Get it on Google Play
Download on the App Store

சகுனத் தடை

 

 

←அத்தியாயம் 58: கருத்திருமன் கதை

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: சகுனத் தடை

அத்தியாயம் 60: அமுதனின் கவலை→

 

 

 

 

 


581பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: சகுனத் தடைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 59[தொகு]
சகுனத் தடை


மரத்தடியில் ஒதுங்கி நின்ற படகைப் பார்த்ததும் வந்தியத்தேவன் அதிர்ஷ்ட தேவதை மறுபடியும் தன் பக்கம் வந்திருப்பதாக எண்ணி உற்சாகம் அடைந்தான். தனக்குப் படகோட்டத் தெரியாவிட்டாலும், கருத்திருமன் படகோட்டுவதையே தொழிலாகக் கொண்டவன். அவனுடைய உதவியுடன் படகைத் தள்ளிக் கொண்டு வடவாற்று நீரோட்டத்தோடு சென்றால், அந்த ஆற்று வெள்ளம் கோடிக்கரைக்குப் பாதி வழி வரையில் கொண்டு சேர்த்து விடும். 
"பார்த்தாயா, கருத்திருமா! இந்தப் படகு ஆற்றில் அமிழாமல் மிதந்து வந்து நமக்காகவே காத்திருக்கிறது. உன்னுடைய படகோட்டும் திறமையைக் கொஞ்சம் காட்டினாயானால், பொழுது விடிவதற்குள் பாதி தூரம் போய்விடலாம். அப்புறம் குதிரை மேல் வருகிறவர்கள் கூட நம்மைப் பிடிக்க முடியாது!" என்றான் வந்தியத்தேவன். 
கருத்திருமன் சிறிது சந்தேகக் கண்ணுடன் சுற்று முற்றும் பார்த்தான். மரத்துக்குப் பக்கத்தில் ஆற்றங்கரையில் மதிள் சுவரோரமாக மண்டி வளர்ந்திருந்த புதர்களுக்கு மத்தியில் ஏதோ அசைவது போலத் தோன்றியது. கருத்திருமன் ஒரு சிறிய கல்லைத் தூக்கிப் புதர்களுக்கு மத்தியில் எறிந்தான். அங்கிருந்து ஒரு பூனை துள்ளிப் பாய்ந்து வந்து படகில் ஏறிக் கொண்டது. 
வந்தியத்தேவன் சிரித்துக் கொண்டே "படகோட்டி! என்னை விடப் பெரிய தைரியசாலியா இருக்கிறாயே?" என்று சொல்லி இன்னொரு சிறிய கல்லைத் தூக்கிப் படகுக்குள் விட்டெறிந்தான். 
பூனை மறுபடி படகிலிருந்து வெளியே துள்ளிப் பாய்ந்து இவர்களை நோக்கி ஓடி வந்து இரண்டு பேருக்கும் இடையில் புகுந்து ஓடியது. 
இப்போது வந்தியத்தேவன் மிரண்டு இரண்டடி பின்னால் எடுத்து வைத்தான். "நீ ஒன்றும் என்னை விடத் தீரனாகத் தோன்றவில்லையே?" என்று ஏளனமாகக் கூறினான் கருத்திருமன். 
"எனக்குப் பூனை என்றால் பயம்; அது என் மேலே பட்டாலே, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு உண்டாகும். நல்லவேளை? அதுதான் போய்விட்டதே! வா, போகலாம்!" என்றான் வந்தியத்தேவன். 
"பூனை என் மேலே விழுந்தால் கூட எனக்குப் பயம் ஒன்றுமில்லை; ஆனால் குறுக்கே போனால்தான் பயம் சகுனத்தடை!" என்றான் கருத்திருமன். 
"சகுனமாவது, தடையாவது?" என்று சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன் கருத்திருமன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்ப் படகில் ஏறினான். 
கருத்திருமனும் படகின் ஒரு முனைக்குச் சென்று அதை மரங்களின் வேர்களிலிருந்து தள்ளிவிட முயன்றான். படகு சிறிது நகர்ந்ததோ, இல்லையோ, சடசடவென்று நாலு பேர் துள்ளிப் பாய்ந்து ஓடி வந்து கண்மூடித் திறக்கும் நேரத்தில் படகில் ஏறிக் கொண்டார்கள். அவர்களில் இரண்டு பேர் வந்தியத்தேவன் மீது பாய்ந்து அவனைப் படகுக்குள்ளே தள்ளிப் படகின் குறுக்குச் சட்டங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். மற்ற இருவரும் வேல் பிடித்த கையுடன் கருத்திருமன் அருகில் சென்று இருபுறமும் காவலாக நின்றார்கள். 
வந்த நால்வரில் தலைவனாகத் தோன்றியவன் பாதாளச் சிறைவாசலிலிருந்து தங்களைத் தொடர்ந்து வந்த பருமனான மனிதன் தான் என்பதை வந்தியத்தேவன் கண்டுகொண்டான். அவன் அதற்குள்ளே படகிலே வந்து சுரங்க வழியின் வாசலருகில் காத்திருந்ததை எண்ணி வியந்தான். அவன் சாதாரண காவலன் அல்ல. மிகக் கைதேர்ந்த ஒற்றனாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். அவன் யாராயிருக்கும், எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பேச்சுக் குரல் காதில் விழுந்தது. 
கருத்திருமனைப் பார்த்து அக்காவலன், "அப்பனே! இத்தனை வருஷம் சிறையில் கழித்து விட்டு வெளியே வந்திருக்கிறாய். உடனே இந்தத் துன்மதியாளன் வார்த்தையைக் கேட்டு ஏன் ஓடப் பார்த்தாய்? போனால் போகட்டும். உன்னை மறுபடியும் கட்டிப் போட மனமில்லை. நான் சொல்கிறதைக் கேட்டு அதன்படி செய்தாயானால் உனக்குத் தீங்கு ஒன்றும் நேராது!" என்றான். 
ஓடக்காரனும் "அப்படியே, ஐயா! முதன்மந்திரி எனக்கு விடுதலை அளிக்க ஆள் அனுப்பினார். ஆனால் இந்த மூடன் பேச்சைக் கேட்டு நான் கெட்டுப் போனேன். இனி நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன். என்னைப் பாதாளச் சிறைக்கு மட்டும் மறுபடி அனுப்பி விடாதீர்கள்!" என்றான். 
"ஆமாம்; ஆமாம்! முதன்மந்திரி உன்னிடம் சில விவரங்கள் கேட்க விரும்புகிறார். அவற்றை நீ உண்மையாகச் சொல்லி விட்டால், உன்னைப் பாதாளச் சிறைக்கு அனுப்பமாட்டார். வேண்டிய பொன்னும், மணியும், பொருளும் பரிசு கொடுத்து அனுப்புவார். நீங்கள் எங்கே போவதென்று புறப்பட்டீர்கள்?" 
"ஈழ நாட்டுக்குப் போவதென்று புறப்பட்டோம்." 
"அழகாயிருக்கிறது, முதன்மந்திரியை ஏமாற்றி விட்டு வேளாரின் காவலை மீறி விட்டு, அவ்வளவு தூரம் போய் விடலாம் என்று எண்ணினீர்களா? ஆனால் இந்த முரட்டு வாலிபன் அம்மாதிரி யோசனை சொல்லக் கூடியவன் தான். முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் காவலுக்குத் தப்பி ஓடியவன் அல்லவா? போகட்டும். இப்போது படகை ஆற்று நீர் ஓட்டத்துக்கு எதிராகச் செலுத்த வேண்டும். என்னுடன் வந்தவர்களில் ஒருவனுக்குத்தான் படகு செலுத்தத் தெரியும். அவனும் கற்றுக்குட்டி, வரும்போது நீரோட்டத்தோடு வந்தபடியால், தட்டுத் தடுமாறி வந்துவிட்டோ ம். இப்போது நீ கொஞ்சம் உன் கை வரிசையைக் காட்டவேண்டும். அக்கரைக்குச் சமீபமாகப் போய் அங்கிருந்து வடக்குக் கோட்டை வாசலை நோக்கிப் படகைச் செலுத்து, பார்க்கலாம்!" 
"அக்கரை சென்று அங்கிருந்து நடந்துபோய் விடலாமே, ஐயா! நீரோட்டம் வெகு வேகமாகச் செல்கிறது. எதிர்முகமாக அதிக தூரம் படகு செலுத்துவது கஷ்டமாயிற்றே!" 
"அக்கரையில் இறங்கினால், இந்த முரட்டு வாலிபன் மறுபடியும் ஏதாவது தகராறு செய்வான். ஆகையால் ஆற்றோடு தான் மேலே போக வேண்டும்!" என்றான் காவலர் தலைவன். 
படகை கருத்திருமகனும், மற்றொருவனும் தள்ளத் தொடங்கினார்கள். காவலர் தலைவன் வந்தியத்தேவனின் அருகில் வந்து "அப்பனே! உன் வேலைத்தனத்தை மறுபடியும் காட்டப் பார்க்காதே!" என்றான். 
"ஐயா! என்னைப் பற்றி உமக்கு ரொம்பத் தெரியும் போலிருக்கிறதே!" என்றான் வந்தியத்தேவன். 
"ஏன் தெரியாது? வைத்தியர் மகனைச் சிறையிலே உனக்குப் பதிலாக அடைத்துவிட்டு, நீ வெளியிலே வந்ததைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேனே! அப்புறம் எங்களை ஏமாற்றி விட்டு ஓடிப் போகப் பார்த்தாய் நீ!" 
வந்தியத்தேவன் மிக ஆச்சரியப்பட்டவனைப் போல "ஐயா! என்னைவிடக் கெட்டிக்காரர் தாங்கள்! பாதாளச் சிறையில் நடந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை என்று நினைத்தேன்!" என்றான். 
"தம்பி! எங்கள் முதன்மந்திரியின் கண்களும், காதுகளும் எட்டாத இடம் சோழ சாம்ராஜ்யத்தில் எங்கும் இல்லை. அவை ஈழ நாட்டிலும் உண்டு; காஞ்சியிலும் உண்டு; கடம்பூர் மாளிகையிலும் உண்டு; பாதாளச் சிறையிலும் உண்டு. அந்த வைத்தியர் மகன் பினாகபாணி சுத்த மூடன் என்பது முதன்மந்திரிக்கு தெரியும். அதனாலே தான், அவன் பின்னால் என்னையும் அனுப்பி வைத்தார்!" 
"நான் இந்த வழியாக வெளியேறுவேன் என்பதும் முதன்மந்திரிக்குத் தெரிந்திருந்தது போலும். அவருடைய கண்களும் காதுகளும் அதிசயமானவைதான். அப்படியானால், நான் நிரபராதி என்பதும், என்னைப் பாதாளச் சிறையில் அடைத்தது தவறு என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்?" 
"அது முதன்மந்திரியின் பொறுப்பு அல்ல. நீ குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது சக்கரவர்த்தியின் பொறுப்பு. நீ பாதாளச் சிறையிலிருந்து தப்ப முயன்றதற்குத் தண்டனை கொடுப்பது கொடும்பாளூர் பெரிய வேளாரின் பொறுப்பு" என்றான் காவலான். 
"ஐயா! என்னை இப்போது எங்கே கொண்டு போகிறீர்கள்?" 
"முதலில் கொடும்பாளூர் வேளாரிடம் கொண்டு போகிறேன் அவர் வடக்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்." 
"எனக்காகவா பெரிய வேளார் காத்துக் கொண்டிருக்கிறார்?" 
"ஆகா! உன் கர்வத்தைப் பார்! தென் திசை மாதண்ட நாயகரும், சோழ நாட்டுக் குறுநில மன்னர்களில் முதல் மரியாதைக்குரிய மன்னரும், சோழ குலத்தின் பரம்பரைத் துணைவரும், பாண்டிய குலத்தை வேரோடு களைந்தவரும், ஈழம் கொண்ட வீராதி வீரருமான கொடும்பாளூர் வேளார், சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி உனக்காகக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தாயா?" 
"பின்னே யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்?" 
"பழுவேட்டரையர்களையும், மற்றும் திருப்புறம்பயத்தில் கூடியிருந்த சிற்றரசர்களையும் அழைத்துக்கொண்டு பார்த்திபேந்திரன் வருகிறான்..." 
"பெரிய பழுவேட்டரையர் கூடவா?" 
"ஆமாம்; அவர் கூடத்தான், இளவரசர் கரிகாலரின் மரணத்தைப் பற்றி அவருக்கு உண்மை தெரியுமாம். அவர் வந்த பிறகு சக்கரவர்த்தியின் முன்னிலையில் விசாரணை நடைபெறும். நீ குற்றவாளி அல்லவென்றால், அப்போது அதை நிரூபிக்க வேண்டும்." 
வந்தியத்தேவன் இதைக் கேட்டுப் பெரும் கவலையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர்களும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து தன் பேரிலேதான் குற்றத்தைச் சுமத்துவார்கள். கடவுளே! அந்தக் குற்றச்சாட்டுடனே சக்கரவர்த்தியையும், இளவரசர் அருள்மொழிவர்மரையும் எப்படி நிமிர்ந்து பார்ப்பது? என்ன சாட்சியத்தைக் காட்டி நான் குற்றவாளி அல்லவென்று நிரூபிக்க முடியும்? 
"ஐயா! நான் தங்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லையே? என்னைத் தப்பிப் போகும்படி விட்டு விடுங்கள்! உண்மையில் நான் குற்றவாளி அல்ல. காலமான இளவரசருக்கு அத்தியந்த நண்பனாயிருந்தவன். சந்தர்ப்பவசத்தினால் இத்தகைய பயங்கரக் குற்றம் சாட்டப்பட்டேன். தாங்கள் முதன்மந்திரியின் சேவகர். சிறையிலிருந்த பைத்தியக்காரனைக் கொண்டு வரும்படி தானே தங்களுக்கு முதன்மந்திரி கட்டளையிட்டார்? இவனை அழைத்துப் போங்கள், என்னை விட்டு விடுங்கள்! உங்களுக்குப் புண்ணியம் உண்டு!" என்று வந்தியத்தேவன் இரக்கமாகக் கேட்டான். 
"உன்னை விட்டு விட்டால் எனக்கு என்ன தருவாய்?" என்றான் காவலன். 
"பின்னால் சமயம் வரும்போது, பதிலுக்குப் பதில் உதவி செய்வேன்." 
"அப்படிச் சமயம் வரப்போவதுமில்லை; வந்தாலும் உன் உதவி எனக்குத் தேவையும் இல்லை. இப்போது உடனே என்ன தருவாய் என்று சொல்லு!" 
வந்தியத்தேவனுக்கு அவனுடைய அரைக்கச்சில் கட்டிக் கொண்டிருந்த பொற்காசுகளின் நினைவு வந்தது. "உம்முடைய இரண்டு கைகளும் நிறையும்படி பொற்காசுகள் தருவேன்!" 
"ஆகா! அப்படியா? பொற்காசுகளா? எங்கே காண்பி!" என்றான் காவலன். 
"கொஞ்சம் என் கட்டுக்களைத் தளர்த்தி விடு! அரைக்கச்சிலிருக்கிறது; எடுத்துக் காட்டுகிறேன்!" என்றான் வந்தியத்தேவன். 
"மறுபடி உன் வேலைத்தனத்தை மட்டும் காட்டிவிடாதே!" என்று சொல்லிக் கொண்டே காவலன் குனிந்து வந்தியத்தேவனுடைய கட்டுக்களைச் சிறிது தளர்த்தி விட்டான். 
வந்தியத்தேவன் அந்தக் காவலரின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே அரைக்கச்சை அவிழ்த்துப் பொற்காசுகளை எடுத்து கொடுத்தான்.
அக்காசுகளைக் காவலன் கை நிறைய வைத்துக் கொண்டு, "தம்பி! இக்காசுகளைப் பழுவேட்டரையரின் பொக்கிஷத்திலிருந்து எடுத்து வந்தாயா? அல்லது வார்ப்படச் சாலையிலிருந்தே அடித்துக் கொண்டு வந்தாயா? உன் பேரில் இப்போது மூன்று குற்றங்கள் ஆயின. கொலைக்குற்றம் ஒன்று, சிறையிலிருந்து தப்பிய குற்றம் ஒன்று, இராஜ்ய பொக்கிஷத்திலிருந்து திருடிய குற்றம் ஒன்று, ஆக மூன்று குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்துக்காவும் உன்னைத் தனித் தனியே கழுவில் ஏற்றலாம்" என்றான். 
"ஐயா! சோழ ராஜ்யத்துக்கு நான் எத்தனையோ சேவைகள் செய்திருக்கிறேன், பல முறை தூது சென்றேன். என் உயிரைக் கொடுத்துக் கரிகாலரின் உயிரைக் காப்பாற்ற முயன்றேன். இந்தச் சில பொற்காசுகளை என் சேவைக்குக் கூலியாகப் பெற எனக்கு உரிமை உண்டு. அதுவும் பிரயாண வசதிக்காகவே எடுத்துக் கொண்டேன்" என்றான் வந்தியத்தேவன். 
"இதையெல்லாம் நீ உன்னை விசாரணை செய்யும்போது சொல்லிக்கொள்!" என்றான் காவலன். 
"அப்படியானால், நீர் என்னைக் கட்டவிழ்த்து விடப் போவதில்லையா?" என்று கேட்டான் வந்தியத்தேவன். 
"கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், திருமாலைக் காட்டிலும் பரமசிவன் பெரிய தெய்வம் என்று ஏற்பட்டாலும், நான் சில பொற்காசுகளுக்காக இராஜ்யத் துரோகம் செய்யமாட்டேன்" என்றான் காவலன். 
கருத்திருமன் என்ன செய்கிறான் என்று வந்தியத்தேவன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டான். அவன் தன்னை ஆர்வத்துடன் நோக்கிக் கொண்டு சமிக்ஞையை எதிர் பார்த்திருந்தவனாகத் தோன்றியதைக் கவனித்தான். உடனே அவ்வீர வாலிபன் ஏற்கனவே தளர்த்திவிட்டிருந்த கட்டுக்களை இன்னும் சிறிது தளர்த்திக் கொண்டு சட்டென்று அந்தக் காவலனுடைய முகத்திலிருந்த மீசையையும் தலைக் கட்டையும் பிடித்து இழுத்தான். அவை அவன் கையோடு வந்துவிட்டன; சாக்ஷாத் ஆழ்வார்க்கடியான் காட்சி அளித்தான். 
"வேஷதாரி வைஷ்ணவனே! நீ தானா?" என்றான் வந்தியத்தேவன். 
ஆழ்வார்க்கடியான் தனது மீசையையும் தலைப்பாகையையும் காப்பாற்றிக் கொள்ள முயன்ற போது அவன் கையிலிருந்த பொற்காசுகள் சிதறி விழுந்தன. வந்தியத்தேவன் ஒரு நொடியில் தன் கட்டுக்களிலிருந்து விடுபட்டு ஆழ்வார்க்கடியானைக் கீழே தள்ளினான். சற்றுமுன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றைப் போட்டு ஆழ்வார்க்கடியானைப் படகின் குறுக்குச் சட்டங்களோடு சேர்த்துக் கட்டினான். அவன் அரையில் தரித்திருந்த வாளை அதன் உறையிலிருந்து இழுத்து எடுத்துக் கையில் ஏந்திக் கொண்டான். 
வந்தியத்தேவன் இச்செயல்களில் ஈடுபட்டிருக்கையில் கருத்திருமன் சும்மா இருக்கவில்லை. அவன் அருகில் நின்ற காவலனைத் திடீரென்று தாக்கி ஆற்று வெள்ளத்தில் வீழ்த்தினான். அவன் நதி வெள்ளத்தில் போராடலானான். மற்ற இருவரில் ஒருவன் படகோட்டியை நோக்கியும் இன்னொருவன் வந்தியத்தேவனிடத்திலும் நெருங்கினார்கள். இருவரும் பயத்துடன் தயங்கித் தயங்கியே வந்தார்கள். வந்தியத்தேவன் அவனை நோக்கி வாளை வீசிக் கொண்டு முன்னால் சென்றதும் அவ்வீரன் தானாகவே வெள்ளத்தில் குதித்து விட்டான். இன்னொருவனை இதற்குள் கருத்திருமன் தன் கையிலிருந்த துடுப்பினால் ஓங்கி அடித்துப் படகில் வீழ்த்தினான். 
இருவரும் சேர்ந்து அவனையும் குறுக்குச் சட்டத்தில் கட்டிப் போட்டார்கள். படகு, நதி வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது. வெள்ளத்தில் விழுந்த இருவரும் அக்கரையை நோக்கி நீந்திச் செல்ல முயன்று கொண்டிருந்தார்கள். 
வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான் அருகில் சென்று "வீர வைஷ்ணவ சிகாமணியே! இப்போது என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான். 
"என்னத்தைச் சொல்வது? எல்லாம் நாராயண மூர்த்தியின் செயல், கட்டுகிறவனும் அவன்; கட்டப்படுகிறவனும் அவன். தள்ளுகிறவனும் அவன்; தள்ளப்படுகிறவனும் அவன்! தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்; உன் கை வாளிலும் உள்ளான்; என் தோளிலும் உள்ளான்!" 
"அப்படியானால், இந்த ஆற்று வெள்ளத்திலும் உள்ளான்! உன்னைக் கட்டித் தூக்கி இந்த வெள்ளத்தில் போட்டு விடலாம் அல்லவா?" 
"பிரஹலாதனைக் கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலில் போட்டார்கள். அவனை நாராயணமூர்த்தி காப்பாற்றிக் கரை சேர்க்கவில்லையா? அப்படிப் பகவான் வந்து என்னைக் கரைசேர்க்க முடியாவிட்டால், சாக்ஷாத் வைகுண்டத்துக்கு நேரே அழைத்துக் கொள்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
இதைக் கேட்ட வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதோ பார்! நீ சில சமயம் என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். என்ன எண்ணத்துடன் காப்பாற்றினாயோ, தெரியாது! எப்படியிருந்தாலும், உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. ஆயினும், உன் உயிரைக் காப்பாற்றுவதாயிருந்தால், எனக்கு ஓர் உதவி நீ செய்ய வேண்டும்!" என்றான். 
"அப்பனே! பரோபகாரம் இதம் சரீரம் என்ற கொள்கை உடையவன் நான். என்ன உதவி உனக்குத் தேவையோ, கேள்! கட்டை அவிழ்த்துவிட்டால் செய்கிறேன்" என்றான் திருமலை. 
"உன் சரீரத்தினால் உதவி எனக்கு இப்போது தேவையில்லை. எனக்கும் இவனுக்கும் இரண்டு குதிரைகள் வேண்டும். எதற்காக என்று கேட்கிறாயா? தப்பிச் செல்லுவதற்குத்தான்! அதற்கு ஏதேனும் வழி சொன்னால், உன்னை இப்படியே படகில் மிதக்க விட்டு விட்டு நாங்கள் கரையில் இறங்கி விடுகிறோம். படகு கரையில் ஒதுங்குமிடத்தில் நீ உன் சாமர்த்தியத்தை உபயோகித்துக் கொண்டு பிழைத்துக்கொள்!" 
"என்னால் முடிந்த உதவியைக் கேட்கிறாயே, அதைப் பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்." 
"குதிரைகள் கிடைக்க எனக்கு வழி சொல்ல முடியுமா?" 
"முடியும்! உங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு குதிரைகள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். வாணி அம்மை வீடு உனக்குத் தெரியும் அல்லவா?" 
"எந்த வாணி அம்மை?" 
"தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்துக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்யும் வாணி அம்மை பிறவி ஊமை, சேந்தன் அமுதனின் தாயார்." 
இவ்வாறு ஆழ்வார்க்கடியான் சொல்லிக் கொண்டிருந்த போது கருத்திருமன் அருகில் நெருங்கி ஆவலாகக் கேட்டான். 
"தெரியும்; அந்த வீடு எனக்குத் தெரியும் நந்தவனத்தில் இருக்கிறது." 
"அங்கே இரண்டு குதிரைகள் இந்தக் கணத்தில் இருக்கின்றன." 
"எப்படி?" 
"ஒன்று, என் குதிரை, வாணி அம்மையின் குடிசைக்கு அருகில் அதைக் கட்டிப் போட்டுவிட்டு இந்தப் படகில் ஏறி வந்தேன். இன்னொன்று, சேந்தன் அமுதன் ஏறி வந்த குதிரை. பாவம்! அமுதன் குதிரை ஏறி வழக்கமில்லாதவன். வழியில் அந்த முரட்டுக் குதிரை அவனைக் கீழே தள்ளிவிட்டது. முன்னமே சுரத்தினால் பலவீனமடைந்திருந்தான். கீழே விழுந்த அதிர்ச்சியால் மறுபடியும் படுத்துவிட்டான். பிழைத்தால் புனர்ஜன்மம் என்று சொல்கிறார்கள். ஆகையால் குதிரை இனி அவனுக்குத் தேவையிராது." 
வந்தியத்தேவன் மிக்க கவலையுடன், "அவனைக் கவனிக்க அங்கே யார் இருக்கிறார்கள்?" என்றான். 
"அவனுடைய தாயாரும், பூங்குழலியும் இருக்கிறார்கள்!" என்றான் திருமலை. 
கருத்திருமன் திடீர் என்று அச்சம்பாஷணையில் பிரவேசித்து "எந்தத் தாயார்? என்று கேட்டான். 
இருவரும் ஒருகணம் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். "என்ன கேட்டாய்?" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"சேந்தன் அமுதன் உயிருக்கு அபாயம் என்னும் செய்தி பெரிய பிராட்டி செம்பியன் மாதேவிக்குத் தெரியுமா என்று கேட்டேன்." 
"ஆமாம்; செம்பியன் மாதேவிதான் அவர்களுக்குப் புஷ்ப கைங்கரியத்துக்கு மானியம் கொடுத்து ஆதரித்து வருகிறார். ஆனால் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது கரிகாலர் மரணத்தினால் ஏற்பட்ட துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்களே? அமுதனை எங்கே கவனிக்கப் போகிறார்கள்?" 
வந்தியத்தேவன் கருத்திருமனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்? சேந்தன் அமுதனையும் அவன் அன்னையையும் போய்ப் பார்த்துவிட்டுப் போவோமா?" என்றான். 
கருத்திருமன் தலையை அசைத்துத் தன் சம்மதத்தை தெரிவித்தான். "அப்படியானால், படகைக் கரையை நோக்கிச் செலுத்து!" என்று வந்தியத்தேவன் கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, " வைஷ்ணவனே! இதில் ஏதாவது உன் சூழ்ச்சி தந்திரத்தைக் காண்பித்திருந்தாயோ, பார்த்துக்கொள்! என்னுடைய கதி எப்படியானாலும் உன்னைக் கைலாயத்துக்கு அனுப்பிவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்!" என்றான். 
"வேண்டாம், தம்பி! வேண்டாம்! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நித்திய சூரிகள் புடைசூழ ஸ்ரீமந் நாராயண மூர்த்தி மகாலக்ஷ்மி சகிதமாக வீற்றிருக்கும் வைகுண்டத்துக்கு என்னை அனுப்பி வை!" என்றான் வைஷ்ணவன்.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!