்திதான். தம்பி! ஆனால் அதிலும் ஒரு சிறிய அபாயம் இருக்கிறது!" என்றாள்.
"அது என்ன, அக்கா?"
"நீ பழுவேட்டரையர்கள் திரட்டும் படையை அடைந்ததும், அந்தப் படையில் உள்ள வீரர்கள் என்ன செய்வார்கள், தெரியுமா? 'அருள்மொழிவர்மர் வாழ்க! பொன்னியின் செல்வருக்கே பட்டம்!' என்று கூச்சலிடத் தொடங்குவார்கள். உன்னைச் சிறை வைப்பதற்குப் பதிலாகப் பழுவேட்டரையர்களைப் பிடித்துச் சிறை வைத்தாலும் வைத்து விடுவார்கள்!"
அருள்மொழிவர்மர் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றார். "ஆமாம்; அந்த அபாயம் ஏற்படலாம் என்று எனக்குத் தெரியாமற் போயிற்று. நல்ல வேளையாகத் தாங்கள் எச்சரித்தீர்கள். இந்தத் தஞ்சைப்புரிக் கோட்டைக்குள் மாறு வேடம் பூண்டு வந்தது போல அங்கேயும் மாறு வேடம் புனைந்து போகிறேன்..."
"என்னதான் மாறு வேடம் பூண்டு போனாலும், எத்தனை நேரம் உண்மை வெளிப்படாதிருக்கும், தம்பி? ஒருவருக்குத் தெரிந்தால் போதுமே? ஒரு நாழிகைக்கெல்லாம் எல்லாருக்கும் தெரிந்துவிடும். அக்கம் பக்கத்திலுள்ள ஜனங்களும் வந்து கூடி விடுவார்களே!"
அருள்மொழியின் முகம் சுருங்கிற்று. "அக்கா, பின்னர் என்னதான் என்னைச் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த உலகத்தில் எதற்காக நான் பிறந்தேன்? பிறருக்குத் தொல்லை கொடுப்பதற்காகத்தானா? காவேரியில் நான் விழுந்து முழுகிய போதே இறந்து போயிருக்கக் கூடாதா?" என்றான்.
"தம்பி! யார் கண்டார்கள்? ஜோதிடர்களும் ரேகை சாஸ்திரங்களும் கூறியதெல்லாம் உண்மைதானோ, என்னமோ! நீ வேண்டாம் என்று தள்ளினாலும் இராஜ்ய லக்ஷ்மி உன்னை வந்து அடைவாள் போலிருக்கிறது. நீ பிறந்த வேளை அப்படி இருக்கிறது!"
"அக்கா! தாங்களும் நம் பாட்டன் மலையமானோடு சேர்ந்து கொண்டீர்கள்? தங்கள் மனமும் மாறிவிட்டதா?"
"பாட்டன் போதனையில் என் மனம் சலிக்கவில்லை தம்பி! ஆனால் அண்ணன் கரிகாலனுடைய ஓலையினால் கொஞ்சம் என் மனமும் மாறித்தான் இருக்கிறது. அவன் கண்ட கனவுகளையெல்லாம் நீ காரியத்தில் நிறைவேற்றுவாய் என்று எழுதியிருக்கிறான். அதைப் படித்ததும்..." என்று கூறியபோது குந்தவையின் கண்களில் கண்ணீர் ததும்பிக் குரலும் தழுதழுத்தது.
பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலனிடைய ஓலையை வாங்கிப் படித்தான். அவனுடைய கண்களிலேயிருந்தும் கண்ணீர் பொழிந்தது.
ஓலையை அவன் படித்து முடித்ததும் குந்தவை கூறினாள்: "தம்பி! நீ என்ன நினைத்துக் கொண்டாலும் சரிதான், என் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடுகிறேன். மதுராந்தகனும், நந்தினியும் நம் சோழ குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிந்து கொண்டதில் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்திருக்கிறது. சோழ குலத்தில் பிறக்காத ஒருவனைச் சோழ சிங்காதனம் ஏறச் செய்வதிலும், எனக்கு விருப்பம் இல்லை. செம்பியன் மாதேவியிடமும், மந்தாகினி தேவியிடமும் எனக்கு எவ்வளவு பக்தி இருந்தாலும், அவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க என்னால் முடியவில்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதை இனி ஒரு கணமும் என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது."
"அக்கா! அக்கா! இது என்ன சொல்கிறீர்? செம்பியன் மாதேவி முன்னாலும், அநிருத்தர் முன்னாலும் மதுராந்தகன் முன்னாலும் 'எனக்குப் பட்டம் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வந்தேன். ஆயிரமாயிரம் போர் வீரர்கள் முன்னாலும் மகாஜனங்களின் முன்னாலும் அவ்விதமே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது என் வார்த்தையை மீறச் சொல்கிறீர்களா?" என்று கேட்டான் அருள்மொழிவர்மன்.
"தம்பி! உனக்கும் எனக்கும் நம் குலதெய்வமான துர்க்கா பரமேசுவரிதான் வழி காட்ட வேண்டும். உனக்கு என்ன யோசனை சொல்லுவது என்று எனக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஆதித்த கரிகாலன் என் வார்த்தையைக் கேட்டிருந்தால், இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டே இராது! அந்த மகாவீரனுக்கு இந்தக் கதியா நேர்ந்திருக்க வேண்டும்?" என்று குந்தவை புலம்பினாள்.
"இந்த ஓலை தங்களுக்கு எப்படிக் கிடைத்தது, அக்கா? யார் கொண்டு வந்தார்கள்? எப்போது தங்கள் கைக்கு வந்தது? ஏன் முன்னாலேயே சொல்லவில்லை?" என்றார் அருள்மொழி.
"சற்று முன்னாலே தான் எனக்கு வந்தது, சம்புவரையரின் மகள் மணிமேகலை கொண்டு வந்து கொடுத்தாள்.."
"ஆம்; ஆம்; மணிமேகலையைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவளிடம் இந்த ஓலை எவ்விதம் வந்தது?"
"அவளே இருக்கிறாள் தம்பி! நீயே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்! அவள் பேச்சை எவ்வளவு தூரம் நம்புவது என்று எனக்கே தெரியவில்லை" என்றாள் இளைய பிராட்டி.
அருள்மொழிவர்மன் உள்ளே வந்தவுடன் மணிமேகலையை அவன் முன்னால் நிறுத்தி, வந்தியதேவனைப் பற்றிய பிரஸ்தாபிக்கச் சொல்லுவதென்று இளைய பிராட்டி தீர்மானித்திருந்தாள். இத்தனை சம்பாஷணைகளுக்கு மத்தியிலும் அவளுடைய உள்மனம் வந்தியத்தேவர் பாதாளச் சிறையில் இருப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவரைப் பற்றித் தானே பேச்சு எடுக்கக் குந்தவை விரும்பவில்லை. மணிமேகலையை அழைப்பதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததும், வானதியைக் கூவி அழைத்து, மணிமேகலையையும் அழைத்து வரும்படி கூறினாள்.
மணிமேகலை வரும்போதே கண்ணீர் ததும்பிய சோகமயமான முகத்துடன் வந்தாள். இதைப் பார்த்த பொன்னியின் செல்வன் அவள் துயரப்படுவதற்குக் காரணமிருக்கிறது என்று எண்ணினார்.
"தம்பி! இந்தப் பெண்தான் மணிமேகலை, ஓலையை இவள்தான் கொண்டு வந்தாள், இது எப்படி இவளிடம் வந்தது என்று நீயே கேட்டுக் கொள்!"
"சகோதரி எங்கள் தமையன் கடைசியாக எழுதிய ஓலையை நீ கொண்டு வந்து பத்திரமாக ஒப்புவித்தாய். இதற்காக உன்னிடம் நாங்கள் என்றைக்கும் நன்றி செலுத்துவோம்!" என்று மேலே அருள்மொழிவர்மன் தொடர்வதற்குள்ளே, மணிமேகலை திடீரென்று அவன் முன்னால் விழுந்து வணங்கினாள்.
"இளவரசே! பொன்னியின் செல்வ! தாங்கள் இப்போது சொன்ன வார்த்தை சத்தியமா? என்னிடம் தாங்கள் நன்றி செலுத்துவது உண்மையானால்.."
இவ்வாறு சொல்லிவிட்டு மேலே பேச முடியாமல் மணிமேகலை விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
"அக்கா! இது என்ன? இந்தப் பெண் எதற்காக இப்படி விம்மி அழுகிறாள்? ஒருவேளை இவளுடைய வீட்டில் நம் தமையன் இறக்க நேர்ந்ததே என்று வருந்துகிறாளா?"
"இல்லை, தம்பி! இவள் மனத்தில் இருப்பது வேறொரு காரியம். மணிமேகலை! என்னிடம் கூறியதை இளவரசரிடமும் சொல்லு!" என்று குந்தவைப் பிராட்டி அவளைத் தைரியப்படுத்தினாள்.
"ஐயா! தங்கள் தமையனைக் கொன்ற பாவி நான்தான். என்னைப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டு அவரை விடுதலை செய்யுங்கள்!" என்று அழுது கொண்டே கூறினாள்.
அருள்மொழிவர்மன் திகைப்புடன் குந்தவையைப் பார்த்து, "அக்கா! இவள் என்ன சொல்லுகிறாள்? இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?" என்று கேட்டார்.
"இவளுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை, தம்பி! ஆனால் சீக்கிரத்தில் வல்லத்து இளவரசரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்யாவிட்டால் இவளுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்!" என்றாள்.
"என்ன? என்ன? யார் பாதாளச் சிறையில் இருக்கிறது?" என்று வியப்புடன் கேட்டார் அருள்மொழி.
"ஈழ நாட்டுக்கு நான் ஓலை கொடுத்து அனுப்பிய வாணர் குல வீரரை அடியோடு மறந்துவிட்டாயா, தம்பி!"
நெடுங் கனவிலிருந்து அப்பொழுதுதான் விழித்து எழுந்து இவ்வுலக நினைவு வந்தவரைப் போல் அருள்மொழிவர்மன் ஒரு நிமிட நேரம் தோற்றமளித்தார்.
தஞ்சைக் கோட்டைக்குள் அவர் பிரவேசித்ததிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நடந்த சம்பவங்கள் அவருடைய கவனத்தை முழுதும் கவர்ந்திருந்தன. கரிகாலருடைய மரணச் செய்தி வந்த பிறகு, சோழ சிங்காசனத்தில் மதுராந்தகரை ஏறச் செய்யும் மார்க்கத்தைப் பற்றிச் சிந்திப்பதிலேயே அவருடைய உள்ளம் முழுவதும் ஈடுபட்டிருந்தது. வந்தியத்தேவனைப் பற்றி உண்மையிலேயே அவர் மறந்து விட்டிருந்தார். இப்போது அவன் பெயரைக் கேட்டதும் ஒரு துள்ளுத் துள்ளி, "யார்? என்னுடைய அருமை நண்பர் வந்தியத்தேவரா பாதாளச் சிறையில் இருக்கிறார். எதற்காக? யார் அவரைச் சிறையில் அடைத்தது?" என்று கேட்டார்.
மணிமகலை கூறிய விவரங்களைக் குந்தவை அவருக்கு எடுத்துக் கூறினாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த பொன்னியின் செல்வன், "அக்கா! என்னைப் போன்ற நன்றி கெட்டவன் யாருமே இருக்க முடியாது. வாணர் குலத்து வீரரைப் பற்றி நான் விசாரிக்காமலே இருந்து விட்டேன். அது என் குற்றந்தான்! அவரைப் பாதாளச் சிறையில் அடைக்கத் துணிந்தவர்கள் என்னை விடப் பெரிய குற்றவாளிகள். நம் தமையனிடம் அவருக்கு எவ்வளவு பக்தி உண்டு என்பதை நான் அறிவேன். கரிகாலரின் மரணத்துக்கு அவரைப் பொறுப்பாளியாக்கத் துணிந்தவர்கள் யார்? இது என்ன மூடத்தனம்? அவரைத் தப்புவிப்பதற்காக இந்தப் பெண் தன் பேரில் குற்றம் சுமத்திக் கொள்வது நமக்கெல்லாம் ஒரு பாடம் கற்பிப்பது போலிருக்கிறது. இந்தப் பெண்ணை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. மற்றக் காரியங்கள் அப்புறம் ஆகட்டும். இப்போதே பாதாளச் சிறைக்குச் சென்று வந்தியத்தேவரை விடுவித்துக் கொண்டு வருகிறேன். சம்புவரையர் மகளுக்கு நீ தேறுதல் கூறு!" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, விடுவிடென்று நடந்தார்.
அவர் வாசற்படியை அடைந்தபோது, அங்கே திடீரென்று திருக்கோவலூர் மலையமானும் கொடும்பாளூர் வேளாரும் தோன்றினார்கள். அவர்களுடைய தோற்றமே இளவரசரின் மனத்தில் ஒருவித ஐயத்தை உண்டு பண்ணியது. பெரிய வேளார் தம் கையில் கொண்டு வந்திருந்த வேலை வாசற்படியின் குறுக்கே வைத்து இளவரசரைத் தடுக்கும் பாவனையில் நின்றார். அவருக்குப் பின்னால் மலையமானும் கையில் பிடித்திருந்த கத்தியைக் கீழே ஊன்றிய வண்ணம் இளவரசர் மேலே போவதைத் தடுப்பதற்கு ஆயத்தமாக நின்றார்.
பொன்னியின் செல்வர் பெரும் வியப்புடனும் சிறிது கோபத்துடனும், "சேனாதிபதி! இது என்ன, என்னைக் கூடச் சிறைப்படுத்தப் போகிறீர்களா?" என்று கேட்டார்.
"இளவரசே! இப்போது பாதாளச் சிறைக்குப் போகாமல் தங்களைத் தடை செய்கிறோம். அவசியம் நேர்ந்தால் சிறைப்படுத்தவும் செய்வோம்!" என்றார் பூதி விக்கிரம கேசரி.
அவர் கூறியது உண்மையாகவா, வேடிக்கையாகவா என்று பொன்னியின் செல்வருக்கு விளங்கவில்லை. ஆனால் வேடிக்கையைப் பொறுத்துக் கொள்ளும் மனோ நிலையும் அச்சமயம் அவருக்கு இல்லை. ஆகையால் முன்னைவிடக் கோபமான குரலில், "எந்த அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய முன்வந்தீர்கள்?" என்றார்.
"தாங்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பாதாளச் சிறையில் உள்ளவனை விடுதலை செய்யப் போகிறீர்கள்?" என்றார் பெரிய வேளார்.
"சேனாதிபதி! எனக்கு அந்த அதிகாரம் இல்லையா? நான் யார் என்பதை மறந்து விட்டீர்களா? அல்லது தங்களைத் தாங்களே மறந்து விட்டீர்களா?"
"என்னை நான் மறக்கவும் இல்லை. தாங்கள் யார் என்பதை மறக்கவுமில்லை. நான் தஞ்சைக் கோட்டைக்கு இன்று தளபதி. ஆகையால் பாதாளச் சிறைக்குக் காவலன். தாங்கள் சக்கரவர்த்தியின் திருக்குமாரர், பொன்னியின் செல்வர். ஆயினும் தங்கள் தமையனைக் கொன்றதற்காகக் குற்றம்சாட்டிப் பாதாளச் சிறையில் வைக்கப்பட்டவனை விடுதலை செய்யத் தங்களுக்கு அதிகாரம் கிடையாது. சக்கரவர்த்திக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. அல்லது சக்கரவர்த்தியின் ஸ்தானத்தில் முடிசூட்டிக் கொள்ளப் போகிறவருக்கு அந்த அதிகாரம் உண்டு. தாங்களோ சோழ சிங்காதனத்தில் ஏறப்போவதில்லையென்று பறைசாற்றிக் கொண்டு வருகிறீர்கள். ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையின்றிப் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க முடியாது!" என்றார் கொடும்பாளூர்ப் பெரிய வேளாராகிய சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி.
"குழந்தாய்! வேளார் கூறியது உண்மையான வார்த்தை. சின்னப் பழுவேட்டரையன் ஓடிப்போனபடியால் பெரிய வேளாரைத் தஞ்சைக் கோட்டைத் தளபதியாகச் சக்கரவர்த்தி நியமித்திருக்கிறார். ஆகையால் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க உனக்கு அதிகாரம் இல்லை!" என்று மலையமான் ஆமோதித்தார்.
பொன்னியின் செல்வர், அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக நின்றார். மணிமேகலையின் விம்மல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.